அறுசுவை விருந்து!



கே.பி.வித்யாதரனின் ‘கிரகங்கள் தரும் யோகங்கள்’ தொடர் தொடக்கமே அற்புதம். இது ‘குங்குமம்’ வாசகர்களுக்கு தொடர்ந்து வரப்பிரசாதமாக அமையப் போவதில் மகிழ்ச்சி!
- எஸ்.மலர்க்கொடி, காங்கேயம்.

குடிப்பழக்கத்தை விட்டதால் நடிகனாக ஜெயித்திருக்கும் ‘மகாநதி’ சங்கரின் வாழ்க்கை, ஆயிரம் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு சமம்!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

ஹார்ட் அட்டாக் தவிர்க்கும் ஆறு விஷயங்களுமே அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பயன்மிக்க பதிவுகள். சபாஷ்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஒரு பொருளை தெருத்தெருவாக கூவி விற்பவர்கள் எங்கே? ஒரே ஒரு ட்விட்டரில் 5 லட்சம் சம்பாதிக்கும் சோனாக்‌ஷி எங்கே? ங்கப்பா சாமி... கணக்குப் போட்டால் கண்ணக் கட்டுதே!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ரஜினியைப் பார்த்ததுமே கமல், ‘இவர் ஒரு எக்ஸ்ட்ரா அல்ல... எக்ஸ்ட்ராடினரி நடிகன். இவர் சீக்கிரம் மிகப் பிரபலமாகும் வாய்ப்பு இருக்கிறது’ என்றது தீர்க்கமான கணிப்பு!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

‘கபாலி’ பட ரகசியங்களை ‘கபால்’னு போட்டு கலக்கிட்டீங்க தலைவா! சூப்பர் ஸ்டார் விசிறிகளுக்கு அது தலைவாழை இலையில் அறுசுவை விருந்து!
- வி.கே.சண்முகம், தேனி.

மகனிடம் கூட ‘ஏனுங்க’ என நன்மொழி பேசுவது கொங்கு நாடு. வழங்கு மொழியில் ‘வன்மொழி’ கலப்பது குறித்த நாஞ்சில் நாடனின் வேதனையை நாங்களும் உணர்கிறோம்.
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.



‘யாரோ வீசியெறியும் குப்பைக்கு எங்க சந்ததி அழியணுமா?’ எனும் கட்டுரை மனதைப் பிசைந்தது. சென்னையின் குப்பை மேடுகள் பக்கத்தில் வசிக்கும் மக்கள் நோயில் இருந்து மீள சீக்கிரமே நல்ல வழி பிறக்க வேண்டும்!
- சுரேஷ், திருச்சிற்றம்பலம்.

‘ஈரோடு வாசிக்கிறது’ என்ற முழக்கத்துடன், ஒரு வர்த்தக நகரத்தில் புத்தகச் சந்தையை உருவாக்கியிருக்கும் ஸ்டாலின் குணசேகரனின் பணி பிரமிக்கத்தக்கது. இவரின் ‘தமிழ்நாடு வாசிக்கிறது’ முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துவோம்!
- சக்தி இளங்கோ, தஞ்சாவூர்.

அட்டையில் நடிகர் விஷால் ‘பாயும் புலி’யாகவும், நடிகை காஜல் அகர்வால் ‘வெள்ளைப் புலி’யாகவும் இருந்தார்கள். சும்மா ‘தயிர்சாதம்’ - ‘ஊறுகாய்’ போல் செம ஜோடி போங்க!
- ஆசை.மணிமாறன்,
திருவண்ணாமலை.