ஐந்தும் மூன்றும் ஒன்பது



மர்மத் தொடர் 41

‘‘ஜோசப்பிடம் நான், ‘ஒரு அமானுஷ்ய அனுபவத்திற்கு என்னை ஆளாக்க முடியுமா?’ என்று கேட்ட கேள்விக்கு அவர் எந்த பதிலையும் கூறவில்லை. மௌனமாக சிரித்தார். பின்னர் அதற்கொரு விளக்கம் அளிக்கத் தொடங்கினார்.

‘அமானுஷ்ய அனுபவங்கள் விண்ணிலிருந்து விழும் நட்சத்திரம் போன்றவை. நாம் பார்க்கும்போது நட்சத்திரம் விழாது. அது விழும்போது பார்க்க முடிந்தால் அதுவே அமானுஷ்யம்’ என்றவர், ‘எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். அந்த அனுபவம் சித்திக்காவிட்டாலும் வேறு நல்ல அனுபவங்கள் நமக்கு சித்திக்கலாம். அதற்காக நாம் ‘காலாலங்கிரி’ எனும் மலைக்குச் செல்ல வேண்டும்’ என்றார்.

‘காலாலங்கிரியா..? புதிய பெயராக, கேள்விப்படாத ஒன்றாக உள்ளதே’ என்றேன்.‘ஆமாம்... ஆய்வு ஆய்வு எனத் திரியும் எனக்கே இப்போதுதான் தெரியும்... சதுரகிரி மலைச் சருக்கத்தில் எவ்வளவோ மலைகள் - அதில் ஒன்றுக்கு இந்தப் பெயர். ஆனாலும் இந்தப் பெயர் சிலருக்கே தெரியும். மற்றவர்கள் வரையில் அந்த மலைக்கு பதினெட்டு பேர் மலை என்பதாகும். சுருக்கமாய் ‘பதினெட்டார் மலை’ என்பார்கள்’ என்றார்.‘பதினெட்டு என்று வந்தாலே அங்கே ஒரு போராட்டம் வந்து விடுமே?’ என்றேன் நான்.

‘உண்மைதான்... பதினெட்டு என்கிற எண் ஒரு முழு முயற்சிக்கான எண். குறிப்பாக சன்னியாசிகளுக்கும், சித்தர்களுக்குமான எண்... ஆசையோடு வாழ்கிற நம் போன்றவர்களுக்கெல்லாம் பதினாறுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என்றார் ஜோசப்.‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துகிறார்களே... அந்தப் பதினாறா?’ என்று கேட்டேன் நான்.‘ஆமாம் கணபதி...

நமக்குப் பதினாறு பேறுகள்! கல்வி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், புத்ர பாக்யம், பொன், நிலம், தைரியம், வீரம், புகழ், எண்ணியதை அடையும் சித்தி, பதவி, சொல்வன்மை, கருணை, நெல், அழகு’ - இப்படி இந்தப் பதினாறைச் சொல்வார்கள். இவை அவ்வளவும் இருந்தால், ஒரு மனிதன் தான் எடுத்த மனுஷப் பிறப்பை நன்றாக அனுபவிக்க முடியும். இந்தப் பதினாறோடு ஞானம், வைராக்கியம் என இன்னும் இரண்டு சேரும்போது அது பதினெட்டு ஆகிவிடுகிறது. பதினாறு நமக்கு... பதினெட்டு சன்னியாசிகளுக்கு... அவர்கள் இந்தப் பதினாறையும் அப்படியே கடவுளுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு ஞானம், வைராக்கியத்தோடு வாழ்ந்து முக்தி அடைபவர்கள். அதனால்தான் பதினெட்டில் இல்லாத ஒரு ஆர்வம் பதினாறுக்கு...’ என்றார்.

‘அப்படி என்றால், பதினெட்டார் மலை எனப்படும் காலாலங்கிரிக்குள் பதினாறும் இருக்கிறது, பதினெட்டும் இருக்கிறது எனப் பொருளா?’ என்று அடுத்து கேட்ட என்னை ஜோசப் மிக வியப்போடு பார்த்துவிட்டுச் சொன்னார்.‘ஒரு கோணத்தில் அப்படித்தான்... ஆனால் காலாலங்கிரி மலை கணக்குக்குப் பெயர் பெற்ற ஒரு மலை. அங்கே எல்லாமே கணக்குதான். அங்கே எழுத்துக்களை விட எண்களுக்கே முக்கியத்துவம். இன்றைய மக்கள்தொகை எவ்வளவு என்பதிலிருந்து, இந்த வருடம் பெய்யும் மழை அளவு, நெல் அளவு எவ்வளவு என்பது வரை அங்கே கணக்கு உள்ளது.

அங்கே ஒரு சூரிய கடிகாரம் உள்ளது. ஒரு கல் சக்கரத்தின் ேமல் சூரியக் கதிர்கள் பட்டு விழும் நிழல்தான் கடிகார முள். அதைக் கொண்டே நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு விடலாம். ஒரு மிகப் பெரிய அறிவுப் பரம்பரை அங்கே வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறது. அதன் மிச்சம் மீதியாக இன்னமும் சிலர் உள்ளனர். அங்கே குருநாதர்களின் அடிகளை ஒட்டி நடந்தே அறிவையும் ஞானத்தையும் பெற வேண்டும்.

எனவே, அங்குள்ளவர்களின் பெயரின் முடிவில் ‘அடிகள்’ என்ற வார்த்தை இடம் பெறும். அடுத்து, அவர்கள் பெரும்பாலும் சித்த நடைமுறை கொண்டவர்களாய் இருப்பதால் ஒன்று குருவின் பெயரை வைத்துக்கொள்வர்; இல்லாவிட்டால் காரணப் பெயரைக் கொண்டிருப்பர். அதிகாலை பிறந்தவர் என்றால் பிரம்ம அடிகள், பெளர்ணமியன்று பிறந்தவர் எனில் பூர்ண சந்திர அடிகள், இப்படி...’இப்படி ஜோசப் சந்திரன் காலாலங்கிரி பற்றிச் சொல்லவும் கஞ்சமலையும் அதன் பொன்னும் எனக்குள் பின்னே சென்று விட, காலாலங்கிரியும் அதன் கணக்கும் என்னுள் நிமிர்ந்து நின்றன!’’

- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...இருளில் நின்ற அந்த உருவம், உட்புறமாய் எட்டிப் பார்க்க வேண்டி வாசல் கதவு வரை சென்றது. சாத்தியிருந்த கதவின் சாவித் துவாரம் வழியாக உள்ளே நடப்பதை பார்க்கத் தொடங்கியது.உள்ளே...‘‘அய்யா... வெளிய நடக்கற விஷயத்தை என்னால அனுமானிக்கவே முடியல. பெரிய மர்மமா இருக்கு. அந்த சுகுமார் எங்க போயிருப்பான்னு தெரியல. ஒருவேளை காலைல வந்து பாத்துக்கலாம்னு முடிவு செய்து போயிருப்பானோ?’’
‘‘இருக்கலாம்... நீ படுப்பா! தூங்கினாதான் நல்லா யோசிச்சு செயல்பட முடியும். தூக்க கலக்கம் தப்பா சிந்திக்க வச்சுடும். அதுலயும் காலப் பலகணியைத் தேடுற விஷயம் ரொம்ப நுட்பமானது. நாம கவனமா செயல்படணும்!’’

‘‘உண்மைதான்... ஆனா மனசு அடங்கினாதானே தூக்கம் வர்றதுக்கு?’’‘‘அடக்குப்பா! உள்ளங்கைல விரல் நுனிகளை மெல்ல பிடிச்சு விடு. காற்றை நல்லா இழுத்து மூச்சு விடு. தூக்கம் வரும்!’’‘‘இது என்ன அக்குபங்ச்சர் முறையா?’’‘‘கொஞ்சம் அப்படித்தான்...’’‘‘எல்லா டாபிக்லயும் உங்களுக்கு நல்ல அறிவு இருக்கு. ஆனா ஓட்டு வீட்ல அழுக்கு வேட்டியும் சட்டையுமா நீங்க இருக்கறதுதான் ஏன்னு புரியல...’’

‘‘படுத்துக்கிட்டே பேசு... நீ என்ன சொல்ல வர்றே? கோடிக்கணக்குல சம்பாதிச்சு ஆடம்பரமா வாழற வாழ்க்கைதான் உன் வரை வெற்றிகரமான வாழ்வா?’’
‘‘ஆமாம்யா... கிடைச்சிருக்கற வாழ்க்கைங்கற இந்த வாய்ப்பை நல்லா அனுபவிக்கணும்னா, பணம் அதுக்குப் பெரிய தேவையா இருக்கே?’’
‘‘தப்புப்பா! பணம் நிறைய இருக்கற எல்லாரும் சந்தோஷமா இருக்கறதா நீ நினைக்கறது பெரிய தப்பு. மனுஷ மனசு ரொம்ப விசித்திரமானது. சந்தோஷத்தை அனுபவிக்க ‘தைரியம், தெளிவு, பிராப்தம்’ங்கற மூணுதான் ரொம்ப முக்கியம். இது ஒரு தினக்கூலிக்காரன் கிட்ட இருந்தாகூட போதும். அவன் சந்தோஷமா இருப்பான். நானும் சந்தோஷமானவன்தான்...

ஒரு சின்ன விஷயம் சொல்றேன்... கேட்டுக்கிட்டே தூங்கு. ஒரு கோடீஸ்வரன் இருந்தார் - அவர்கிட்ட ஒரு கார் டிரைவர் இருந்தார். இந்த கார் டிரைவருக்கு மாசம் பத்தாயிரம் ரூபா சம்பளம். திடீர்னு ஒரு நாள் அந்தக் கோடீஸ்வரர் ‘உனக்கு இனி மாசம் இருபதாயிரம் சம்பளம்’னார். அவன் சந்தோஷத்துல அப்படியே திக்குமுக்காடிட்டான். இரண்டு மாச சம்பளம் ஒரு மாசம் கிடைச்சா சந்தோஷமாதானே இருக்கும்!

அதே சமயம் அந்தக் கோடீஸ்வரர், தன் தொழில்ல அந்த வருஷம் நூறு கோடி ரூபாய் லாபம் எதிர்பார்த்தார். ஆனா, தொண்ணூறு கோடிதான் கிடைச்சது. தொண்ணூறு கோடி கிடைச்சதுக்காக அவர் சந்தோஷப்படலை... பத்து கோடி கிடைக்காமப் போச்சேன்னு வருத்தப்பட்டார். வெறும் பத்தாயிரம் கூடக் கிடைச்ச காரணத்துக்காக சந்தோஷப்பட்டவன் இங்கு கொடுத்து வச்சவனா? இல்ல, பத்து கோடி குறைஞ்சு போனதுக்காக வருந்தினவர் கொடுத்து வெச்சவரா? யாரு?’’
வள்ளுவர் கேட்க, வர்ஷன் ‘‘கார் டிரைவர்தான்யா...’’ என்றான்.

‘‘அப்ப, இங்க சந்தோஷத்தை பணத்தோட அளவு தீர்மானிக்குதா... இல்லை, பாக்கற பார்வை தீர்மானிக்குதா?’’‘‘பார்வைதான்...’’‘‘பார்வைக்குத் தேவை தெளிவு... தெளிவுக்குத் தேவை தைரியம்... இந்த இரண்டுக்கும் தேவை பிராப்தம். அதாவது, நமக்கு கிடைக்கணும்ங்கற விதி!’’‘‘உங்ககூட பேசிக்கிட்டிருந்தா நிறைய விஷயம் தெளிவாகும் போலத் தெரியுது!’’ என்று கொட்டாவி விட்டான்.

‘‘தூக்கம் வந்துடுச்சி. படு... கார் வெளியவே நிக்கட்டும். நாம பின்வழியா போயிடுவோம். அப்புறமா போன் பண்ணி காரை உன் வீட்ல யாரையாவது வந்து எடுத்துக்கிட்டு போகச் சொல்லிடு. நாம இடைக்கழிநாடு நோக்கிப் போற விஷயம் நம்ப நாலு பேரைத் தவிர யாருக்கும் தெரியக் கூடாது. இப்ப அதுதான் முக்கியம்...’’ என்ற வள்ளுவரும் கண்களை மூடினார். வெளியே சாவித் துவாரம் வழியா கேட்டுக் கொண்டிருந்த உருவத்திடம் பெரிய அளவில் அதிர்ச்சி.
அப்போது, ‘‘யாருப்பா அது கதவுகிட்ட..?’’ என்று ஒரு கேள்வி. அது உள்ளே வள்ளுவர், வர்ஷன் காதிலும் விழுந்தது.

வெளியே தெருவில் இரவுக் காவலுக்குச் செல்லும் ஊர்க் காவல்காரன் ஒருவன் குரல் அது. அடுத்த நொடி அந்த உருவம் தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்தது.
‘‘டேய்! நில்லுடா... நில்லுடா...’’ என்று காவல்காரன் கத்துவதும் கேட்டது. வள்ளுவர் வேகமானார். எழுந்து வந்து கதவைத் திறந்தார். தெருவில் கையில் ஒரு தடியுடன் காவல்காரனின் ஓட்டம் தெரிந்தது.

வள்ளுவரைத் தொடர்ந்து வர்ஷனும் வெளியில் வர, காவல்காரன் ஓடிவிட்டுத் திரும்பி வந்தான்.‘‘என்ன குமாரசாமி... யார் அது?’’‘‘யாருன்னு தெரியல ஜோசியரே... உங்க வீட்டு வாசப்படிகிட்ட நின்னு சாவித் துவாரம் வழியா உள்ள பாத்துக்கிட்டு இருந்துச்சு ஒரு உருவம். எனக்கு பக்குன்னு ஆகிப்போச்சு. ‘யாருப்பா அது’ன்னு கேட்கவும் ஓட ஆரம்பிச்சிட்டான். கார் வேற வெளிய நிக்கவும் கார்காரனா இருக்குமோன்னு நினைச்சேன்!’’காவல்காரன் சொன்னது வள்ளுவரைக் கூர்மையாக்கியது.

‘‘வர்ஷன்... அந்த சுகுமாராதான் இருக்கணும். நாம பேசினதை கேட்டிருப்பான்னு நினைக்கறேன். நாம இடைக்கழி நாடு போகப் போற விஷயத்தைக் கேட்டிருந்தா, அவன் நேரா அங்க வந்துடுவான். ஒண்ணு சொல்றேன்... இனி யாரையும் திசை திருப்பற வேலையெல்லாம் செய்ய வேண்டாம். நாம நேர் வழில நம்ம சௌகர்யப்படி போவோம். தொடர்ந்து வர்றவங்க விதிப்படி என்ன நடக்கணுமோ, அது நடக்கட்டும்!’’ என வள்ளுவர் சொல்லும்போதே அந்த இரவு வேளையில் சிலர் தெருவில் ஓடி வருவது தெரிந்தது.

அவர்கள் தெருவில் நின்றபடி பேசிக் கொண்டிருந்த காவல்காரனைப் பார்த்ததும், ‘‘குமாரசாமி! நீ இங்க இருக்கியா... அங்க ரயில்வே ட்ராக்ல ஒருத்தன் அடிபட்டு செத்துட்டாம்பா. உன்கிட்ட போன் இருந்தா முதல்ல சொல்லு. நாங்க போன் பண்ணா நாளைக்கு எங்க நம்பரை வச்சு நாயா அலைய விடுவாங்க. அதான் உன்னைத் தேடி வந்தோம்!’’ என்றனர்.

‘‘அது யார்னு தெரியலையா?’’‘‘வயசுப் பையன்... போன் பேசிக்கிட்டே ஓடி வந்தான்! வண்டி வர்றத கவனிக்காம தண்டவாளத்தைத் தாண்டவும், அடிபட்டுட்டான். இருட்டுல எதுவும் தெளிவா தெரியலப்பா...’’- அவர்கள் சொல்லவும் டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு ஓடினான் வர்ஷன். வள்ளுவரும் உடன் ஓட, காவல்காரனும் ஓடினான்.

ரயில்வே ட்ராக் அருகே அவர்கள் சென்ற நொடிகளில் நாகர்கோயில் ஸ்பெஷல் ட்ரெயினின் அசுரப் பாய்ச்சல்! இருபத்தி நாலு கேரேஜ் இரும்பு வீடுகளும் கடந்து முடிய, டார்ச் லைட் வெளிச்சத்தில் நசுங்கிக் கிடந்த உருவத்தை நெருங்கிச் சென்று பார்த்தபோது வர்ஷனின் இதயம் ஒரு நொடி தீக்குளித்தது போலானது.

சுகுமார்தான் சின்னாபின்னமாகிக் கிடந்தான்! சற்று தூரத்தில் அவன் கைவசமிருந்து தெறித்து விழுந்திருந்த செல்போன் எந்த சேதமுமின்றி கிடக்க, அதன் திரையில் வெளிச்சம் தோன்றி வர்ஷனை நெருங்கச் செய்தது. சைலன்ட் மோடில் இருந்த அதனிடம் அழைப்பு. திரையில் ‘சாவ்லா’ என்னும் பெயர். எடுத்த வர்ஷன், பெருமூச்சோடு ஆன் செய்து காதைக் கொடுத்தான்.‘‘சுகுமார்... ஆர் யூ ஹியரிங் மை வாய்ஸ்...’’ - என்று மறுபுறம் கேள்வி.

‘‘லேட்டர் ஐ வில் கால் யூ...’’ என்று வேகமாய் சொன்னவன், செல்லை அணைத்தான். பத்திரமாக தன் பாக்கெட்டில் அதைப் போட்டுக்கொண்டான். நிச்சயம் தன் குரலை அந்த நான்கு சொற்களை வைத்து அந்த சாவ்லா ‘இது வேறு ஆள்’ என்று நினைக்க வழியில்லை என்று கருதியபடியே கடந்து வள்ளுவர் அருகில் வந்தான்.
காவல்காரன் அப்போதுதான் வந்து சேர்ந்தவனாக, ‘‘டார்ச்லைட்டை கொடு தம்பி’’ என்று வாங்கிக்கொண்டு உடம்பு கிடந்த இடம் நோக்கிச் சென்றான்.

வள்ளுவர் மட்டும் வர்ஷனிடம், ‘‘தம்பி... நமக்கு இனி எந்தப் பிரச்னையுமில்ல. நம்மை யாராலயும் ஃபாலோ பண்ண முடியாது. காலப் பலகணியை நம்மைத் தவிர யாராலயும் நெருங்கவும் முடியாது. வா, நாம போவோம்...’’ - என்றார் மிக தைரியமான குரலில்!வாட்ச்மேன் திரும்பி வந்தவனாய், ‘‘இவன்தான் ஓடினவன். இப்படி இந்த ராத்திரியில இங்க அடிபட்டு சாகணும்ங்கற இவன் விதிய நினைச்சாதான் ஜோசியரே ரொம்ப வருத்தமா இருக்கு’’ என்றபடியே தன்
செல்போனில் போலீஸைத் தொடர்புகொண்டான்.

‘‘அய்யா! நான் திரிசூலம் பக்கமா காமராஜ் நகர்ல இருந்து பேசறேங்க. நான் காவல்கார குமாரசாமிதாங்க பேசறேன்...’’ என்று அவன் பேசத் தொடங்க... வர்ஷனும், வள்ளுவரும் வீடு நோக்கி நடந்தனர். வர்ஷன் மெல்ல செல்போனை எடுத்து, ‘‘அய்யா... இதுல இருக்குய்யா நம்ம ஃபாலோ பண்றவங்க யாருங்கற விபரம். அவன் கைல இருந்த போன்தான் இது...’’ என்றான்.

‘‘இதை வச்சு என்ன பண்ணப் போறே தம்பி?’’‘‘இதுல இருக்கற நம்பரை வச்சு யார் அவங்க, அவங்க அட்ரஸ்னு எல்லாம் தெரிஞ்சுக்கலாம். உள்ளே அவன் மெயிலைத் திறந்தா பல தகவல்கள் தெரிய வரலாம்!’’‘‘அதுக்கு பாஸ்வேர்ட் தெரிய வேண்டாமா?’’‘‘முதல் தடவை திறக்கத்தான் தெரியணும். ஒரு தடவை திறந்துட்டா அப்புறம் தேவையில்லை!’’ - என்றபடியே மெயில் பாக்ஸுக்கு சென்று திறந்தான். மெயில் ஆங்கிலத்தில் இருந்தது.

‘‘தம்பி... அதை அப்புறம் பாக்கலாம். நாம இப்பவே கிளம்பறது நல்லது. போலீஸ் வந்ததும் இங்க நம்மைத் தேடி வந்தா, தேவையில்லாத கால விரயம் ஏற்படலாம்!’’
‘‘நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். இந்த செல்போன்தான் ஒரு வகைல நாம போற பாதையைக் காட்டிக் கொடுக்கற கருவி. அதுவே இப்ப நம்ம கைல! இந்த தேடல்ல சுகுமார் அடுத்த பலி... பாவம்! நீங்க சொன்ன மாதிரி நமக்கு மட்டும்தான் காலப் பலகணியைத் தேட அனுமதி கிடைச்ச மாதிரி நான் ஃபீல் பண்றேன்!’’ என்றபடியே வீட்டிற்குள் நுழைந்தான் வர்ஷன். அடுத்த பத்தாவது நிமிடம் அவர்கள் புறப்பட்டுவிட்டனர்.

மறுநாள்!இடைக்கழி நாட்டு மையப்பகுதி.நேரம், மதியம் பன்னிரண்டு மணி. காரில் இருந்து இறங்கிய வள்ளுவர், ப்ரியா, வர்ஷன் மூவரும் நாலாப்புறமும் பார்த்தனர். வர்ஷன் கையில் திசைகாட்டி... அதன் காந்த முள் துல்லியமாக வடக்கைக் காட்ட, அதைக் கொண்டு கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகள் தெளிவாகிட, வடக்குக்கு வலப்பக்க வாட்டில் மிகச்சரியாக நூறு டிகிரியில் ஒரு பாதை!

‘‘டாக்டர்... உங்களோடது பக்க விளைவுகள் இல்லாத ட்ரீட்மென்ட்னு எப்படிச் சொல்றீங்க?’’
‘‘இதுவரை என்கிட்ட ட்ரீட்மென்ட்  எடுத்தவங்க யாரும் என் பக்கத்துல இப்ப இல்லையே?!’’

‘‘தலைவர் மேடைப் பேச்சுல ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்னு எப்படிச் சொல்றே?’’
‘‘அவர் மேல வீசப்பட்ட செருப்பு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல வந்ததுன்னு துல்லியமா சொல்றாரே!’’

பதினெட்டு என்கிற எண் ஒரு முழு முயற்சிக்கான எண். குறிப்பாக சன்னியாசிகளுக்கும், சித்தர்களுக்குமான எண்...

‘‘ஹோட்டல்ல சாப்பிடப் போனப்ப தலைவர் மானத்தை வாங்கிட்டாரா..?’’‘‘ஆமா! வெயிட்டர் மெனு கார்டு கொண்டு வந்து கொடுத்ததும், ‘உன்னை எனக்கு முன்ன பின்ன தெரியாது... உன் கல்யாணப் பத்திரிகையை எதுக்கு எனக்கு தர்றே?’ன்னு கேட்டாரு!’’

- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்