நேர்காணல்



வேலைக்கான நேர்காணலுக்கு புறப்பட்டவனை நிறுத்தி, ‘‘அப்பா படத்துக்கு முன்னால் வணங்கிவிட்டு புறப்படு. அப்பா நிச்சயம் வேலை வாங்கித் தருவார்’’ என்றாள் அம்மா. மனதிற்குள் சிரித்துக்கொண்டான் முகுந்தன்.

பிழைக்கத்தெரியாத மனிதர். ‘நேர்மை... நேர்மை...’ என்றே வாழ்நாளைக் கடத்தியவர். செல்வாக்குள்ள மனிதர்கள் அறிமுகம் இருந்தாலும், அவனுக்காக அவர்களிடம் சிபாரிசு செய்வதை விரும்பாதவர். உயிரோடு இருக்கும்போதே வேலை வாங்கித் தராத அவரா இறந்த பின்னர் வாங்கித் தரப் போகிறார்? அம்மா சொன்னதற்காக அப்பா படத்தின் முன் வணங்கினான்.

நேர்காணல் நடத்திய முதலாளி தமிழ்ப்பற்று மிக்கவர் போல! ‘‘நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன். அதற்கு பதில் சொன்னால் வேலை. இன்றைக்கு தமிழ் மாதம் என்ன? தேதி என்ன? இதுதான் கேள்வி’’ என்றார்.அனைவரும் விழித்தார்கள். முகுந்தனுக்கு ஞாபகம் வந்தது. நேற்றுதான் அப்பாவுக்கு திதி. ஆவணி மாதம் 7ம் தேதி என்று சொன்னது ஞாபகம் வந்தது. அப்படியானால் இன்றைக்கு ஆவணி 8ம் தேதி. சொன்னான்.

‘‘நல்லது...’’ என்ற முதலாளி, தன் உதவியாளரை அழைத்து, ‘‘இந்த தம்பிக்கு வேலைக்கான உத்தரவைக் கொடுங்கள்’’ என்றார்.அம்மா சொன்னபடி அப்பாதான் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இல்லாவிட்டால் இந்த தமிழ் மாதமும் தேதியும் எப்படித் தெரியும்? மனதிற்குள் தந்தையை வணங்கினான் முகுந்தன்.     
                                   

முகவை ராஜா