உடையும் எலும்புகள்... உடையாத மன உறுதி!



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு... கணிதத்தில் 98, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 100 என ஹெவியாக ஸ்கோர் செய்ததில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 481. பிளஸ் 2வில் வணிகக் கணக்கியலில் 200, கணக்குப் பதிவியலில் 198, மொத்த மதிப்பெண் 1128. தற்போது சி.ஏ படிப்பு. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

இந்த மதிப்பெண்களை எடுத்த ராஜாராமன்தான் விசேஷம். தான் தேர்வெழுதிய பேனாவை கொஞ்சம் அழுத்தமாய் பிடித்து எழுதினால் கூட அவரது எலும்புகள் உடைந்துவிடும். அதுதான் அவருக்கான சோதனை. அதைத் தாண்டித்தான் அவர் சாதனைகளை எட்டிப் பிடித்திருக்கிறார்.சென்னை, பெரியார் நகர் 16வது தெருவில், இலக்கம் டி 19 என்ற எண்ணுள்ள வீடுதான் ராஜாராமனின் தற்போதைய  உலகம். வயது 18 என்று முகம்தான் சொல்கிறது. ராஜாராமனின் தாயார் ராஜேஸ்வரி அவரை ஒரு குழந்தை போலவே இப்பொழுதும் கவனித்துக் கொள்கிறார்.

அப்படித்தான் கவனித்தாக வேண்டும். ஒரு வங்கி அன்போடு கொடுத்த ரிமோட் வீல் சேரின் உதவியுடன் நகரும் ராஜாராமன், மெல்ல தனது கட்டிலை நோக்கி வீல் சேரை இயக்குகிறார். கட்டிலை அடைந்ததும் வீல் சேர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து, படுக்கைக்கு சமமாக்கி, மெல்ல கட்டிலுக்கு மாறி புன்னகையுடன் நம்மை எதிர்கொள்கிறார்.

‘‘புதுசா என்னைப் பார்க்கற வங்களுக்கு வேணா இது கஷ்டமா இருக்கலாம். நான் பிறந்ததுல இருந்தே இதை அனுபவிக்கறதால எனக்குப் பழகிப் போச்சு. என்னைப் பார்த்து யாரும் ‘உச்’ கொட்டறதும் எனக்குப் பிடிக்காது’’ என வார்த்தையில் தன்னம்பிக்கை காட்டும் ராஜாராமன், ‘ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா’ என்னும் எலும்புக் குறைபாடுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

சின்ன அதிர்வைக்கூட தாங்க முடியாத அளவுக்கு வலிமையற்ற எலும்புகள்தான் இவரது பிரச்னை. இந்த எலும்புகளில் வளர்ச்சியும் இருக்காது. மரபுக் காரணங்களால் இரண்டாயிரம் பேரில் ஒருவருக்கு இந்த பிரச்னை வரக்கூடும் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் இதற்கு மருந்தோ, தீர்வோ இப்போதைக்கு இல்லை. எலும்புகள் உடைந்தால் கட்டுப்போட வேண்டியதுதான். வேகமாய் தும்மினால் கூட சில சமயம் எலும்புகள் உடைந்துவிடும்.

‘‘பிறவியிலேயே இவனுக்கு இந்தப் பிரச்னை இருக்குன்னு குழந்தையிலயே டாக்டர் கண்டுபிடிச்சு சொல்லிட்டார். ஆரம்பத்துல இந்தப் பிரச்னையோட வீரியம் எங்களுக்குத் தெரியலை. டாக்டர் சொன்னபடி ஒரு பூவைக் கையாளுற மாதிரிதான் இவனை நாங்க வளர்த்தோம். குழந்தை புரண்டு படுக்கும்போதுகூட எலும்பு உடைஞ்சிடும். ‘வீல்’னு அழுவான். உடைந்த பகுதி உடனே வீங்கிடும்.

எந்த நேரமா இருந்தாலும், டாக்டர்கிட்ட அழைச்சிக்கிட்டு ஓடுவோம். கட்டுப் போடுவாங்க. சரியாகும். எவ்வளவு கவனமா இருந்தாலும் எலும்பு உடையிறதைத் தவிர்க்க முடியாது. குழந்தை அழறதைப் பார்க்க முடியாம எங்க வீடே கண்ணீர் விடும். அதனாலயே இவனை நான் கண்ணும் கருத்துமா கவனிக்க ஆரம்பிச்சேன். இதை சரி செய்யணும்ங்கற தீவிரத்துல எவ்வளவோ மருத்துவம் பார்த்தோம். எதுலயும் சரியான பலன்கள் கிடைக்காததால, கடைசியா இப்ப இயற்கை வைத்தியம், மூலிகை மருத்துவம்னு சிகிச்சை கொடுத்துக்கிட்டிருக்கோம்.

சின்ன வயசுல வீட்டிலேயே இவனுக்கு நான் பாடம் சொல்லிக் கொடுத்தேன். நல்லா கவனிப்பான். சொல்றதை கற்பூரம் மாதிரி பிடிச்சுப்பான். இவன் இருக்கற நிலைமைல எப்படி பள்ளிக்கூடம் அனுப்பறதுன்னு 7 வயசு வரைக்கும் ஸ்கூல்ல சேர்க்கல. ஆனால், இவன் சூட்டிகையா பேசுறதைப் பார்த்துட்டு அக்கம்பக்கம் இருக்கறவங்க எல்லாம் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லி வற்புறுத்தினாங்க.

குழந்தைக்கு எலும்பு உடையும் பிரச்னை இருக்கு. அதனால  இவனை கவனமாய் பார்த்துக்க ஸ்கூல்ல அவன் கூடவே நானும்  இருக்க வேண்டிவரும். இதுக்கு எந்த பள்ளிக்கூட நிர்வாகமும் அனுமதிக்கல. கடைசியா சேக்ரட் ஹார்ட் ஸ்கூல்ல கிரேஸ் ராஜசேகர்னு ஒரு மேடம்தான் முதன்முதலா நம்பிக்கையும் அனுமதியும் கொடுத்தாங்க. இவனோட வயதைக் கவனத்துல  வச்சி,  அங்க நேரடியா இரண்டாம் வகுப்புலயே அட்மிஷன் போட்டாங்க. இவனுக்காக சிறப்பு கவனம் எடுத்துக்கிட்டாங்க. நானும் டெய்லி ஸ்கூல் போவேன்!’’ என்கிற அம்மாவை இடைமறித்துத் தொடர்கிறார் ராஜாராமன்.

‘‘அம்மா தினமும் கிளாஸ் ரூமுக்கு வெளிய உட்கார்ந்து ஜன்னல் வழியா என்னைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஈவ்னிங் எனக்கு பாடம் சொல்லித் தர்றதுக்காக அவங்களும் நோட்ஸ் எடுத்துப்பாங்க. எனக்கு என்ன வேணும்னு என் முகத்தைப் பார்த்தே கவனிச்சு, தண்ணி குடுக்கறதுல இருந்து ரெஸ்ட் ரூம் அழைச்சிட்டுப் போறது வரைக்கும் பார்த்துப் பார்த்து செய்வாங்க. இன்னைக்கும் செய்யறாங்க.

என் லைஃப்ல ஆட்டோ டிரைவர் அங்கிள்கள் எல்லாருக்கும்தான் ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும். அம்மாவால தனியா என்னைத் தூக்க முடியாது. ஸ்கூல் பேக்லாம்  கையில இருக்கும். அப்ப வழக்கமா வர்ற ஆட்டோ டிரைவர்ங்கதான்  தினமும் கிளாஸ் ரூம் வரைக்கும் என்னைத் தூக்கிக்கிட்டுப் போய் உட்கார வைப்பாங்க. என்னை எப்படிக் கையாளணும்னு தெரிஞ்சுக்கிட்டு பக்குவமா தூக்கிக்கிட்டுப் போவாங்க.

சேக்ரட் ஹார்ட் ஸ்கூல்ல ஐந்தாவது வரைக்கும்தான். அதுக்குப் பிறகு குலபதி பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் கை கொடுக்க, பிளஸ் 2 முடிச்சேன். எனக்காக அம்மா 11 வருஷம் தினமும் ஸ்கூலுக்கு வந்திருக்காங்க. அம்மா என்கூடவே இருந்ததால  தாத்தாவும் பாட்டியும் வீட்டை கவனிச்சிக்கிட்டாங்க. குடும்பமே எனக்காக உழைச்சுது.நான் இடது கையாலதான் எழுதுவேன்.  பிளஸ் 2 எக்ஸாம் டைம்ல இடது கை எலும்பு முறிஞ்சு போச்சு. எக்ஸாம் எழுத ஆள் வைக்கலாம்னு அம்மா சொன்னாங்க. நான்தான் பிடிவாதமா, ‘என் கை சரியாகிடும். நானே என் எக்ஸாம என் கையாலயே எழுதுவேன்’னு சொல்லிட்டேன்.

அது மாதிரியே எழுதினேன். மார்க்தான் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. 1128தான் வாங்க முடிஞ்சது’’ என வருந்தும் ராஜாராமன், சமீபத்தில் அம்மாவின் உதவி இல்லாமல் தன் தெருவில் இருக்கும் ஒரு கடைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்ததை பெருமையாகச் சொல்லி சிலிர்க்கிறார். சின்னச் சின்னதாய் தனது வேலைகளை செய்யப் பழகி வரும் இவர், தற்போது நுங்கம்பாக்கம் சென்று சி.ஏ படிக்கத் தொடங்கி இருக்கிறார். அங்கும் இவரை வகுப்புக்குத் தூக்கிச் செல்லவும் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் உதவும் ஏராளமான நல்ல உள்ளங்கள் இருப்பதுதான் ஆறுதல்.

‘‘உடல் அளவுல நான் பலவீனமா இருக்கலாம். என் மனசு ரொம்ப உறுதியா இருக்கு. நிச்சயம் என் இலக்கை நான் அடைந்தே தீருவேன். எனக்கு நிறைய பேர் உதவி செய்யறாங்க. அது மாதிரி நானும் எல்லோருக்கும் உதவி செய்ய ஆசைப்படறேன். அதுக்கு  நான் நிறைய சம்பாதிக்கணும். அதுக்காகவே படிக்கிறேன்!’’ என்கிறார் ராஜாராமன் நிறைவாக.அந்த இடம் அன்பால் நிரம்பி வழிகிறது!எனக்கு நிறைய பேர் உதவி செய்யறாங்க. அது மாதிரி நானும் எல்லோருக்கும் உதவி செய்ய ஆசைப்படறேன். அதுக்கு  நான் நிறைய சம்பாதிக்கணும்...

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்