என்னைப் பார்த்தாலே பொண்ணுங்க மிரள்றாங்க!



ராமச்சந்திரன் துரைராஜ்

சுள்ளான் உடம்பு, தோள்பட்டையைத் தொடும் ஹேர் ஸ்டைல், அடர்த்தியான தாடி, குரூர பார்வை, விக்ஸ் மாத்திரை விளம்பரத்தில் வருவது போல ஒரு வித்தியாச குரல்... இதுதான் ராமச்சந்திரன் துரைராஜ். தமிழ் சினிமா வில்லன்களுக்கு இடது கை, வலது கை என அனைத்துக்கும் ஃபிட் ஆகிற மிரட்டல் Guy! ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் மதுரை செல்லா, ‘நான் மகான் அல்ல’வில் பேய் பாபு, ‘சதுரங்க வேட்டை’யில் திருந்தும் ரவுடி திலகா,  ‘ஜிகர்தண்டா’வில் ராசு-இப்படி ராமச்சந்திரன் செய்த படங்கள் குறைவுதான். ஆனால், முகம் எக்கச்சக்கமாய் ரீச் ஆகியிருக்கிறது!

‘‘முதன்முதலா பார்க்குற யாருமே என்னோட  பேசத் தயங்குவாங்க. ‘ரவுடிப் பய சகவாசம் எதுக்கு’ன்னு விலகிப் போவாங்க. ஆனா, பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னா, அப்புறம் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிடுவாங்க..!’’ என்கிறார் ராமச்சந்திரன். பழக்கத்தில் மிக பவ்யமான ஆள்.
‘‘கம்பம் பக்கத்துல கோம்பைதான் எனக்கு சொந்த ஊர். 3 அக்கா... நான் ஒரே பையன். திருநெல்வேலி பக்கம் பாலிடெக்னிக் படிச்சேன்.  கோவையில 3 வருஷம் ஒரு செக்யூரிட்டி சிஸ்டம்ஸ்ல சர்வீஸ் எஞ்சினியரா வொர்க் பண்ணினேன். எங்க பெரியப்பா கோம்பையில ஒரு தியேட்டர்ல கேன்டீன் வச்சிருந்தார். அங்க வியாபாரம் பார்க்க அடிக்கடி போயிடுவேன். இடைவேளை தவிர மீதி நேரம், தியேட்டர்ல படம் பார்ப்பேன். அங்கேதான் எனக்கு போட்டோகிராபியில ஆர்வம் வந்துச்சு. சினிமா கேமராமேன் யார்கிட்டேயாவது அசிஸ்டென்டா சேர்ந்துடலாம்னு நினைச்சு, கோவையில இருந்து சென்னை வந்துட்டேன்.



ஏழு வருஷம்... எழுபது ஜோடி செருப்பைத் தேய்ச்சிருப்பேன். கேமராமேன் யாரையுமே ரீச் பண்ண முடியாததால, இயக்குநர்கள் பக்கம் திரும்பினேன். ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தோட இயக்குநர் மீரா கதிரவன்கிட்டே உதவியாளரா சேர்ந்தேன். போட்டோகிராபர் தொழிலும் கைவசம் இருந்ததால, கையில காசு இல்லாத நேரங்கள்ல கல்யாண வீடு, விசேஷ வீடுகளுக்கு போட்டோ எடுக்க போவேன். மீரா கதிரவனுக்கு அப்புறம் பாஸ்கர் சக்தி, சுசீந்திரன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின்பாரதின்னு நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. கே.கே. நகர்ல ஒரு அண்ணாச்சிக் கடை முன்னாடிதான் எங்க ஜமா நடக்கும். அந்த அண்ணாச்சி ரொம்ப நல்லவர். எங்களுக்கு அவர் பெயர் என்னன்னு கூட இன்னிக்குவரை தெரியாது. உலக வங்கி ரேஞ்சுக்கு அங்க சிகரெட் அக்கவுன்ட் வச்சிருந்தோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, எங்களை அவர் கவனிச்சார்.

அந்த டைம்லதான்  சுசீக்கு  ‘வெண்ணிலா கபடிக்குழு’ கிடைச்சது. அப்போ இருந்து அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதுல மதுரை செல்லா கேரக்டர்ல நடிக்க வச்சார் சுசீந்திரன். சினிமாவில் நடிப்பேன்னு நான் நினைச்சுப் பார்த்ததே இல்ல. ‘நான் மகான் அல்ல’ படத்துல, பேய் பாபு கேரக்டருக்கு செம அப்ளாஸ் கிடைச்சது. ஆனா, எங்க அம்மாவும் அப்பாவும் அந்தப் படத்தைப் பார்த்துட்டு, ‘என்னடா நீ? வர்றே... போறே... ஒண்ணும் பண்ணக் காணோமே’ன்னுட்டாங்க. ஆனா, இப்போ சிக்னல்ல மக்கள் நிறுத்தி முகத்துல முகம் தேச்சு செல்ஃபி எடுத்துக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன். சந்தோஷமா இருக்கு.



‘பாண்டி நாடு’ல லொக்கேஷன் பார்க்குறதுக்காக மதுரை போயிருந்தப்போதான், கார்த்திக் சுப்புராஜ் சார் ‘ஜிகர்தண்டா’ல ராசு கேரக்டர் கொடுத்தார். ‘பீட்சா’லயே எனக்கு ஒரு கேரக்டர் வச்சிருந்தார். நான் அப்போ ‘காட்டு மல்லி’ன்னு ஒரு படத்துல நடிச்சிட்டிருந்ததால பண்ண முடியலை. இன்னும் அது ரிலீஸ் ஆகலை. ஆனா, நல்ல படம். நிச்சயம் பேசப்படும். ‘ஜிகர்தண்டா’வுக்கு அப்புறம், கார்த்திக் சுப்புராஜ் அப்பாவும் நானும் நல்ல நண்பர்களாகிட்டோம். நான் மதுரைக்குப் போனாலும், அவர் சென்னைக்கு வந்தாலும் நிச்சயம் மீட் பண்ணிடுவோம்.

‘சதுரங்க வேட்டை’யில இயக்குநர் வினோத் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருந்தார். நட்டி சார், ‘யூத்’ படத்துக்கு கேமரா  பண்றப்பவே, அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர ட்ரை பண்ணினேன். ஆனா, அவரைப் பார்க்கவே  முடியலை. இந்தப் படத்துல அவர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா பழகினார். அதுல ஒரு கர்ப்பிணிப் பெண்ணோட உயிரைக் காப்பாத்துற நல்ல ரவுடி கேரக்டர் எனக்கு. அதுக்கு அப்புறம்தான் லேடீஸ் ஆடியன்ஸ் என்மேல ஒரு சாஃப்ட் கார்னரா இருக்க ஆரம்பிச்சிருக்காங்க. பாலாஜி சக்திவேல் சார், ‘உன்னோட குரல்ல ஒரு தனித்தன்மை இருக்கு. எக்காரணம் கொண்டும் அதை மாத்திடாதே’ன்னு சொன்னார்.

ஜீவா, நயன்தாரா நடிக்கும் ‘திருநாள்’ல எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கார் டைரக்டர் ராம்நாத். கவுண்டமணி சார் ஹீரோவா நடிக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’, சுசீந்திரன் தயாரிக்கும் ‘வில் அம்பு’... இப்படி அடுத்தடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லக்கூடிய படங்கள் பண்றேன். பெருசா சாதனை பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நோக்கம் எதுவுமில்லை. நான் ரெடியாத்தான் இருக்கேன். ஆனா, ரோட்ல பொண்ணுங்க என்னைப் பார்த்தாலே நாலு அடி தள்ளி நடந்து போறாங்க... என்ன பண்றது?

நானும் உதவி இயக்குநரா இருந்ததால, படம் டைரக்ட் பண்ணணும்னு பெரிய கனவு இருக்கு. ஆனா, அதுக்கான உழைப்பு என்கிட்ட இல்ல. நடிப்பில் இறங்கிட்டதால அதுக்கு நேரமும் இப்போ இல்ல. தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் சார் மாதிரி பெரிய வில்லனா வரணும்னு விரும்பி உழைக்க ஆரம்பிச்சிருக்கேன். அப்படியே, ஒவ்வொரு இயக்குநர்கள்கிட்டயும் ஏதாவது கத்துக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். நான் கத்துக்கிட்டு நடிக்க வந்தவன் இல்லை. நடிக்க வந்து கத்துக்கிட்டிருக்கேன். அதனால என்னோட ட்ராவல் கொஞ்சம் ஸ்லோவாத்தான் இருக்கும்... ஆனா, அது ரொம்ப ஸ்டெடியா இருக்கும்ங்கறதால பயமில்லாம இருக்கேன்!’’

"நான் கத்துக்கிட்டு நடிக்க வந்தவன் இல்லை. நடிக்க வந்து கத்துக்கிட்டிருக்கேன்."

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சி.எஸ்