போஸ்டர் மாஸ்டர்!



‘காஞ்சனா’ படத்தோட முதல் நாள்... ரிசல்ட் ஹிட்னு தெரிஞ்சதுமே, என்னைக் கூப்பிட்டார் ராகவா லாரன்ஸ் மாஸ்டர். ‘எத்தனை கோடியில படம் பண்ணினாலும் ஜனங்களை தியேட்டருக்கு வரவழைத்ததில் போஸ்டர் டிசைனுக்கு முக்கியமான பங்கு இருக்கு’ன்னு நெகிழ்ந்து, ‘காஞ்சனா 2’ டிசைனையும் பண்ணச் சொன்னார். அதுவும் மெகாஹிட்!’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ‘சிந்து கிராபிக்ஸ்’ பவன். தமிழ் சினிமாவில் இப்போதைக்கு படு பிஸியான போஸ்டர் டிசைனர். ‘கர்ணன்’, ‘மாப்பிள்ளை’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’,  ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘காஞ்சனா 1 & 2’ என பவன் கைவண்ணம் எல்லாமே பெரிய ஹிட்ஸ்.

‘‘முழுப்பெயர் பவன்குமார். எங்க அப்பா ஜி.அங்கையா அந்தக் கால சினிமா டிசைனர். எம்.ஜி.ஆரோட ‘நேற்று இன்று நாளை’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘இதயக்கனி’ படங்களுக்கு டைட்டில் வரைஞ்சு கொடுத்தவர். அப்போ கட் அவுட், பேனர்கள், சுவர் ஓவியங்கள்னு அப்பா வரையற சினிமா பெயின்டிங்ஸ் பார்த்து, எனக்கும் ஓவியத்தில் ஆர்வம் வந்துச்சு. +2 முடிச்ச பிறகு, நானும் டிசைன்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். டிசைனர்கள் சுரேஷ் அஞ்சன், லங்கா பாஸ்கர், ஈஸ்வர் சார், கங்காதர் சார் இவங்க எல்லாம்தான் என் இன்ஸ்பிரேஷன்ஸ். சின்னச் சின்ன படங்கள், டப்பிங் படங்கள்னு டிசைன்ஸ் ஆரம்பிச்சு படிப்படியா பெரிய படங்கள் கிடைக்க ஆரம்பிச்சது.



 சசி சார் இயக்கின ‘டிஷ்யூம்’ பட டிசைன் மூலம்தான் நான் இண்டஸ்ட்ரிக்கு தெரிய ஆரம்பிச்சேன். சசி சாரோட ஃபேவரிட் நான். டைட்டில் எல்லாம் ஒரு அர்த்தத்தோடு இருக்கணும்னு விரும்புவார். டிசைன் பிடிக்கலைன்னா, கொஞ்சமும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டார். ஸ்ட்ரிக்டா சொல்லிடுவார். ‘பாரிஜாதம்’ பட டிசைனை பண்ணிட்டு, பாக்யராஜ் சார்கிட்ட காட்டினேன். கூர்ந்து கவனிச்சுட்டு எந்த கரெக்‌ஷனும் சொல்லாம பிடிச்சிருக்குன்னு உடனே சொன்னது ஆச்சரியம்.

லாரன்ஸ் மாஸ்டர் என்னை சொந்த தம்பி மாதிரி நடத்துவார். எவ்வளவு ரிச்சா நாம டிசைன்ஸ் கொடுத்தாலும், அது ரியலா இருக்கணும்னு விரும்புவார். டெக்னீஷியனை மதிப்பார். ‘காஞ்சனா 2’ டிசைன்ஸ் பார்த்துட்டு ரஜினி சாரே பாராட்டினதா சொன்னார். அந்தப்பட டிசைனைப் பார்த்துட்டுதான் பாலா சார் கூப்பிட்டு ‘தாரை தப்பட்டை’க்கு பண்ணச் சொன்னார். சுந்தர் சி. சாரோட ‘தீயா வேல செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘ஆம்பள’ படங்கள் டிசைன் பண்ணியிருக்கேன். ‘தீயா வேல செய்யணும் குமாரு’ படம் வொர்க் பண்றப்ப 10 டிசைன்ஸ் காட்டினேன். எல்லாத்தையும் நல்லா பார்த்துட்டு, ‘அந்த ரெண்டாவது போஸ்டர் கலரும், அஞ்சாவது போஸ்டரோட டைட்டில் டிசைனும், எட்டாவது போஸ்டர்ல இருக்கற காம்பினேஷனும் கரெக்டா கலந்து கொடு’ன்னு சொல்லி, எக்ஸலன்ட்டா ஒரு டிசைன் கொண்டு வந்தார். ‘அரண்மனை’ டைம்ல போஸ்டர் டிசைனுக்காகவே ஒருநாள் முழுக்க சுந்தர் சி. சார் கூடவே இருந்தார். அவர் டிசைன்ல இருந்து ஆரம்பிச்சு சினிமா டெக்னிக்ஸ் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கார்.



தங்கர் பச்சான் சாரோட ‘களவாடிய பொழுதுகள்’ பண்ணினேன். அவருக்கு நேச்சுரலான டிசைன்ஸ் பிடிக்கும். எங்களைக் கூப்பிட்டு அந்தப் படத்தை போட்டுக் காட்டினது மறக்க முடியாத விஷயம். சுராஜ் சாருக்கு டிசைன்ஸ் ரொம்ப கலர்ஃபுல்லா ப்ரைட்டா இருக்கணும். ‘மருதமலை’, ‘மாப்பிள்ளை’ டிசைன்ஸ் பார்த்தாலே அது தெரியும். ‘மதயானைக் கூட்டம்’ல பெயின்ட்டிங் மாதிரி போஸ்டர் அமைஞ்சதுக்கு இண்டஸ்ட்ரியில நல்ல நேம் கிடைச்சிருக்கு.  

இதுவரைக்கும் சொல்லிக்கிற மாதிரி 50 படங்கள் பண்ணியிருப்பேன். தெலுங்கு, மலையாள, ஆங்கில டப்பிங் படங்கள் டிசைன்ஸ் கணக்கே இல்லாமல் பண்ணிட்டேன். ஏ.ஆர்.கே.ராஜராஜா சாரோட டப்பிங் படங்கள் வொர்க் பண்றப்ப எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திடுவார். ‘டப்பிங் படங்களுக்கு பெரிய பப்ளிசிட்டி கொடுக்க முடியாது. போஸ்டர்தான் மக்களை ஈர்க்கணும்’னு சொல்வார். பொதுவா பேய்ப் படம், த்ரில்லர் இதுக்கெல்லாம் போஸ்டர் ரொம்ப முக்கியம். ‘அரண்மனை’ல ஒரு சின்னக் குழந்தையை தலை விரிச்சு உட்கார வச்சி பேக்கிரவுண்ட்ல அரண்மனையை வச்சோமே... அப்படி. இதில் என்னமோ இருக்குன்னு மக்களுக்கு ஒரு ஆர்வத்தையும் சஸ்பென்ஸையும் தரணும். அதை சரியா தர முடிஞ்சதுதான் என்னோட சக்ஸஸ் ரகசியம்னு நினைக்கிறேன். அதுக்கு மேல சினிமாவில் ராசி ரொம்ப முக்கியம். அந்த விஷயத்தில் இப்பவரை ஐயாம் ப்ெளஸ்டு!

முன்னாடி கையால வரைஞ்சு டிசைன் பண்ணிட்டிருந்தேன். இன்னிக்கு கம்ப்யூட்டர்லயே நேரடியா வரையற டெக்னாலஜி வந்திடுச்சு. ‘சின்னப்படமோ, பெரிய படமோ முகம் சுளிக்காம, சலிக்காம வேலை பாரு’னு எங்க அப்பா சொல்வார். அதை மனசுல வச்சி வேலை செய்யறேன். சில நேரம் நாம ஒரு வொர்க்ல இருக்கும்போது, வேற ஆட்கள் வந்து அவங்க வேலையை அவசரப்படுத்துவாங்க. நாம வெயிட் பண்ணச் சொன்னா, ‘இதுல உனக்கு என்ன அவார்டா கிடைக்கப் போகுது’ன்னு சிலர் கிண்டல் அடிப்பாங்க. சினிமாவில எவ்வளவோ துறைகளுக்கு அவார்டு கொடுக்குறாங்க. டிசைனர்களுக்கும் விருது கொடுத்தா, எங்களுக்கும் பெருமையா இருக்கும். இன்னும் உற்சாகமா நாங்களும் வேலை பார்ப்போமே!’’ - ஆதங்கப்படுகிறார் இந்த போஸ்டர் மாஸ்டர்.

- மை.பாரதிராஜா
 படங்கள்: ஆர்.சி.எஸ்