அஜித்தின் திடீர் ஆசை!



இதோ, வெள்ளி விழாவை நோக்கி அஜித்! கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியோடு அவரின் சினிமா வாழ்வு 22 வயதைக் கடந்திருக்கிறது. அஜித்-56 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தவிர, அவரது அடுத்த ப்ராஜெக்ட் யாருக்கு? ‘பாட்ஷா 2’வில் அஜித் உண்டா? என வியப்பும் விறுவிறுப்புமான தல ஸ்பெஷல் தகவல்கள் இங்கே...

* சிவா இயக்கத்தில் அஜித்-56  படத்தின் ஷூட்டிங், கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையில் மால், ஹாஸ்பிட்டல், ரேஸ்கோர்ஸ் என  பல இடங்களில் விறுவிறுவென நடந்து வருகிறது.



* கபீர் துகன் சிங், ராகுல் தேவ் என படத்தில் மும்பை வில்லன்கள் எக்கச்சக்கம். கபீர் துகன் சிங், தெலுங்கில் ஏற்கனவே ‘கிக் 2’, ‘ஜில்’ என படங்கள் செய்தவர். ‘‘சூப்பர் குக்கிங், அருமையான போட்டோகிராபி, ரேஸ் என அஜித்தின் மல்ட்டி டேலன்ட் வியக்க வைக்கிறது’’ என ட்வீட்டியிருக்கிறார் கபீர். மெயின் வில்லன் ராகுல் தேவ், பாலிவுட் ஸ்டார். ‘‘தமிழ்ல ரெண்டாவது படமே அஜித் சாரோட பண்றது பெருமை!’’ என்கிறார் இவர். முதல் படம் விக்ரமுடன் நடித்து முடித்து ரிலீஸுக்குக் காத்திருக்கிறார் ராகுல்.

* சென்னை மருத்துவமனை ஒன்றில் வில்லன் ராகுல் தேவுடன்  அஜித் மோதும் சண்டைக் காட்சி சமீபத்தில் படமானது. பின்னி மில்லிலும் ஒரு ஃபைட் சீனை தொடர்ந்து 15 நாட்கள் எடுத்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஸ்ருதி, லட்சுமி மேனனுடன் யாரையோ கோபமாகத் தேடுவது போல் காட்சிகள் எடுத்துள்ளனர். ஒருசில ஃபைட் சீக்குவென்ஸ்களும் அங்கேயே எடுக்க, ரசிகர்கள் குவியத் தொடங்கி ஏரியா பரபரப்பாகியிருக்கிறது.



* நடிப்பில் தான் ரொம்பவே புரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட் என்பதை ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்ருதி நிரூபிக்க, அதிசயித்திருக்கிறார் அஜித். ‘‘கமல் சார் பொண்ணுன்னு நிரூபிச்சிட்டீங்க!’’ என வாய் நிறைய புன்னகையுடன் அஜித் சொல்ல, ஸ்ருதியின் முகத்தில் வெட்கச் சிரிப்பு.
 
* கொல்கத்தா ஷெட்யூல் ஷூட்டிங் சென்ற மறுநாளே வக்கீல் காஸ்ட்யூமுடன் ஸ்ருதி அலறி அடித்து ஓடி வருவது போன்ற ஸ்டில் லீக் ஆனதில் மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி தான். ஆனால் இன்னொரு பக்கம், அஜித் ரசிகர்கள் அங்கும் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் ஏற்பட்டிருக்கிறது.

* ‘‘என்னோட ஃபேவரிட் கோ-ஸ்டார் ஆகிட்டார் அஜித் சார். எதைப் பற்றி வேண்டுமென்றாலும் அவரிடம் பேசலாம்!’’ என ஆச்சரியப்படுகிறார் ஸ்ருதி.

* அஜித் ஷூட்டிங்கில் இருந்தால், அங்கே வெளியாட்கள் அவரை அவ்வளவு லேசில் பார்க்க முடியாது. அடுத்த பட தயாரிப்பாளரோ, இயக்குநரோ நேரம் கேட்டால் கூட, ‘ஷூட்டிங் ஸ்பாட் வர வேணாம். ஒருத்தர் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு, இன்னொருத்தர் வொர்க் பத்தி பேசறது சரியா இருக்காது. ஃப்ரீ டைம்ல மீட் பண்றேன்!’’ என கறார் பதில் தான்.

 

*  இத்தாலியில் உள்ள மிலன் நகரில் ஷூட்டிங் செல்வதற்கு சில நாட்களுக்கு  முன்னமே வைரல் ஃபீவரால் சிரமப்பட்டார் ஸ்ருதி ஹாசன். ‘‘சரியாகிடும். ஷூட்டிங்கை  தள்ளிப்போட வேண்டாம்!’’ என்று தைரியமாய் ஃப்ளைட் ஏறிய  ஸ்ருதிக்கு அங்கேயே காய்ச்சல் பறந்துவிட, செம ஃப்ரெஷ்ஷாக டூயட்டில்  கலந்துகொண்டிருக்கிறது பொண்ணு.

* இப்போது ஷாட் பிரேக்குகளில் படத்தின் ஸ்டில் போட்டோ கிராபருக்கு இணையாக கேமராவும் கையுமாக க்ளிக்குகிறார் அஜித். விரைவில் புரொஃபஷனல் போட்டோ கிராபி ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பது தான் அவரது லேட்டஸ்ட் ஆசை. போட்டோ ஜர்னலிஸ்ட் ஆகவும் செயல்பட வேண்டும் என்ற ஆசையை நெருங்கிய நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.

* இந்தப் படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே கொண்டு வர வேண்டும் என தல விரும்புகிறார். அனேகமாக அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே ரிலீஸை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

* ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங் சமயத்தில் ஒரு சம்பவம். அன்று கேரவனில் தல காத்திருக்க, வேறு ஏதோ காரணத்தால் ஷாட் தாமதமாகியிருக்கிறது. ரொம்ப நேரம் கழித்து ஒரு உதவி இயக்குநர் அஜித்திடம் வந்து, ‘‘ஸாரி சார், லேட் ஆகிடுச்சு. ஷாட் ரெடி சார்’’ என்றிருக்கிறார். லேசாகப் புன்னகைத்த அஜித் அந்த உதவியாளரிடம், ‘‘சினிமாவில் மட்டும் தான் வேலை செய்ய சம்பளமும் கொடுத்து, ரெஸ்ட் எடுக்க கேரவனும் கொடுத்து, கொஞ்சம் லேட்டானால் ஸாரியும் கேட்பார்கள். ஸாரி வேணாம். இந்த நாளை உங்களுக்குக் கொடுத்திருக்கேன். நீங்க விரும்புறதை பண்ணிக்குங்க!’’ என்றிருக்கிறார். தலயின் பண்பை இன்னமும் வியந்து கொண்டிருக்கிறார் அந்த உதவி இயக்குநர்.

* ‘அஜித்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார்!’, ‘சுரேஷ்கிருஷ்ணா ‘பாட்ஷா 2’ பண்ணப் போகிறார்’ என ஒவ்வொரு நாளும் பரபரப்பு கிளம்புகிறது. ‘‘சினிமாவை அதிகம் நேசிப்பவர் அஜித். மற்ற ஹீரோவைப் போல  ஒரு படத்திற்கு 80  நாட்கள், 100 நாட்கள் என கால்ஷீட் கொடுக்க மாட்டார்  அஜித். அவர் ஒரு  படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால், அந்தப் படம் முடிந்து  அது ரிலீஸ் ஆகி, சின்னதொரு ரெஃப்ரெஷ்மென்ட்டுக்குப் பின்னரே அடுத்த படத்தை முடிவு செய்வார். ‘பாட்ஷா 2’ தகவல் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. அஜித்தின்  கால்ஷீட் ஏப்ரல் 2016ல் இருந்து தான் ஃப்ரீ. அதுவரை வரும் தகவல் எல்லாம் யாராவது கிளப்பிவிடும்  வதந்தியாகத் தான் இருக்கும்!’’ என்கிறது இன்னொரு நம்பகமான சோர்ஸ்.

- மை.பாரதிராஜா