நியூஸ் வே



பாலிவுட் ஸ்மைலிங் குயின் ப்ரியங்கா சோப்ரா, நிஜத்தில்  கோபக்கார பொண்ணு. ‘‘அடிக்கடி அம்மா மேல கோபப்பட்டு கையில இருக்கற ஸ்மார்ட் போனை தூக்கி எறிஞ்சிடுறேன். ஆனா, என் கோபமெல்லாம் அதிகபட்சம் பத்து, பதினைஞ்சு நிமிஷம்தான்!’’ என்கிறார் ப்ரியங்கா.

இந்தியாவின் ஏழு மாநிலங்களில் ஒரே ஒரு பெண் அமைச்சர்கூட இல்லை. தெலங்கானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி ஆகியவையே அவை!

தனுஷ் அடுத்து துரை.செந்தில்குமார் டைரக்‌ஷனில் இரண்டு வேடம் ஏற்று நடிக்கிறார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி வீர தனுஷ், கோழை தனுஷ் கேரக்டராம்.

கேப்டன் கூல் டோனியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் டோனியாக நடிப்பது சுஷாந்த் சிங் ராஜ்புத். டோனியின் மனைவி சாக்‌ஷியாக நடிக்கப் போவது கைரா அத்வானி.



கடந்த வாரம், மகாராஷ்டிராவின் `நாண்டட் எக்ஸ்பிரஸ்’ ரயில் மீது லாரி ஒன்று மோதியதில் கர்நாடக எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆறு பேர் இறந்தது தெரியும். ஏ.சி கோச்சில் தீ விபத்து, லெவல் க்ராஸிங்கில் பள்ளி வேன் மீது மோதல், இப்போது இது என கடந்த இருபது மாதங்களில் இந்த ரயில் சந்தித்த மூன்று மோசமான விபத்துகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். ஸோ, `அது ராசியில்லாத ரயில்ப்பா...’ என்கிற அவப்பெயரைப் பெற்றிருக்கிறது `நாண்டட் எக்ஸ்பிரஸ்’!

கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமம் அருகே காஜல் அகர்வாலின் தெலுங்குப் படப்பிடிப்பு நடக்கிறது. நள்ளிரவில் கிடைத்த இடைவெளியில் திரிவேணி ஆற்றங்கரையில் அமர்ந்து மனதைக் கரைத்து வந்திருக்கிறது பொண்ணு!

அப்பா கமலுடன் ஹீரோயினாக நடித்ததில் இருந்து ஸ்ருதி ஹாசனின் நட்பு வட்டத்தில் இடம் பிடித்துவிட்டார் பூஜா குமார். சமீபத்தில் மும்பையில் பார்ட்டி ஒன்றில் அந்த ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் இன்னும் ஸ்ட்ராங் ஆகியிருக்கிறது.



கங்கணா ரனாவத், இம்ரான்கான் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் `கட்டி பட்டி’ படத்திற்காக 24 மணி நேரம் முத்தம் பொழிந்து ஒரு பாடலை எடுத்திருக்கிறார்கள். இந்திய சினிமா உலகில் முதல் முறையாக `ஸ்டாப் மோஷன் டெக்னாலஜி’ என்கிற புதிய உத்தியைப் பயன்படுத்தி இந்தப் பாடலை முடித்துள்ளனராம். `லிப் டு லிப் கிஸ்ஸியன்’ எனத் தொடங்குகிறது அந்த முத்தப் பாடல்!

ஏவி.எம் ஸ்டூடியோவில் நடந்த ‘கபாலி’ போட்டோஷூட் வொர்க்கிங் ஸ்டில் வெளியானதில் யூனிட் திகைத்துப் போயிருக்கிறது. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு அது இன்ப அதிர்ச்சி. ஸ்டில்லில் ஹாலிவுட் ஸ்பெஷலிஸ்ட்களின் கைவண்ணம் இருப்பதால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது நரேந்திர மோடி ஆற்றிய உரைதான், சமீபகாலத்தில் ஒரு பிரதமர் ஆற்றிய உரையில் மிக நீளமானது. 1 மணி 26 நிமிடங்கள். கடந்த ஆண்டு மோடி 1 மணி நேரம் பேசினார். அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் மன்மோகன் சிங் சராசரியாக 30 நிமிடங்கள் உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சல்மான் ருஷ்டியின் அடுத்த நாவல் வெளியாகிறது. ‘டூ இயர்ஸ் எய்ட் மன்த்ஸ் அண்டு ட்வென்ட்டி எய்ட் நைட்ஸ்’ என்ற இந்த நாவல், ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின் நவீன வடிவம் என்கிறார்கள்.

மெளலியும், கமலும் அடிக்கடி சந்திக்கிறார்கள். ஒரு முழு நீள காமெடிப் படத்தை மூன்றே மாதத்திற்குள் முடிக்க திட்டம் போடுகிறார்கள்.

‘அரண்மனை 2’வில் சித்தார்த்துக்கு முதலில் பெரிய ரோல் இல்லை. ஆனால், ‘‘நான் ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவேன்!’’ என சின்ஸியர் சித்தார்த் சொல்ல, அவருக்கு பெரிய ரோல் உருவாக்கி விட்டார் சுந்தர் சி. இப்போ சித்துதான் படத்தின் ஹீரோ!

விக்ரம்பிரபு நடிக்கும் படத்திற்கு ‘வீரசிவாஜி’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ரொம்ப நாளைக்குப் பிறகு ஷாலினியின் தங்கை ஷாமிலி ஹீரோயினாக நடிக்கிறார்.

சர்வதேசப் பொருளாதார மந்தநிலையின் எதிரொலி என்றுகூட இதைச் சொல்லலாம். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பக்தர்கள் காணிக்கை தரும் முடியை ஏலம் விட்டால் முன்பு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை வருமானம் வரும். கடந்த ஆண்டு இது 173 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

உடல்நலம் தேறிய பின் மீண்டும்  பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்து இசையமைப்பில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்  இளையராஜா. ‘காக்காமுட்டை’ மணிகண்டனின் ‘குற்றமே  தண்டனை’ படத்தின் பின்னணி இசையில் இறங்கிவிட, அவரது சுறுசுறுப்பைப் பார்த்து  வியந்திருக்கிறார்கள் அனைவரும்.

கமலின் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்திருக்கும் மதுஷாலினி, அதன் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். ‘அவன் இவன்’ கைவிட்டாலும் ‘தூங்காவனம்’ கைவிடாது என்ற நம்பிக்கையில் ஒளிர்கிறார் மது!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் இறங்குகிறார். சிம்பு ஹீரோ என்பது மட்டும் முடிவாகி இருக்கிறது. இதற்கு நடுவில், 60% முடிந்துவிட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தை சிம்புவே தயாரிக்கப் போகிறார்!