குடிநீரை சுத்தப்படுத்தும் புத்தகம்!



விநோத ரஸ மஞ்சரி

‘`புத்தகத்தை கரைச்சுக் குடிச்சிடுவீங்க போல’’ என நாம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆனால், உண்மையிலேயே `குடிப்பதற்கு ஏதுவான புத்தகம்’ என்ற ஒன்றை உருவாக்கிவிட்டார் அமெரிக்கப் பெண் பேராசிரியர் ஒருவர். ‘என்னது... புத்தகத்தைக் குடிக்க முடியுமா?’ என ஆச்சரியப்படாதீர்கள். இது, குடிநீரை வடிகட்டி சுத்தப்படுத்திக் கொடுக்கும் அதிசய புத்தகம்!

`Drinkable book’ எனும் இந்தப் புத்தகத்தை வடிவமைத்திருப்பவர் டாக்டர் தெரஸா டான்கோவிச். அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் இவர். பல வருட உழைப்பில் இவர் உருவாக்கியிருக்கும் இந்தப் புத்தகத்தில் மொத்தமே இருபத்தைந்து பக்கங்கள்தான். ஆனால், ஒவ்வொரு பக்கமும் சில்வர் நானோ துகள்களால் ஆனது. இந்த நானோ துகள்களின் மேற்பரப்பில் இருக்கும் அயனிகள், குடிநீரிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டதாம்.

‘‘சாக்கடை நீரை இதில் வடிகட்டினாலும் சரி, 99.99 சதவீதம் சுத்தமான குடிநீரைத் தந்துவிடும்’’ எனச் சொல்கிறார் தெரஸா. சரி, இந்தப் புத்தகத்தில் படிக்க என்ன இருக்கிறது? புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் குடிநீரை வடிகட்டி சுத்தப்படுத்தும் முறையினை ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழிகள் சிலவற்றிலும் விளக்கியிருக்கிறார் இவர்! அதைத் தவிர வேறொன்றும் இல்லை.



‘‘உலகம் முழுக்க ஒவ்வொரு வருடமும் 35 லட்சம் மக்கள் மோசமான குடிநீரால் இறப்பதாக உலக சுகாதார நிறுவன  அறிக்கை கவலையோடு சொல்கிறது. உலகில் 50 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டே, இப்படியொரு புத்தகத்தை வடிவமைத்தேன். நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு ஒரு வருடம் வரை தேவையான தண்ணீரை இந்தப் புத்தகப் பக்கங்கள் மூலம் சுத்தப்படுத்திவிடலாம்!’’ என உற்சாகம் காட்டுகிறார் தெரஸா!  

தற்போது இந்தப் புத்தகத்தை கென்யா, தென் ஆப்ரிக்கா, கானா, வங்க தேசம் உள்ளிட்ட சில நாடுகளின் கழிவுநீரைக் கொண்டு சோதனை செய்திருக்கிறார்கள். எல்லா நீரின் பாக்டீரியாவையும் சுத்தப்படுத்திவிட்டது இந்தப் புத்தகம். ‘‘இன்னும் புரோட்டோசோவா, வைரஸ் போன்ற கிருமிகளை வைத்தும் டெஸ்ட் செய்ய வேண்டும்’’ என்கிறார் தெரஸா. அந்தச் சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகே இந்தப் புத்தகம் மார்க்கெட்டிற்கு வரும்! நம் பிரதிக்கு முந்த வேண்டும்!

- ரெமோ