குங்குமம் ஜங்ஷன்



கல்யாணம், பிறந்தநாள் என சென்ற வாரம் முழுக்க பிரபலங்கள் ஹைதராபாத், சென்னை என மாறி மாறி பறந்திருக்கிறார்கள். அந்த  சுபமுகூர்த்த வாரத்தில் அள்ளி வந்த சுவாரஸ்யங்கள் இவை.

ஹேப்பி வெட்டிங் டே!

‘‘காரணத்தோடு காதல் செய்... அந்த காரணமும் காதலாகவே இருக்கட்டும்!’’ கோரியோகிராபர் போனி வர்மா, இப்படி உருகியது கணவர் பிரகாஷ்ராஜைப் பார்த்து. சமீபத்தில் தங்களின் ஐந்தாம் ஆண்டு திருமண நாளை மும்பை வீட்டில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது இந்த ஆதர்ச தம்பதி! தனது பெயரில் ‘பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன்’ என்று அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியிருக்கும் பிரகாஷ்ராஜ், ‘‘வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் பயணம் இது’’ என நெகிழ்கிறார்.



சிரஞ்சீவி 60!

பாலிவுட்டிலிருந்து சத்ருகன் சின்ஹா, சல்மான்கான், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், தேவி... கோலிவுட்டிலிருந்து கமல்ஹாசன், சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார், தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி... இவர்கள் தவிர, மல்லுவுட், டோலிவுட் டாப் பிரபலங்கள் என இந்திய திரையுலகமே ஐதராபாத் திரண்டு வந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியை வாழ்த்தியிருக்கிறது. ‘‘எனக்கு 60 வயதாகிவிட்டது என்று நினைக்கவில்லை. சினிமாவிற்கு வரும்போது எப்படியிருந்தேனோ அதுபோலத்தான் இப்போதும் இருக்கிறேன். நான் சினிமாவில் இருந்தாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்!’’ என்கிறார் சிரஞ்சீவி. ஓவியர் தர் வரைந்த சிரஞ்சீவி ஓவியத்தோடு ஹைதராபாத் பறந்திருக்கிறார் நடிகர் பார்த்திபன். ஆனால், விமானம் தாமதத்தினால் நள்ளிரவே ஐதராபாத் அடைந்தவர், மதியம் வரை அங்கிருந்து சிரஞ்சீவிக்கு பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார். ‘‘நான் யார் மேல அன்பு வச்சாலும் அதில் ஐம்பது சதவீதம் அவங்களுக்குத் தெரியாம வச்சிருப்பேன்!’’ என்ற பார்த்திபனின் டைமிங்கை ரொம்பவே ரசித்திருக்கிறார் சிரஞ்சீவி.



பாக்யராஜ் வீட்ல விசேஷங்க!

பாக்யராஜின் மகன் சாந்தனு - கீர்த்தியின் திருமணத்திற்கு விஜய் வந்து தாலி எடுத்துக்கொடுத்து ஆசீர்வதித்ததைக் கண்டு கோடம்பாக்கமே புருவம் உயர்த்துகிறது. மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு என இரு வீட்டாருமே திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே வந்திருந்து வாழ்த்து மழை பொழிந்திருக்கிறது. ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள கேரளா ஹவுசில் திருமணம்... அதனைத் தொடர்ந்து மறுநாள் திருமண வரவேற்பும் நிகழ்ந்தது. ரிசப்ஷனுக்கு சென்ற ரஜினி, மணமக்களை வாழ்த்திவிட்டு திரும்பும்போது, கூட்ட நெரிசலில் அவரது கைக்கடிகாரத்தை உடைத்து விட்டனர். பொறுமையாக அதைக் கழற்றி, தன் உதவியாளரிடம் கொடுத்து சரி பார்க்கச் சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

வெஜ் வேடம்

சமீபத்தில் தூத்துக்குடி சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் காய்கறிகள் சாப்பிடுவதன் அவசியத்தை வலியுறுத்தியும், செய்தித்தாள்கள் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் மாறுவேடம் அணிந்து இரு மாணவர்கள் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தனர். அதே போல பரோட்டா சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள், சுற்றுப்புறத் தூய்மை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாணவர்கள் மாறுவேடம் அணிந்ததும் கைத்தட்டல்களை அள்ளியது!