மலைகளைப் பிளந்த மனிதர்!



பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு மட்டும்தான் சினிமா ஆகும் தகுதி படைத்ததா? இந்தக் கேள்வியோடு கடந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிறது ‘மஞ்சி: தி மவுன்டெய்ன் மேன்’ என்கிற பாலிவுட் படம். தஸ்ரத் மஞ்சி என்ற எளிய மனிதனின் கதை இது. ஆனால் மஞ்சி செய்த சாதனை, எளிய விஷயம் இல்லை! பீகாரின் கேலார் என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் மஞ்சி. அந்த கிராமத்தையும் பக்கத்து நகரையும் ஒரு மலை பிரித்தது. மலையைச் சுற்றிக்கொண்டு அங்கு செல்ல 55 கிலோமீட்டர் கடக்க வேண்டும். மனைவி பால்குனி தேவிக்கு உடல் நலமில்லாதபோது இவ்வளவு தூரம் கடந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்குள் அவர் இறந்துவிட்டார்.

இறந்த மனைவிக்கு தாஜ் மகால் கட்டிய மன்னனை ஆராதிக்கும் இந்த தேசத்தில், வேறுவிதமாக யோசித்தார் மஞ்சி. ‘என் மனைவியைப் போல எத்தனை பேர் இந்தத் தாமதத்தால் இறந்திருப்பார்கள்! மலையைக் குடைந்து ஒரு பாதை அமைத்தால் இந்த மரணங்களைத் தவிர்க்கலாமே!’



ஒரே ஒரு சம்மட்டி, உளி... இந்த இரண்டையும் எடுத்துக்கொண்டு அந்த மாபெரும் மலையைப் பிளக்கக் கிளம்பினார் அவர். பார்த்து ஊர்க்காரர்கள் சிரித்தார்கள். ‘‘இந்த மலையை உடைத்து ரோடு போடுவது நடக்கிற காரியமா?’’ எனக் கேட்டார்கள். மனைவி இறந்த துக்கத்தில் மஞ்சிக்கு பைத்தியம் பிடித்ததாக முடிவு கட்டினார்கள்.

22 ஆண்டுகள்... தினமும் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் தனி ஆளாக மலையைக் குடைந்து, ஒரு பஸ்ஸே போகிற அளவுக்கு பாதையை உருவாக்கி சாதித்தார் மஞ்சி. இப்போது வெறும் 15 கிலோமீட்டர் பயணித்து நகரை அடைய முடிகிறது. தன் 70 வயதில் இதை சாதித்த மஞ்சி, கடந்த 2007ம் ஆண்டு இறந்தார். அப்போதுதான் இந்த விஷயம் பலருக்குத் தெரியும். அதன்பின் மஞ்சியின் கிராமத்துக்குச் சென்று பலருடனும் பேசி, கேத்தன் மேத்தா இந்தப் படத்தை உருவாக்கினார். மஞ்சி யாக நவாசுதீன் சித்திக், அவர் மனைவியாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார்கள். கூடவே மஞ்சி வெற்றிகொண்ட அந்த மலையும், அதில் அவர் உருவாக்கிய பாதையும் முக்கிய பாத்திரங்களாக நடித்திருக்கின்றன. நம்ம ஊர் ஹீரோக்களுக்கும் டைரக்டர்களுக்கும் இப்படியான நிஜக்கதைகள் பிடிக்காதோ!

- அகஸ்டஸ்