வேஸ்ட் பேப்பரில் பென்சில் செய்யலாம்!



அசத்தும் சென்னை தம்பதி!

பென்சில் கொண்டு பேப்பரில் எழுதலாம். பேப்பரைக் கொண்டு பென்சில் உருவாக்க முடியுமா? ‘முடியும்’ என நிரூபித்திருக்கிறார்கள் சென்னை பள்ளிக்கரணையில் வசிக்கும் பத்மநாபன் - கவிதா தம்பதி. பென்சில்கள் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மரங்களும் இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதைத் தடுக்கிறது இந்தப் புரட்சி முயற்சி!

‘‘எங்களுக்கு சென்னைதான் பூர்வீகம். நான் ஒரு ஐ.டி கம்பெனியில் கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டா வேலை பார்க்கறேன். பொதுவா எனக்கு சுற்றுச்சூழலுக்கு அனுசரணையான விஷயங்களில் ஆர்வம் அதிகம். சீனாவுல சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்களின் பெரிய கண்காட்சி ஒண்ணு நடக்குறதா கேள்விப்பட்டு, சில நண்பர்களோட அங்கே போய் கலந்துக்கிட்டேன். புதுமையான, அதிசயமான பல பொருட்களை அங்கே பார்க்க முடிஞ்சது. ஆனா, என்னைக் கவர்ந்த விஷயம், வேஸ்ட் பேப்பர்களை வைத்து பென்சில் செய்யிற மெஷின். அதோட விலை 8 லட்ச ரூபாய்னு சொன்னாங்க. வீட்ல இருந்தே கவனிச்சுக்குற மாதிரி ஒரு சிறுதொழில் செய்ய என் மனைவி ரொம்ப நாளாவே ஆர்வமா இருந்தாங்க. அதைப் பார்த்துட்டு சென்னை வந்ததும் நான் செய்த முதல் வேலை, பர்சனல் லோன் ஏற்பாடு செய்து அந்த இயந்திரத்தை வரவழைச்சதுதான்!’’ என்கிற பத்மநாபன், இந்த இயந்திரத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்குகிறார்...



‘‘ஒரு பென்சிலுக்குத் தேவையான பேப்பரை கட் பண்றது, பென்சில்  உருண்டையா வர்றதுக்காக ரோல் பண்றது, ரோலாகி வந்ததை கட் பண்றது, பிசிறா இருக்குற மேல் பகுதியை பாலிஷ் பண்றது, தேவைப்பட்டா மேல் பகுதியில் பிளாஸ்டிக் லேமினேஷன் பண்றதுன்னு எல்லா வேலைகளையும் செய்ய இந்த மெஷின்ல 6 பகுதிகள் இருக்கு.

எல்லா பேப்பர்களையும் இதுல பயன்படுத்த முடியாது. ஏற்கனவே மறுசுழற்சி பண்ணாத பேப்பர் வேணும். அதுவும் ரொம்பப் பழசா இருக்கக் கூடாது. 3 மாசத்துல இருந்து 6 மாசம் வரை பழைய பேப்பர் ஓகே. பசையில ஊறிப் போயிடாத மாதிரி தரமான பேப்பராவும் இருக்கணும். பென்சில்ல எழுது பொருளா இருக்குற கார்பன் குச்சி ரெடிமேடா கிடைக்குது. அதை பேப்பரின் ஒரு ஓரத்தில் பசை தடவி ஒட்டிட்டு மெஷினுக்கு உள்ளே விட்டால், உடனே அது பென்சிலா உருட்டப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போய் ரெடியாகிடும். அதை வெயில்ல சில நாட்கள் காய வச்சா பேப்பர் பென்சில் ரெடி!’’ என்கிற பத்மநாபனைத் தொடர்கிறார் கவிதா...



‘‘இந்தப் பென்சில்களைத் தயாரிக்கிறதை விட மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்குறதுதான் பெரிய சவால். நாங்க சில பள்ளிக்கூடங்களுக்கு இதை எடுத்துப் போனப்போ என்னவோ சீனா பொருள்னுதான் நினைச்சாங்க. தமிழ் தினசரி செய்தித்தாள்களே இதுல பயன்படுத்தப்பட்டிருக்கிறதைப் பார்த்ததும்தான் இதை நாங்க தயாரிச்சோம்னு நம்பினாங்க. இந்த பென்சிலால இரண்டு விதங்கள்ல நன்மைன்னு விளக்கிச் சொன்னோம். ஒரு பக்கம் இது பழைய பேப்பர்கள் குப்பையா மாறி நமக்கு பெரிய தலைவலி ஆவதைக் குறைக்குது; அதே சமயம் புதிய பென்சில்கள் செய்யறதுக்கு மரம் வெட்டப்படுறதையும் தடுக்குதுன்னு விளக்கிச் சொன்ன பிறகு சில பள்ளிக்கூடங்கள்ல ஆர்டர் கொடுத்தாங்க. காசு கொடுத்துதான் வாங்கணும்னு இல்ல... இந்தப் பென்சில்களை உருவாக்குறதுக்கான பேப்பர்களை சேகரிச்சுக் கொடுத்தா அதுக்கு ஈடா பென்சில் தர்றதாவும் பள்ளிக் குழந்தைகள்கிட்ட ப்ராமிஸ் பண்ணினோம். இப்ப நல்ல வரவேற்பு இருக்கு!’’ என்கிறார் அவர் உற்சாகமாக.



இந்த இயந்திரம் சீனத் தயாரிப்பு என்பதாலும், நீரும் பசையும் அதிகம் புழங்கும் செய்முறை என்பதாலும் துருப் பிடித்தல் போன்ற சிக்கல்கள் வந்திருக்கின்றன. தகுந்த நபர்களைக் கொண்டு மாற்று ஸ்பேர் பார்ட்ஸ் செய்து மாட்டி அதை முழுமையாக சீர் செய்திருக்கிறார் பத்மநாபன்.

‘‘இந்த பேப்பர் பென்சில் ஒன்றை உற்பத்தி செய்யறதுக்கு ஆகுற செலவு சுமார் 2 ரூபாய் 75 பைசா. பிராண்டட் பென்சில்கள் விலை 5 ரூபாய். தரத்தைப் பொறுத்தளவில் ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனா பிராண்டட் பென்சில்கள்ல பயன்படுத்துற மரங்களால நாட்டின் இயற்கை வளத்துக்குத்தான் கேடு. பெரிய நிறுவனங்களோட போட்டி போடணும்னு நாங்க நினைக்கல. அவங்களும் இது மாதிரியான முயற்சியில இறங்கணும்னு தான் விரும்புறோம். அது வரைக்கும் கவிதா மாதிரி சிறு தொழில் செய்ய விரும்புற பெண்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்!’’ என்கிறார் பத்மநாபன் நிறைவாக!

"ஒரு பக்கம் இது பழைய பேப்பர்கள்  குப்பையா மாறி நமக்கு பெரிய தலைவலி ஆவதைக் குறைக்குது; அதே சமயம் புதிய பென்சில்கள் செய்யறதுக்கு மரம் வெட்டப்படுறதையும் தடுக்குது!"

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்