குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

த்ரிஷாவும் நயன்தாராவும் தினம் நாம பார்க்கிற நடிகைகளா இருந்தாலும், ‘யாரு செம’ன்னு எப்படி முடிவுக்கு வர முடியலையோ, அதே போல இட்லியும் தோசையும் நாம தினம் தின்கிற டிபனா இருந்தாலும், அது இரண்டிலும் எது சிறந்ததுன்னு இதுவரை முடிவுக்கு வர முடியல. ‘டிபனில் சிறந்தது இட்லியா, தோசையா’ன்னு பலபேரு பல பட்டிமன்றங்களில் அரைத்த மாவை அரைத்து விட்டாலும், வாயை வெட்கிரைண்டராக வைத்திருக்கும் நாலு பேரை வைத்து நாமளும் ஒரு பட்டிமன்றம் நடத்தி விடுவோம். பட்டிமன்றத்துக்கு நடுவரா வேற யாரு? திருநெல்வேலின்னா ஆறுச்சாமி, தீர்ப்புன்னா நம்ம கர்நாடக டமாரசாமிதான் பாரு.

டமாரசாமி: கால்குலேட்டரில் இருக்கு எண்கள், ஆண்களுக்கு ஆப்போசிட் பெண்கள், காலை டிபனுக்கு இட்லியும் தோசையும்தான் நம்ம கண்கள். காலை டிபனில் சிறந்தது இட்லியேன்னு பேச வராரு, கொட்டாவி விடும் கேப்பிலும் இட்லி சாப்பிடும், ‘அம்மா மெஸ்’ அம்மையப்பன்.

அம்மையப்பன்: நடுவர் அவர்களே, சாதாரணமாக ஒரு சினிமாவைப் பற்றி சொல்லும்பொழுது கூட எப்படிச் சொல்றோம்? ரஜினி -ப்ரியா நடிச்ச படம், கமல் - தேவி நடிச்ச படம், சிவாஜி - பத்மினி நடிச்ச படம், எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி நடிச்ச படம்னுதானே சொல்றோம். அதாவது நடுவர் அவர்களே, எப்பவும் ஹீரோவைத்தான் முன்னிறுத்தி சொல்றோம். ரெண்டாவதாதான் ஹீரோயின சொல்றோம். அதே மாதிரி, ஒரு ஓட்டல்ல எப்படி ஆர்டர் பண்றோம்? ரெண்டு இட்லி ஒரு வடை, ரெண்டு இட்லி ஒரு பொங்கல்னு இட்லிய முதல்ல சொல்லியே ஆர்டர் பண்ணுறோம். இதிலிருந்து தெரியலையா...

காலை டிபனில் இட்லிதான் ஹீரோ, மற்றதெல்லாம் ஜீரோன்னு! நடுவர் அவர்களே, இட்லிக்கும் ஒரு கரண்டி மாவுதான், தோசைக்கும் ஒரு கரண்டி மாவுதான். ஆனா, அம்மா மெஸ்ல ஒரு ரூபாய்க்கு இட்லி தராங்களே, எங்க ஒரு ரூபாய்க்கு தோசை கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்? கடைசியாய் ஒரு கவிதை சொல்லி முடிக்கிறேன்- ‘குங்பூன்னா நினைவுக்கு வருவது ஜெட்லி, குஷ்பூன்னா நினைவுக்கு வருவது இட்லி... சாப்பிடுறதுக்கு முன்னால குடிக்கலாம் சூப்பு, ஆனா சாப்பாடுன்னு வந்துட்டா இட்லிதான் டாப்பு!’  

டமாரசாமி: பிரிச்சுட்டாருய்யா, கருத்தை சிதைச்சுட்டாருய்யா, நம்ம கழுத்தை மிதிச்சுட்டாருய்யா, காதை கடிச்சுட்டாருய்யா... இனி தோசை அணியைத் திருப்பிப் போட வராரு நம்ம வெங்காயக்குமார்.



வெங்காயக்குமார்: நடுவர் அவர்களே, இட்லி என்பது தங்கர் படம் போல ஒரே மாதிரியாத்தான் இருக்கும். ஆனால் தோசை என்பது ஷங்கர் படம் போல, வெரைட்டி வெரைட்டியா இருக்கும். தோசையில் மட்டும் பாருங்கள் நடுவர் அவர்களே, சாதா தோசை, செட் தோசை, பொடி தோசை, பூண்டு தோசை, ரவா தோசை, மசால் தோசைன்னு பலப் பல வகைகள் இருக்கு. அட, முட்டை தோசைகூட உண்டு. இட்லியில் முட்டை இட்லி உண்டா? ஆமாம் நடுவர் அவர்களே, இட்லி ஹீரோ மாதிரிதான், ஒரே கெட்டப்ல வரும். ஆனா, தோசை ஹீரோயின் மாதிரி, எண்ணெய் ஊத்தி வெண்ணெய் ஊத்தி முழு மேக்கப்பில் வரும். தோசையில்தான் ஒரு கவர்ச்சி இருக்கிறது நடுவர் அவர்களே. நடுவர் அவர்களே, தோசையை சமந்தாவைப் போல நைசாகவும் ஊத்த முடியும், ஷகீலாவைப் போல மொத்தமாகவும் ஊத்த முடியும். ஆக, தோசையே சரியான டிபன் எனத் தீர்ப்பு கூறக் கேட்டுக்கொண்டு அமர்கிறேன்.

டமாரசாமி: அருமைய்யா... திங்கிறதுக்கு மட்டும் தோசை பல வகை இருக்குன்னு பெருமையா பொங்கிட்டாங்கய்யா. உப்பி இருந்த இட்லி அணி இப்போ சப்பிப் போயி கிடக்கு. அடுத்த அடைசல் ஊத்த இட்லி அணியைச் சேர்ந்த கையேந்திபவன் கண்ணாயிரத்தை கூப்பிடுறேன்.

கண்ணாயிரம்: நடுவர் அவர்களே! தோசை பல வேஷங்கள் போடுவது என்னமோ உண்மைதான். ஆனா பாருங்க, பல வேஷம் போடும் கமலை விட, ஒரே வேஷத்தில் வரும் ரஜினிதான் சூப்பர்ஸ்டார். இட்லிதான் டிபன் அயிட்டங்களின் சூப்பர்ஸ்டார் நடுவர் அவர்களே. புளிச்சுப் போன மாவை வைத்துக்கொண்டு, பிய்ந்து போகும் தோசையை ஊற்றும் எதிரணியைக் கேட்கிறேன்... நாங்கள் இட்லி மிஞ்சிப் போனால், இட்லி உப்புமா செய்வோம். உங்களால் தோசை மிஞ்சிப் போனால் தோசை உப்புமா செய்ய முடியுமா? நடுவர் அவர்களே, தோசைகளில் நெய் தோசை, பொய் தோசை என ஆயிரம் வகை இருக்கட்டும். எங்களிடம் குஷ்பூ இட்லி, ஹன்சிகா இட்லி என்றெல்லாம் இருக்கிறதே, அவர்களிடம் டாப்சி தோசை, தமன்னா தோசை... அட, அட்லீஸ்ட் தேவயானி தோசையாவது இருக்கிறதா? நடுவர் அவர்களே, தோசைக்கு வெட்கமில்லை, அது பிறந்த மேனியாக, திறந்த மேனியாக தோசைக்கல்லில் கிடக்கும். ஆனால் இட்லி நாகரிகமானது, அது எப்போதும் ஒரு துணியுடன்தான் இட்லி குண்டாவில் இருக்கும். ஆக, நடுவர் அவர்களே, தோசையை விட இட்லியே மேலானது என தாங்கள் தீர்ப்பு கூற விழைகிறேன்.

டமாரசாமி: கேட்டான் பாரு ஒரு கேள்வி... குஷ்பூ இட்லி இருக்கே, இலியானா தோசை இருக்காய்யா? தோசை அணியினரை குப்புறக் கவிழ்த்திருந்தாலும் பரவாயில்லை. மொத்தமா அப்புறவே படுத்திட்டாங்க இட்லி அணியினர். இனி தோசை அணி என்னத்த ஊத்தி, என்னத்த ஆத்தி? வாங்க சட்னிநாதன், வந்து தோசையைத் தூக்கி நிறுத்துங்க.

சட்னிநாதன்: ஐயோ பாவம், இட்லி அணியினர். பசியில என்ன பேசறதுன்னு தெரியாம பேசுறாங்க. நடுவர் அவர்களே, இட்லி என்பது சுயநலம் கொண்டது. அது அதன் இட்லி குண்டாவுக்குள் யாரையும் விடாது. ஆனா தோசை பொதுநலமும் பரந்த மனப்பான்மையும் கொண்டது, அது தன் கல்லில் ஆப்பாயில், ஆம்லெட், புரோட்டா போன்ற மற்ற உணவுகளுக்கும் ஸ்பேஸ் கொடுக்கிறது நடுவர் அவர்களே. காய்ச்சல் வந்தால் சாப்பிடுவது இட்லி, ஆனால் கண்ட நேரத்திலும் சாப்பிடக்கூடியது தோசை. நடுவர் அவர்களே, ‘சிவாஜி’ படத்திலே, ரஜினி என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும். நடுவர் அவர்களே, இட்லி கூட்டமாகத்தான் வேகும், ஆனால் தோசை சிங்கம் போல சிங்கிளாத்தான் வேகும். ஆக, இவ்வளவு நல்ல குணங்கள் கொண்ட தோசையே சரியான டிபன் எனக் கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.

டமாரசாமி: கலக்கிட்டான்ய்யா சட்னிநாதன்... அவன் கேட்டது கேள்வி அல்ல, அது ஒரு வேள்வி. இப்ப தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு..  அனைத்து கருத்துகளையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்துதான் தீர்ப்பு சொல்ல முடியும். இந்த நேரம் பார்த்து என் கால்குலேட்டர கர்நாடகாவுலயே வச்சுட்டு வந்துட்டேன். எல்லாரும் டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருங்க. நான் மொத பஸ் புடிச்சு போயி, கடைசி பஸ் புடிச்சாவது அதை எடுத்துட்டு திரும்பி வந்து தீர்ப்பு சொல்றேன்.