கடன்



அலுவலகம் முடிந்து களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார் பாபு. ‘‘அப்பா! காலேஜ் விட்டு வரும்போது, உங்க நண்பர் பாலுவைப் பார்த்தேன்’’ என்று குண்டைத் தூக்கிப் போட்டான் குணா.‘‘ஐயையோ! அவரை ஏண்டா பார்த்தே?’’ - அலறினார் பாபு.‘‘எதிர்பாராம பஸ் ஸ்டாப்பில் இருந்தார். ஏதோ கடன் விஷயமா நேரில் பேசணும்னு சொன்னார்.’’

‘‘போச்சு! போச்சு! ஏற்கனவே வாங்கின கடனையே திருப்பித் தரல. மறுபடியும் கேட்டு வந்தா என்ன பண்றது?’’ - யோசனையில் ஆழ்ந்தார் பாபு.காபியுடன் வந்த அவர் மனைவி மல்லிகா, ‘‘ஏங்க! உங்க பால்ய சிநேகிதர் பலராம் போன் பண்ணார்’’ என்றாள்.‘‘என்னவாம்?’’
‘‘ஏதோ செலவு, கடன்னு ஆரம்பிச்சார். சரியா கேக்கலைன்னு நடிச்சு கட் பண்ணிட்டேன்!’’ என்றாள்.

மகள் பூர்ணா வந்து, ‘‘அப்பா! சொல்ல மறந்துட்டேன். அம்மா காலையில் கடைக்குப் போயிருந்தப்ப ராமசாமின்னு ஒருத்தர் உங்களைத் தேடி வந்தார். பக்கத்து ஊராம். கடன் விஷயமா பார்க்கணும்னு சொன்னார். நாளைக்கு வர்றதா ெசால்லிட்டுப் போனார்’’ என்றாள்.

‘‘ஒண்ணாம் தேதி வந்தா போதும்... ஒவ்வொருத்தரா கடன் கேட்டு நச்சரிக்கிறாங்க. அப்படி என்னதான் செலவு இருக்குமோ? மாசம் பொறந்தா அவங்களும்தானே சம்பளம் வாங்குறாங்க?  நான் வாங்கின கடனைத் திருப்பித் தராமலா போயிடுவேன்?்’’  - சலித்துக்கொண்டார் பாபு.                   

எஸ்.குமாரகிருஷ்ணன்