கிரகங்கள் தரும் யோகங்கள்



ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்


நம் வாழ்வில் மகத்தான மாற்றங்கள் தரும் கிரகங்களைப் பார்க்கப் போவதற்கு முன்பாக, ராசி என்பதன் தன்மை எத்தகையது என்பதைப் பற்றியும், தனி மனித ஜாதகத்தில் அதன் நிலை என்ன என்பதைக் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். அதையும்விட முக்கியமாக, ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் என்று சொல்லப்படும் இடத்தைக் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ராசி என்பது அடிப்படையான ஒரு தன்மையைக் குறிக்கும். அது ஒரு அடையாளம். அந்த அடையாளத்திற்கென்று சில குணங்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால், ஒருபோதும் தனி மனிதனைக் குறித்த அனைத்து நுண்ணிய தகவல்களையும் அது அளிக்காது. ராசி என்கிற விஷயத்தைத் தாண்டி ஜாதகம் என்று நகரும் வாசகர்கள் அனைவரும் தங்கள் ஜாதகத்தில் லக்னம் என்றும் ‘ல’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். இதை அறிந்தால்தான் உங்கள் ஜாதகத்தின் பலன்களை அறிய நீங்கள் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

‘‘உங்க ஊர்ல மழையா’’ என்கிறார் ஒருவர். ‘‘ஆமாங்க, நல்ல மழை. ரெண்டு மணி நேரம் நிக்காத பெய்தது!’’ இந்த மழை ஊர் முழுவதும் பெய்திருக்கிறது. எல்லோருக்கும் சேர்த்துப் பெய்திருக்கிறது. தெருவில் நீர் ஓடியிருக்கிறது. இதுதான் ராசி. அதாவது இன்று ஒரு குழந்தை பிறந்ததெனில், இந்தியா முழுவதும் இன்று பிறந்த குழந்தைகளுக்கு இதுவே ராசியாக அமையும். அடுத்து பாருங்கள்...

‘‘சார், நீங்க மழை பெய்யும்போது எங்க இருந்தீங்க?’’ ‘‘நனைஞ்சிட்டேன் சார். முதல்லயே ஜலதோஷம். இப்போ உடம்பு லேசா சூடா இருக்கு. கொஞ்ச மழை பெய்தாலே வீட்டுக்குள்ள தண்ணி வந்துடும். ஏன்னா... பள்ளமா இருக்கற இடத்துல வீடு கட்டியிருக்கேன் சார். அதனால, குறுக்குல பெரிய பலகையைப் போட்டு தண்ணிய மடை மாத்தி வெளியில அனுப்புவேன். இதுவே பெரிய வேலையாப் போச்சு...’’ என்று தொடர்ச்சியான உரையாடல்கள்.



கொஞ்சம் கவனியுங்கள். ஒரு மழை பெய்ததைத் தாண்டி தனிமனிதனை எப்படியெல்லாம் அது பாதிக்கிறது. அதற்குள் என்னென்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன. அந்த மழையைத் தாங்குமளவுக்கு அவரிடமுள்ள வசதிகள் என்னென்ன? ஆனால், எதிர் வீட்டில் இருப்பவரின் வீடு மேடாக இருந்து விட்டபடியால் தப்பித்து விட்டாரே என்று தனித்தனியாக இந்த மழை அவரவர் இடம், சூழல், வசதி பொறுத்து மாறுகிறது. இவ்வாறு பொதுவாக நிகழும் விஷயத்தைப் பற்றிப் பேசாமல் தனித்தனியே இருக்கும் விஷயங்கள் பற்றிப் பேசுவதற்கு லக்னம் அவசியம்.

இன்று பிறந்தோர் எல்லோருக்கும் ஒரே ராசிதான். ஆனால், லக்னம் வெவ்வேறாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையும் அதுபோல பல நூறு வித்தியாசங்கள் உடையதாக இருக்கும். ‘‘பையனுக்கு என்ன ராசி? என்ன நட்சத்திரம்?’’ என்று கேட்டால் இரண்டு வரிகளில் அவை முடிந்து விடும். ராசிக்குரிய தன்மை என்பதும், தற்போது எப்படியிருக்கும் என்பது குறித்தும் அதிகப்படியாக பத்து வரிகளில் சொல்லி முடித்துவிடலாம். அதுவும் பொத்தாம் பொதுவாகத்தான் சொல்ல முடியும். ஆனால் ‘பையன் என்ன லக்னம்’ என்று கேட்கப்படும்போதுதான், அங்கு தனிமனிதரைக் குறித்த ஆராய்ச்சி தொடங்கும். லக்னம் என்பதை ஒன்றாமிடம் என்று வைத்து கணிக்கும்போது நவகிரகங்களும் எந்தெந்த இடத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கின்றன என்பது தெரிந்து விடும். அல்லது பார்க்கப்பட வேண்டும். அந்த லக்னத்தின் குணம் என்ன? இந்த ஜாதகருக்கு லக்னத்திலிருந்து எந்தெந்த இடத்தில் என்னென்ன கிரகங்கள் அமைந்து என்னென்ன பலன்களைத் தரப் போகின்றன என்று முதல் கவனத்திலேயே சில விஷயங்கள் தெளிவாகிவிடும்.

ராசியில் அப்படியல்ல... அது பொதுவான கால மாற்றத்தைக் குறித்த அம்சங்களைக் கூறும். சூரியன் கிழக்கில்தான் உதிக்கும். இதுவே ராசி கூறும் உண்மை எனக் கொள்வோம். ஆனால், அப்படி சூரியன் கிழக்கில் உதிக்கும்போது அந்த நேரத்தில் நான் ஏசியில் தூங்கிக் கொண்டிருந்தேன் என்பது வரையிலான விஷயங்கள் லக்னத்தைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகின்றன. அது பொதுவானது; இது தனிப்பட்டோருக்கானது. தனி மனிதனுக்கானது.

‘‘சார்... எனக்கு ஏழரைச் சனி. பயமா இருக்கு!’’ ‘‘இருக்கட்டுமே... ஏன் பதறுறீங்க. உங்க ஜாதகத்துலதான் சனி நல்ல இடத்தில இருக்கே. நல்ல கிரகங்களோட வேற சேர்ந்து இருக்கே. யோகம்தான் போங்க’’ என்று சற்றே நுணுக்கமாகச் செல்வதற்கு, தனி மனிதனைக் குறித்து 360 டிகிரி பார்ப்பதற்கு லக்னம்தான் உபயோகப்படும். லக்னத்தை மையப்படுத்தும்போதே தானாக ஜாதகக் கட்டம் வந்துவிடுகிறது.

லக்னம் என்றாலே மையம், மையம் கொள்ளுதல், இந்த இடத்திலிருந்து எழுச்சியடைதல், மையத்திலிருந்து உருவாகி வருதல் என்றெல்லாம் பல அர்த்தங்கள் உண்டு. ‘‘எங்கிருந்து சார் வர்றீங்க?’’ என்ற கேள்விக்கு ‘திருச்சிலேர்ந்து’ என்றால், அது ராசி. திருச்சியில எங்கிருந்து என்று கேட்டு முழு விலாசத்தைத் தெரிந்து கொண்டு அதையும் தாண்டி மேலதிகத் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டால் அது லக்னம்.
 
ஏன் இதற்கு விரிவான விளக்கம் என்று கேள்வி எழலாம். இந்தத் தொடர் முழுக்க நாம் பெரும்பாலும் லக்னத்தைக் குறித்தும், அதை மையமாக வைத்து பின்னப்படும் கிரகச் சேர்க்கைகளைப் பற்றியும் பேசப் போவதாலும்தான் இவ்வளவு விளக்கங்களைக் கொடுக்கிறேன். இதைத் தெளிவாக அறிந்து கொண்டுவிட்டால் இந்தத் தொடர் முழுவதும் நான் பேசப் போகும் விஷயங்களோடு எளிதாகப் பின்தொடர்ந்து வந்து விடலாம்.   

‘உயிராகிய லக்னம்’ என்றுதான் சொல்வார்கள். உடல் என்பது இங்கு ராசியாகும். லக்னம் என்பது தோற்றுவாய் எனப்படும். மேலும், லக்னம் என்பது விதை என்றால் அது ஊன்றப்படும் நிலமே ராசியாகும். இப்போது இன்னொரு விஷயத்தையும் கவனிக்கலாம்.
உடல் என்றால் அங்கு மனமும் வந்துவிடும். அதனால்தான் சந்திரன் ஜாதகத்தில் நின்ற இடமே ராசி எனப்படுகிறது. சந்திரனையே மனோகாரகன் என்றும் சொல்கிறோம். உடலும், மனமும் ஜனிக்கும்போதுதான் ஒருவர் பிறந்திருக்கிறார் என்று சொல்கிறோம். இப்போது அவர் பிறந்த நேரத்தையும், ஊரையும், அன்றைய சூரிய உதயத்தையும் வைத்து ஜாதகத்தைக் கணிக்கும்போதுதான் அவர் எந்த மையத்திலிருந்து வந்திருக்கிறார் - அதாவது அவரின் லக்னம் என்ன - என்பது தெரிய வருகிறது.

அந்த லக்னத்தைச் சுற்றிலுமுள்ள கிரகங்கள் இனி அந்த ஜீவனை எப்படி ஆளப்போகின்றன... என்னென்ன மாற்றங்களை நிகழ்த்தப் போகின்றன... என்பதெல்லாம் அதிலிருந்து தெரிய வரும். லக்னத்தினுடைய குணாதிசயங்கள் ராசி மண்டலத்தின் மீது - அதாவது சந்திரனின் மீது - ஏற்றிச் செயல்படுகின்றன. இப்போது பாருங்கள்... உயிராகிய லக்னம், உடல் எடுக்கும் இடமே ராசியாகும். விதையும் மண்ணும் போல! எண்ணம் லக்னம் எனில் அதன் வெளிப்பாட்டுக்கான கருவியாக சந்திரன் வந்து உதவி செய்யும் இடமே ராசியாகும்.
சிலருக்கு லக்னம் நல்ல கிரக பாகையில் அமர்ந்து, அந்த லக்னத்திற்கு அதிபதியான கிரகமும் சுபகிரக வீட்டில் சுபகிரக நட்சத்திர பாகையில் அமைந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், உடலாகிய ராசிக்குரிய அதிபதி (உலக சுக போகங்களை அனுபவிக்க உறு
துணையாக இருக்கும் உடலோடு சேர்ந்த சந்திரன்) பலவீனமாக இருந்தால், ஜாதகர் சிரமப்படுவார். எதை எதையோ சாதிக்க வேண்டுமென்று நினைப்பார். ஆனால், மனமானது உடலை ஆளுமை செய்து செயலாகப் பரிமளிக்கச் செய்ய முடியாது. ஏனெனில், ராசியில் நின்ற சந்திரனுக்குப் போதுமான உதவி கிடைக்கவில்லை. அங்கு பலவீனமாகிவிடுகிறது. அதாவது லக்னத்திலிருந்து வருகின்ற சக்தியை மேம்படுத்தி செயலூக்கத்தோடு செய்ய வைக்கும் கருவி சரியில்லாமல் போயிருக்கிறது.

எனவே, லக்னமும் முக்கியம்; லக்னத்திற்கு அதிபதியான கிரகத்தின் நிலையும் முக்கியம்; ராசியும் முக்கியம்; ராசிக்கு அதிபதியான கிரகத்தின் நிலையும், சந்திரனும் முக்கியம், என்பதே ஜோதிடத்தின் முதல் மற்றும் முக்கிய விஷயமாகக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சந்திரனோடு சுபகிரகங்கள் சேர்ந்திருக்க வேண்டும். சரி, அதுகூட இல்லையா? கிரகண தோஷம் அடையாமலாவது இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் ‘‘அவரு என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே சாதிச்சுக் காட்ட
றாரு’’ என்பார்கள்.

‘‘ஐயா... என்னிடம் நிறைய யோசனைகள் இருக்கின்றன. அழகான திட்டங்கள் என்னால் வகுக்கப்படுகின்றன. மனதில் உறுதியும் உள்ளது. ஆனால், எதுவுமே செயலாக்கம் பெறாமல் உள்ளது. மனம் நூறு கிலோ தூக்கலாம் என்கிற உறுதியோடு இருக்கும்போது எப்போதாவது இருபது கிலோ தூக்கிவிட்டு அமைதியாகி விடுகிறேன். என்ன செய்வது?’’ பரவாயில்லை. இதெல்லாமுமே லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி பலவீனமான ஜாதகர்களின் இயல்பான நிலைதான். நெருக்கடி நேரத்தில் மட்டுமே நீங்கள் செயலாற்றுவீர்கள். நாய் துரத்தினால் ஓடுவது போல, அவசர காலத்தில் மட்டும் சாதிப்பீர்கள். இதுபோன்று இருப்பவர்கள் மெதுவாக சந்திரனை வசப்படுத்தி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நினைத்ததை காரியமாக்குங்கள். சாத்தியங்களை சாதகமான நேரங்களில் செயலாக மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுங்கள். காத்திருந்து மீனைக் கவ்வும் கொக்கு போல இருப்பதற்கு பழகுங்கள்.

உங்களால் நீரில் குதித்து அடி ஆழம் செல்ல முடியாமல் போகலாம். அதற்கான திறனை லக்னமோ, ராசியோ தரவில்லை. எனவே, மெதுவாக முன்னேறுங்கள். ஆனால், அடிகளை எடுத்து வைத்துக் கொண்டேயிருங்கள். சிலருக்கு ராசி நன்றாக இருக்கும். சாமுத்ரிகா லட்சணப்படி அழகான உருவத்தோடு இருப்பார்கள். பார்த்தவுடனேயே நாலு பேர் எழுந்து நிற்கும் அளவுக்கு தோரணை இருக்கும். பெரிய அறிவாளி என்றே எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், லக்னம் பலவீனமாக இருந்தால் சிறிய தேர்வில் ஜஸ்ட் பாஸ் என்று ஆவார்கள். சிறிய விஷயத்திற்கும் பேய்முழி முழிப்பார்கள். இன்னும் கேட்டால், சிலர் எல்லா வேலையும் செய்யும் தகுதியோடு இருப்பார்கள். ஆனால், வாய்ப்புக் கொடுத்து கைதூக்கி விடுவதற்கு ஆள் இல்லாமல் இருப்பார்கள்.

லக்னாதிபதி பலவீனமாக இருந்தால், சுய கௌரவம் தேவையில்லாமல் மிகுந்திருக்கும். ‘நாலு பேர் என்ன நினைப்பாங்க?’ என்கிற தயக்கத்துடனே இருப்பார்கள். சிறிய விஷயங்களுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள். சபைக் கூச்சம் வந்து தடுமாறுவார்கள். ஆனால், லக்னாதிபதி வலுவாக இருந்தால், பயிற்சி பெற்ற அறிவு, மூத்தோர் அறிவு போன்றவை இருக்கும். ராசி வலுவாக இருந்தால் முயற்சியுடன் கூடிய அறிவு இருக்கும். ராசி சரியில்லை எனில், சரியான சூழலிலே வளர முடியாமல் போகும். இல்லையெனில் அம்மாதிரியான சூழலில் பிறந்திருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.

மேலே சொன்ன விஷயங்களைத் தாண்டி அடுத்த வாரத்திலிருந்து மேஷ லக்னத்திலிருந்து மீன லக்னம் வரை தொடர்ந்து பார்ப்போம். ஜாதகத்தில் மேஷம் எனும் கட்டத்தில் ல அல்லது லக்னம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். மேஷ லக்னத்தை ஒன்றாம் இடம் என்று வைத்துக் கொண்டால் அதன் யோகாதிபதிகள் யார்? பூர்வ புண்யாதிபதி யார்? எந்தெந்த இடங்களில் எந்தெந்த கிரகங்கள் நின்றால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதையெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.

 (சுழலும்...)