சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர்
ஏயெம்


சூரிய நமஸ்காரம் செய்வதன் பலன்கள் என்ன?

யோக நூல்களும் நிபுணர்கள் பலரும் சொல்லும் குறிப்புகள், எனது சொந்த அனுபவம், யோகா மாணவர்கள் பகிர்ந்து கொண்டவை... என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவை முழுவதையும் சொன்னால், பலருக்கு ஆச்சரியம் கூடும்; சிலரால் நம்ப முடியாமல் கூட போகலாம். அந்த அளவுக்கு இது விளைவுகளை-பயன்களை அள்ளித் தருகிறது!

புதிதாக இதைப் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் பலர், எத்தனையோ முறை பலன்களை வார்த்தைகளில் சொல்ல முடியாமல், அரிய அனுபவங்களைப் பார்த்து வியப்பார்கள். சிலநேரம் பட்டியலைத் தாண்டி, பலன்கள் விரியும். சிலர் சூரிய நமஸ்காரத்தின் சில சுற்றுகளுக்குப்பின் ஓய்வு தரும்போது, அவர்களையும் அறியாமல் நின்ற நிலையிலேயே கண்களை மூடி ஆனந்தமாக ‘‘இன்னும் சில சுற்றுகள் செய்யலாமா?’’ என்று உற்சாகமாகி விடுவார்கள்.

இப்படி பயிற்சியைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மாற்றங்களைக் காண்பதுண்டு; உணர்வு நிலைகளில் ஆரோக்கியம் காண்பதுண்டு, எண்ணங்கள் குறைந்து கவனம் கூடுவதுண்டு. மன அழுக்குகளைத் தாண்டும் ஒரு பயணத்தைப் பார்ப்பதுண்டு. புற உலகிலிருந்து அக உலகிற்கு மாறும் அழகுகள் உண்டு. உடல், மூச்சு, மன ஒருங்கிணைப்பில் ஓர் அரிய கூட்டணியைக் கவனிக்கலாம்.  பல நேரம் இந்த  சூரிய நமஸ்காரம் உள்ளுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளையும் சக்திகளையும் எழுப்பி, பயிற்சி செய்பவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

வார்த்தைகளில் சொல்ல முடியாத பலப்பல அனுபவங்கள் உண்டு; சக்திகள்-உணர்வு நிலைகள் நிறைய உண்டு. நீங்கள் பட்டியலில் இருக்கும் பலன்களை உடனே எதிர்பார்த்து பயிற்சியில் இறங்காமல், முதலில் பயிற்சியில் ஈடுபாட்டோடு மூழ்கி விடுங்கள். பின்பு, பலன்கள் உங்களைத் தேடி வரும். இதுவரை மற்றவர்கள் உணராத அனுபவங்களும் கூட உங்களில் சிலருக்குப் புதியதாகக் கிடைக்கலாம். இந்தப் பின்னணியில் இனிவரும் பலன்களைப் பார்ப்பது நல்லது...



உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சூரிய நமஸ்காரத்தின்போது வேலை செய்வதால், முழு உடலுமே பலன் பெறுகின்றன என்பதை பொதுவாகச் சொல்லலாம். எல்லா நிலைகளிலும் மூச்சு பயன்படுத்தப்படுவதால் மனம் ஒரு நிலைப்படும். இதைக் காலையில் செய்யும்போது, சூரியக் கதிர்களால் எலும்புகள் பலமடைகின்றன. கண் பார்வை தெளிவடைகிறது. கூடவே காலை நேரத்தின் கூடுதல் சிறப்புகள் உண்டு. பலரும் காலையில் செய்யும்போது, பெரும் உற்சாகம் பெறுவதாகச் சொல்வார்கள். நாள் முழுதும் எனர்ஜியோடு இருப்பதாகவும், தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடிவதாகவும் சொல்வார்கள். ஒவ்வொரு நாளும் மிக நன்றாக இருப்பதாக ஆனந்தப்படுவார்கள். காலை நேர வியர்வைக்கு தனி மகத்துவம் உண்டு என்பதைப் பயிற்சியின்போது நீங்கள் உணர்வீர்கள்.

சூரிய நமஸ்காரத்தின்போது, மேற்சொன்னபடி முழு உடலும் பயிற்சியில் ஈடுபடுவதால், உடல் உறுப்புகள் நெகிழ்வுத்தன்மை பெறுகின்றன. வயிறும் மார்பும் மாறி மாறி வேலை செய்து ஆரோக்கியம் பெறுகின்றன. இதனால் வயிறு தொடர்பான பிரச்னைகள் குறையவும், சரியாகவும் வாய்ப்புள்ளது. இதேபோல் சுவாசம் தொடர்பான பிரச்னைகளும் சரியாகி, சுவாச மண்டலம் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு நிலையிலும் முதுகெலும்பு நன்கு வேலை செய்து முழு உடலுக்கும் ஆரோக்கியம் தருகிறது. முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையும் பலமும் பெறுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது. ‘முதுகெலும்பு வாயிலாக சக்கரங்கள் என்கிற சக்தி மையங்கள் தூண்டப்பட்டு, அவை தங்கள் பணிகளை முறையாகச் செய்கின்றன’ என்கிறது ஒரு குறிப்பு.

சிறு சிறு வலிகள் குறைந்தும் மறைந்தும் போவது இயல்பாய் நடக்கும். தொடர்ந்து சூரிய நமஸ்காரத்தைச் செய்யும்போது, பயம், பதற்றம் போன்ற பிரச்னைகள் காணாமல் போகின்றன. அதனால் மனம் முழுக்க மகிழ்ச்சியான எண்ணங்கள் நிரம்பி, வாழ்க்கையில் ஆரோக்கியம் கூடுகிறது; அதுவே உங்கள் அடையாளமாக மாறுகிறது. இதனால் உடலும் மனமும் மேலும் ஆரோக்கியமடைவதோடு, செய்யும் வேலைகளில் கவனமும் ஈடுபாடும் அதிகமாகும்.

இதனால் நீங்கள் உங்களை நேசிப்பது கூடுதலாகி, பிறரையும் நேசிப்பதும் மதிப்பதும் இயல்பாகிவிடும். பலரும் பகிரும் ஒரு தகவல்: ‘‘இப்போது எதற்காகவும் மருத்துமனைக்குப் போவதில்லை. சிறுசிறு பிரச்னைகள் பலவும் முற்றிலும் சரியாகி விட்டன’’ என்பதே!
உள்மூச்சுக்குப் பிறகும், வெளிமூச்சுக்குப் பிறகும் மூச்சை நிறுத்துவது என்று மூச்சின் சக்தியை சிறப்பாகப் பயன்படுத்தும்போது, முழு உடலுமே கூடுதலாகப் பலனடைகிறது. நுரையீரல் தொடங்கி, ரத்த ஓட்டம், உடலுக்குத் தேவையான சக்தி பெறுதல், தேவையற்ற கழிவுகள் வெளியேறுதல் என்று எல்லாமே முழுமையாகச் சீரடைகிறது.

இந்தப் பயிற்சியின்போது உடலிலுள்ள எல்லா தசைகளுமே இழுக்கப்பட்டு, இறுக்கம் நீக்கப்படுகிறது. இதனால் தசைகள் ஆரோக்கியமடைவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுருங்கிக்கொண்டிருக்கும் தசைகளை சரிசெய்வதும், வறட்சியான உடலை இயல்பான நிலைக்கே கொண்டு வருவதும் நடக்கும். ரத்த ஓட்டம் சீராவதோடு, வியர்வையின் மூலம் தோல் சம்பந்தமான பிரச்னைகள் சரி செய்யப்படுகின்றன. சிலருக்கு தொடர்ந்து செய்கையில், சருமத்தின் நிறமே மாறி விடும், முகத்தில் ஒருவித பிரகாசம் தெரியத் தொடங்கும்.  
இவ்வாறு உடலின் ஒவ்வொரு பகுதியும் சூரிய நமஸ்காரம் மூலம் அசைக்கப்பட்டு-இழுக்கப்பட்டு-அமுக்கப்பட்டு மூச்சுகள் மூலம் உணரப்பட்டு, அப்பகுதிகள் தூண்டப்பட்டு -செயல்படுத்தப்படுவதால் கிட்டத்தட்ட முழு ஆரோக்கியத்திற்குமே இது காரணமாக அமையும்.
உடல் சார்ந்த பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு முழு உடலையும் ஆரோக்கியப்படுத்துவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், உடலில் இருக்கும் சிறுசிறு பிரச்னைகளை சரிசெய்து ஆரோக்கியமானவர்களாக மாற்றி விடுவதும் இதில் சாத்தியம்.

‘எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம், காற்று மண்டலம், ரத்த ஓட்டம், ஜீரண மண்டலம், கழிவு மண்டலம், தோல்- நாளமில்லாச் சுரப்பிகள், யோக சக்கரங்கள், நாடிகள்... எல்லாம் பலமாக வாழும். மேலும் மன அமைதி, நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆன்மிக விழிப்புணர்வு மேலோங்கும்’ என்கிறது ஒரு நூல். பெண்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படி பலன்கள் கிடைக்கின்றன. தங்கள் கடமைகளிலும், வேலைகளிலும் தடுமாறுபவர்கள், பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு சிரமப்படுபவர்கள், தங்களின் பிரத்யேகப் பிரச்னைகளில் அவதிப்படுபவர்கள் என்று பல்வேறுபட்டவர்களுக்கும் இது பெரும் ஆறுதலாகவும் அருமருந்தாகவும் இருக்கிறது.

இன்றைய அவசர உலகில் ஆண்களை விட வேலைக்குப் போகும் பெண்களால் தங்களுக்கென தனியாக அதிக நேரம் ஒதுக்க முடியாது. பொறுப்புகள் கூடி இருப்பதால், தங்கள்மீது அக்கறைப்பட அவர்களால் முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு சூரிய நமஸ்காரம் நிறையவே உதவ முடியும். பெண்களுக்கு வேண்டிய சக்தியைப் பெறவும், முழு உடலையும் வலிமையாக்கவும், மாதவிடாய் சீராக இருக்கவும், அது சம்பந்தமாக பிரச்னைகளை உக்கிரமாக்கும் கடும் வலிகளைத் தவிர்க்கவும் சூரிய நமஸ்காரம் பயன்படுகிறது. சிலருக்கு இது குறைவாகவும் இருக்கலாம்; சிலருக்கு இது பெரும் கனவாகவும் இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

காரணம், ஒவ்வொரு உடலும் மனமும் தனித்துவமானது. ஒவ்வொருவரின் பயிற்சி முறையும், ஈடுபாடும், ஆர்வமும் பிரத்யேகமானது, ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும், வாழ்க்கைப் பார்வையும் தனித்தனியானது. இப்படி வேறுபட்ட மனிதர்கள் எல்லோருக்கும் சூரிய நமஸ்காரம் தரும் பலன்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. யாரின் வழிகாட்டலில் பயிற்சி செய்கிறார்கள், எவ்வளவு தரமாக செய்யப்படுகிறது, எப்படி முன் தயாரிப்பு உள்ளது, எத்தனை சுற்றுகள் செய்யப்படுகின்றன, எந்த நேரம் செய்யப்படுகிறது, வாரத்தில் எத்தனை நாட்கள் செய்யப்படுகின்றன, முடித்தவுடன் என்ன செய்கிறார்கள், கிடைக்கும் அனுபவங்களை-பலன்களை எவ்வளவு தூரம் மதித்து அவற்றிற்கு உரிய இடம் தருகிறார்கள்... என்பன பலன்களில் வித்தியாசம் வரக் காரணமாக அமைகின்றன.  

(உயர்வோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: ஜானகி நாயர்