தனியார் பள்ளிகளுக்கு தடா!



சட்டம் போட்டு அசத்தும் கிராமம்

ஒருபுறம் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, இன்னொருபுறம் டாஸ்மாக் கடைகளைத் திறந்துகொண்டிருக்கிறது தமிழக அரசு. ஆங்கிலவழிக் கல்வி மோகத்தில் இருக்கும் மக்கள், தங்கள் பணியில் அக்கறை காட்டாத அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றிருக்கும் கல்விச் சூழலில், ‘மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்வதில்லை’ என்பது அரசு சொல்லும் காரணம். விளைவாக கிராமத்து அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் இருக்கும் மட்டங்கிப்பட்டி இந்த லிஸ்ட்டில் அடங்காது. கொடைக்கானல் கான்வென்ட் வரை தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்த பெற்றோரைத் தடுத்து, ‘ஊராட்சிப் பள்ளிக்குத்தான் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்’ என உத்தரவு போட்டு வெற்றி கண்டிருக்கிறது இந்த ஊர்ப் பஞ்சாயத்து. கல்வித் தரத்திலும் அந்த ஊராட்சிப் பள்ளியை கான்வென்ட் ரேஞ்சுக்கு உயர்த்திக் காட்டியிருப்பது சிம்ப்ளி அமேஸிங்!

‘‘எங்க ஊர் துவக்கப் பள்ளிக்கு வரலாற்றுப் பெருமை இருக்கு சார். சுதந்திரத்துக்கு முன்னாடியே எங்க முன்னோர்கள் இந்த ஸ்கூலை கட்டிட்டாங்க. நம்ம கிராமம் முன்னேறணும்னு ஊர் ஊரா போய் நாடகம் போட்டு காசு சேர்த்து இந்தப் பள்ளிக்கூடத்தை அவங்க உருவாக்கியிருக்காங்க. இந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில படிச்சவங்க இன்னிக்கு டாக்டராவும், எஞ்சினியராவும், பல அரசு வேலைகளிலும் இருக்காங்க. அப்படிப்பட்ட பள்ளிக்கூடம் மூடுற நிலைக்கு வந்ததைத்தான் எங்களால தாங்கிக்க முடியல!’’ எனத் துவங்குகிறார் மட்டங்கிப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் பழனிமுருகன். எல்லா அரசுப் பள்ளிகளையும் போல இந்த ஊர்ப் பள்ளியும் சில ஆண்டுகளுக்கு முன் மாணவர் சேர்க்கைக் குறைபாட்டால் தடுமாறியிருக்கிறது. ‘தனியார் பள்ளி வேன் எதுவும் ஊருக்குள் வரக் கூடாது’ என்ற அதிரடிக் கட்டுப்பாட்டால் அதைத் தடுத்திருக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து.



‘‘மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ மோகம் எங்க ஊரையும் விடல. மதுரை, மேலூர்னு குழந்தைகளைப் படிக்க அனுப்பினாங்க. கொடைக்கானல் கான்வென்ட்ல கூட சேர்த்திருந்தாங்க. நானே என் பசங்க ரெண்டு பேரையும் மேலூர் ஸ்கூல்லதான் சேர்த்திருந்தேன். இதனால ஊர்ப் பள்ளியில மாணவர்கள் எண்ணிக்கை குறைஞ்சுட்டு வந்தது. இது மாதிரி பசங்க குறைஞ்சதால பக்கத்து கிராமங்கள்ல இருந்த ரெண்டு ஸ்கூல்களை மூடிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு உறைக்க ஆரம்பிச்சது. இப்படியே விட்டா எங்க முன்னோர்கள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிடும்னு நினைச்சோம்.
 
அரசுப் பள்ளின்னா வசதியிருக்காது. நல்லா சொல்லித் தரமாட்டாங்கன்னு நினைச்சுதான் தனியார்ல சேர்க்குறாங்க. அதே வசதியை இங்கேயே கொடுத்துட்டா ஏன் வெளியூர் போகப் போறாங்க? அதனால, ஊர் செலவுலயே சில அடிப்படை வசதிகளை செஞ்சோம். முதல்ல, ஒண்ணாம் வகுப்புல இருந்து மூணாம் வகுப்பு வரை குழந்ைதங்க உட்கார பிளாஸ்டிக் சேர் வாங்கிப் போட்ேடாம். நான்கு மற்றும் அஞ்சாம் வகுப்பு பிள்ளைகளுக்கு பெஞ்சு, டெஸ்க். அப்புறம், குடிதண்ணீருக்கு `ஆர்.ஓ’ ஃபில்டர் அமைச்சோம். இதுக்குப் பிறகுதான், பெத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சு. அடுத்து, தனியார் பள்ளிகள் மாதிரியே ரெண்டு செட் யூனிபார்ம், ஐ.டி கார்டுன்னு எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுத்தோம். திங்கட்கிழமை யோகா, வெள்ளிக்கிழமை கராத்தேன்னு தனித் திறன் வளர்க்க ஒரு மாஸ்டரைத் தேர்ந்தெடுத்தோம். இதுக்கும் தனித்தனியா டி-ஷர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் கொடுத்தோம்.

இந்த ஸ்கூலுக்கு ரெண்டு அரசு ஆசிரியைகள் மதுரையில இருந்து வர்றாங்க. தமிழ், ஆங்கிலம்னு இரண்டு மொழிலயும் வகுப்புகள் எடுக்குறாங்க. அவங்கள்ல ஒரு டீச்சர் வாரத்துல ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சதும் பசங்களுக்கு இந்தி கத்துக் கொடுக்குறாங்க. மொத்தத்துல, ஒரு கான்வென்ட்ல படிச்ச அனுபவம் இந்த கிராமத்துலயே எங்க குழந்தைகளுக்குக் கிடைக்குது.  இப்போ இந்தப் பள்ளியில 64 குழந்தைங்க சேர்ந்துட்டாங்க. ஊருக்கு கொஞ்சம் வெளிய வீடு கட்டியிருக்குறவங்க ‘இவ்வளவு தூரம் வரணுமே’ன்னு யோசிச்சாங்க. எங்க ஊர்க்காரர் ஒருத்தர், தன்னோட டாடா சுமோ காரை இதுக்காக பயன்படுத்திக்கக் கொடுத்தார். அந்த ‘ஸ்கூல் சுமோ’, இப்ப தினமும் 15 பசங்களை அழைச்சிட்டு வருது!’’ என்கிற பழனிமுருகன் தன் பிள்ளைகளையும் இந்தப் பள்ளிக்கு அனுப்பியதன் மூலம் வருடத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார்.



‘‘பிள்ளைங்க முன்பைவிட நல்லாவே படிக்கிறாங்க. தேவையான அடிப்படை வசதிகள் இருந்தா எந்தப் பள்ளியிலும் தரமான கல்வியைக் கற்கலாம்னு நாங்க எல்லாருமே உணர்ந்துட்டோம். இப்போ, எங்க பகுதி எம்.எல்.ஏ., ஸ்கூலுக்கு புது கட்டிடம் கட்ட ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, இப்ப ரொம்ப முக்கியமான தேவை, ஆசிரியர்கள். அடுத்த வருஷம் இங்கே அட்மிஷன் கேட்டு இப்பவே பக்கத்து கிராமத்தில் இருந்து மக்கள் வர்றாங்க. இப்ப இருக்குற மாணவர்களுக்கே நாங்க கூடுதலா ஒரு டீச்சரை எங்க சார்பா நியமிச்சு இருக்கோம். அடுத்த வருஷம் அரசே எங்க பள்ளிக்கு இன்னொரு ஆசிரியரைக் கொடுத்தா நல்லா இருக்கும்!’’ எனக் கோரிக்கையோடு முடிக்கிறார் அவர்.

இங்கு பணிபுரியும் ஆசிரியைகள் பாரதிமலரும் விசாலாட்சியும் இந்த முயற்சிக்குத் தந்திருப்பது பெரிய ஒத்துழைப்பு. ‘‘நாங்க ரெண்டு பேருமே தினம் 100 கி.மீ. தூரம் பயணிச்சுதான் இங்க வந்து போறோம். தனியார் பள்ளிக்கு மாணவர்கள் போக முக்கியமான காரணம், கிராமத்துப் பள்ளியில ஆசிரியர்கள் நிலையா இருக்க மாட்டாங்க எனும் நினைப்புதான். அதனால இப்படி ஒரு முயற்சியைத் துவங்குறதுக்கு முன்னாடியே பஞ்சாயத்தில் இருந்து எங்களைக் கேட்டாங்க, ‘இன்னும் கொஞ்ச நாளாவது இங்கே இருப்பீங்களா?’னு. ‘சந்தோஷமா இருப்போம்’னு சொல்லிட்டோம்.  எங்கள் பள்ளியை முன்னேற்ற மக்களே இவ்வளவு ஆர்வமா இருக்கும்போது எங்களுக்கு கசக்குமா என்ன? ஊர் மக்கள் ஒத்துழைப்போட இன்னும் தரம் வாய்ந்த பள்ளியா இதை மாத்துவோம்!’’ என்கிறார்கள் இருவரும் நம்பிக்கை பொங்க!

- பேராச்சி கண்ணன்