கருணை



‘‘சுசீலா,  உனக்கு மாதச் சம்பளம் மூவாயிரம் ரூபாய். ஞாயிற்றுக்கிழமை லீவு. அதைத் தாண்டி நீயா  லீவு எடுத்தா ஒரு நாளைக்கு நூறு ரூபாய்  பிடிச்சுக்குவேன்’’ என சொல்லித்தான் ஷாலினி அவளை வேலைக்கு அமர்த்தினாள். முதல் மாதத்தில் ஒருநாள் சுசீலா விடுப்பு எடுக்க, சொன்னபடியே நூறு  ரூபாய் பிடித்துக்கொண்டு தான் சம்பளம் தந்தாள் ஷாலினி. அடுத்த மாதம் சுசீலா திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை.  மூன்றாம் நாள் வாடிய முகத்துடன் வந்தாள். ‘‘மன்னிச்சுக்குங்கம்மா! ரெண்டு நாளா காய்ச்சல். பக்கத்து வீட்டுக்காரிதான் டாக்டர்கிட்ட போக நூறு ரூபா் கடனாக் கொடுத்தா. இப்ப பரவாயில்லை’’ என்றாள்.



‘‘உட்கார்!’’  எனக் கூறி சுசீலாவிற்கு காபி போட்டுக் கொடுத்தாள் ஷாலினி. ‘‘வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு வேலைக்கு வா!’’ என்றாள்.சம்பள நாள் வந்தது. சுசீலாவிடம் சம்பளமாக மூவாயிரத்து நூறு தந்தாள் ஷாலினி. ‘‘அம்மா அதிகமா தந்திருக்கீங்க. நான் மூணு நாள் வேலைக்கு வரலை!’’ ‘‘எனக்குத்  தெரியும். உடம்பு சரியில்லாதப்போ நீ எப்படி வேலை செய்வாய்? மருந்து வாங்க  கடன் வேற வாங்கியிருக்கே. அதுதான் அந்தப் பணத்தையும் சேர்த்து  தந்திருக்கேன்!’’ என்றாள் ஷாலினி. அந்தக் கருணை கண்டு சுசீலாவின் மனம் கனிந்தது.

-மணியன்