இது ஓய்வுபெற்றோர் கிராமம்!



ஓய்வுக்காலத்தில் யாரையும் சார்ந்திருக்க நேராத அளவுக்கு பணம் இருந்துவிட்டால் போதும்... முதுமையை நிம்மதியாகக் கடந்து விடலாம். ஆனால், உற்சாகமாக நாட்களைக் கழிக்க முடியுமா? ‘‘முடியும்’’ என்கிறார்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் ‘தி வில்லேஜஸ்’ சமூகத்தில் வசிப்பவர்கள்.

‘அமெரிக்காவின் மிக வேகமாக வளர்ந்துவரும் நகரம்’ என்ற பெருமையைப் பிடித்திருக்கும் இடம் இது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 8 ஆயிரம் பேர் வசித்த இந்த நகரின் இப்போதைய மக்கள்தொகை, 1 லட்சத்து 14 ஆயிரம். மனித வாழ்க்கையின் விநோதங்களை தரிசிக்க நினைப்பவர்கள் இங்கு போகலாம்.

முதியோர் இல்லங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஊரே மொத்தமாக முதியோர் இல்லமாக இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான், ‘தி வில்லேஜஸ்’. அமெரிக்காவின் முக்கியமான ரியல் எஸ்டேட் தொழிலதிபர், கேரி மோர்ஸ். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் வாங்கிப் போட்டு, ‘நகருக்கு மிக அருகில்’ என விளம்பரம் செய்து, தபால் மூலம் மனைகளை விற்பனை செய்துவந்தார்.

அரசு இந்த தபால் முறை விற்பனையைத் தடை செய்ததும், தொழில் படுத்துவிட்டது. புதுமையாக ஏதாவது செய்து தன் நிலங்களை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் அவர். அப்போது அவர் இதை விநோதமான ரிட்டயர்மென்ட் கம்யூனிட்டியாக மாற்றினார். இங்கு வீடுகளின் விலை சுமார் 1 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாய் வரை! இங்கு வீடு வாங்க வேண்டும் என்றால், வீட்டில் யாராவது ஒருவருக்கு 55 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். முதியோருக்கான குடியிருப்பு என்பதால், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இங்கு வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ‘‘தாத்தாவைப் பார்க்கணும்’’, ‘‘பாட்டியிடம் பேசணும்’’ என வந்தால், ஆண்டில் 30 நாட்கள் மட்டும் அனுமதி பெற்றுத் தங்கலாம்.

செயற்கையாக உருவாக்கிய ஏரியின் கரையில் அழகழகாக அணிவகுத்து நிற்கும் வீடுகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கிறது. வசதிகள் என்று பார்த்தால் ஒரு பெரிய பட்டியலே நீள்கிறது. தினம் தினம் கோல்ஃப் விளையாடலாம். மற்ற விளையாட்டு வசதிகள், கேளிக்கைகள் எதற்கும் குறைவில்லை. உணவு, மருத்துவ வசதி என அனைத்தும் செய்து தரப்படுகிறது. ‘‘நாங்கள் பணிபுரிந்த நாட்களைவிட இப்போதுதான் பிஸியாக இருக்கிறோம். எங்கள் உறவுகளோடு இருந்ததைவிட இங்கு உற்சாகமாக உணர்கிறோம்’’ என பலரும் சொல்கிறார்கள்.

ஆனால் ‘முதியவர்கள் இப்படி ஒதுக்குப்புறமான ஒரு நகரத்தில் தனியாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டியவர்களா?’ என்ற கேள்வியைப் பலரும் எழுப்புகிறார்கள். அதுமட்டுமில்லை... ‘‘இது ஒரு அழகிய திறந்தவெளி சிறைச்சாலை’’ எனவும் பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இங்கு தெருக்கள், தண்ணீர் வசதி, பொது இடங்கள் என எல்லாமே இந்த நகரை உருவாக்கிய கேரி மோர்ஸ் குடும்பத்துக்குச் சொந்தம்.

அரசாங்கத்துக்கு இங்கே வேலை இல்லை. ஊருக்குள் வரும் ஒரே செய்தித்தாளும் மோர்ஸ் நடத்துவதுதான். ஒரே ரேடியோவையும் அவரே நடத்துகிறார். குடியிருப்புகளில் பல கட்டுப்பாடுகளும் உண்டு. ‘‘வெளியுலகம் தெரியாமல் முதியோர்கள் பலரும் வாழ்கிறார்கள். வெறும் கேளிக்கைகளும் விளையாட்டும் மட்டுமே வாழ்க்கையாகிவிடுமா?’’ எனக் கேட்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

ஆனால், ‘‘முதுமையைக் காரணம் காட்டி எங்களை உதாசீனப்படுத்தும் உறவுகளை நாங்கள் ஏன் சீராட்ட வேண்டும்? ஓய்வுக்குப் பிறகும் எங்களுக்கு வசந்த காலம் இருக்கிறது என்பதை இந்த வாழ்க்கை உணர்த்துகிறது’’ என்கிறார்கள் இங்கிருக்கும் பலரும். நம் ஊரிலும் இப்போது முதியோருக்கான தனிக் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இதைப் பெரிய அளவில் செய்து உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது தி வில்லேஜஸ்.

19 வயதுக்கு உட்பட்டவர்கள் இங்கு வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்

- அகஸ்டஸ்