அழியாத கோலங்கள்



சாருஹாசன்/ஓவியங்கள்: மனோகர்

நான் 17 ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவன். வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் ஓரளவு வசதி படைத்தவர்களே இங்கிலாந்தில் சென்று படிக்க முடியும். சாருஹாசனைப் போல் படிப்பு சரியாக ஏறாதவர்கள், இங்கு ஐ.சி.எஸ் முயற்சியில் தோற்பார்கள். ஆனால், ‘லின்கன்ஸ் இன்னில்’ பார்-அட்-லா பட்டம் பெற்று வந்து இந்தியாவில் வக்கீல் தொழில் செய்து, ஐ.சி.எஸ் வாங்கும் சம்பளம் போல் நூறு மடங்கு சம்பாதிப்பார்கள். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு போன்ற விடுதலை வீரர்கள் எல்லோருமே லண்டனில் படித்தவர்கள்.

நான் பரமக்குடியில் வக்கீலாக செயல்படும்போது வெள்ளைக்கார நீதிபதிகளோ அல்லது கலெக்டரோ இருந்தது கிடையாது. எனக்கு 12 வயதாக இருந்தபோது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒரு வெள்ளைக்கார கலெக்டர் இருந்தார். அன்று ஐ.சி.எஸ் பாஸ் செய்த பல இந்தியர்களும் கலெக்டராக இருந்தார்கள். 1948ல் ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் வருவதற்கு முன் விவசாயிகள், குறுநில மன்னர்களிடம் நில வரி செலுத்தினார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னர்களிடம் மொத்த வரி பெற்றது. ‘பின்னி மில்ஸ்’, ‘மெஜுரா மில்ஸ்’ போன்ற பெரிய தொழிற்சாலைகள் வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்டன. கோயம்புத்தூரில் செயல்பட்ட மில்களெல்லாம் வெள்ளையர் காலத்திலேயே இந்தியர்களால் நடத்தப்பட்டன.



சில உடல்நலக் கோளாறுகளால் 9 வயது வரை பள்ளி செல்லாத எனக்கு என் தந்தை ஒரு ஆசிரியரிடம் கல்வி பயில ஏற்பாடு செய்திருந்தார். ஒரு எழுத்தும் படிக்கவோ எழுதவோ தெரியாத அன்றைய 80 சதவீத இந்தியர்களில் ஒருவனான நான், கேள்வி ஞானத்தில் இரண்டாம் உலக யுத்தம் வந்ததைத் தெரிந்து கொண்டேன். அதனால் நம் நாட்டுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை ஆசிரியர் அவரின் நண்பர்களுக்கு எடுத்துரைக்கும்போது கேட்டது.

அன்று ஒரு ரூபாய்க்கு 15 பட்டணம் படி அரிசி விற்றதாம்... ‘‘யுத்தம் தொடர்ந்தால் ரூபாய்க்கு நான்கு படி அரிசி என்று விலை ஏறிவிடும்!’’ என்றார் என் ஆசிரியர். எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது... பரமக்குடி கோ ஆபரேடிவ் பாங்க் அருகில் கிட்டத்தட்ட பத்து கிரவுண்டு காலி இடத்தையும் அதில் இருந்த கட்டிடத்தையும் என் தாய்வழிப் பாட்டனார் ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து, என் தாயாருக்கு ஸ்த்ரீ தானமாகக் கொடுத்தார். இன்று விலைவாசி ஏற்றம், பஞ்சம் என்று பேசப்படுவதில் எங்கோ ஒரு கணக்கு-வழக்கு பிழை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு சராசரி ஹோட்டலில் மதிய உணவு சாப்பாடு 2½ அணாவுக்குக் கிடைத்தபோது 80% ஏழைகளுக்கு உணவில்லை. சுதந்திரத்துக்குப் பின், ‘நல்ல பிரதமர்’ என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி, தேச நலம் விரும்பும் இந்தியர்கள் ஒவ்வொரு வியாழனன்றும் உணவருந்தாமல் உபவாசமிருந்து உணவுத் தட்டுப்பாட்டை சரி செய்யச் சொன்னார்.

1942 ஆகஸ்ட்டில் இரண்டாம் உலக யுத்தம் நடக்கும்போது, இங்கே தேவகோட்டையில்  சுதந்திரப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சிலர் கொல்லப்பட்டனர். தாலுகா கஜானா கொள்ளை அடிக்கப்பட்டது. அடுத்து பரமக்குடியை உள்ளடக்கிய முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸும் கஜானாவும் கொள்ளை அடிக்கப்படக் கூடும் என்று ஒரு ரகசிய தகவலாம்.   அன்று எங்களுடைய எதிர் வீட்டில் எங்கள் சொந்தக்காரர் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை அய்யங்கார் வசித்தார். அவர் என் தந்தை சீனிவாசனிடம் வந்து, ‘‘அந்த வெள்ளைக்கார கலெக்டர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான். உன்னை கூட்டிவரச் சொல்றான்!’’ என்றார். ‘‘காந்தியடிகள் உத்தரவு, நாங்கள் யாரும் போலீஸோடு பேச்சுவார்த்தைக்கு போகக் கூடாது!’’ என்று மறுத்தார் என் தந்தை. ‘‘வேண்டுமானால் என்னைக் கைது செய்து கூட்டிப் போகலாம்!’’ என்றார்.  
என் தந்தையின் மாமனார்... அதாவது, என் தாய்வழிப் பாட்டனார் சர்க்கார் வக்கீல். என் தாய் மாமன் இன்ஸ்பெக்டர். அவருக்குப் பெண் கொடுத்த மாமனார், சென்னையில் உதவி கமிஷனர்... இதெல்லாம் காரணமாக இருக்கலாம். அந்த வெள்ளைக்கார கலெக்டரே என் தந்தையைப் பார்க்க வீட்டுக்கு வந்துவிட்டார். அன்று அவர்கள் பேசியதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு என் ஆங்கில அறிவு ரொம்ப சுமார். கடைசியாக அந்த வெள்ளைக்காரர் சொன்னது இன்றும் மறக்கவில்லை. ‘‘I shall come back and skin you alive!’’ ‘நாளை வந்து உன் தோலை உரித்து விடுவேன்’ என்பதாகும் பொருள்.

அப்போது என் தம்பிக்கு ஆறு வயது, எனக்கு 12 வயது... அப்பா என் தாயாரிடம் சொன்னதெல்லாம் நினைவிருக்கிறது... ‘‘நாளை கலகம், கொலை ஏதாவது நடந்தால் என்னைக் கூட்டிப் போய் விடுவார்கள். உன் நகையை விற்று பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பார்த்துக்கொள்ளலாம். காலேஜுக்கு அனுப்ப வீட்டை விற்று பேங்க்கில் போட்டுவிட்டு உன் தந்தை வீட்டுக்குப் போய் விடு! என் தாயார் அப்படித்தான் இரண்டு பிள்ளைகளை வக்கீலுக்குப் படிக்க வைத்தார்!” - இவை என் காதில் விழுந்ததில் ஞாபகம் இருப்பவை. மறுநாள் நான் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியபோது நிலைமையே வேறு. அப்பாவின் வக்கீல் ஆபீஸில் அந்த வெள்ளைக்கார கலெக்டரும் என் தந்தையும் ஒரே டேபிளில் உட்கார்ந்து டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்குக் கோபம்... நேற்று தோலை உரிப்பேன் என்று சொன்னவனுடன் உட்கார்ந்து டீ குடிக்கிறாரே... ‘கோழை’ என்று! பின்னால்தான் அந்த பிரிட்டிஷ் - இந்தியர் நட்பு நிலை பற்றித் தெரிந்துகொண்டேன்.

காந்திஜி ஒரு முறை ‘சிங்கத்தின் பிடரியைப் பிடித்து ஆட்டுவேன்’ என்று கட்டுரை எழுதிய போது சில கொலைகள் நடந்தன. ‘‘எழுதும்போதே இதனால் சில வெள்ளையர்கள் கொல்லப்படக்கூடும் என்பதை நான் நினைக்காதது குற்றம்தான்!’’   என அந்த விசாரணையில் சொன்னார் காந்தி. அதற்கு அந்த வெள்ளைக்கார நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார்... ‘‘என்னிலும் சிறந்த ஒரு மனிதனுக்கு நான் தண்டனை கொடுப்பது சட்டத்தின் கொடுமை. ஒருவேளை இங்கிலாந்து மன்னர் உமக்கு விடுதலை அளித்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாருமிருக்க மாட்டார்கள்.’’ முப்பது ஆண்டுகளுக்கு முன் 1985ல் லண்டன் திரைப்பட விழாவுக்குப் போனபோது அவர்களின் நேர்மையையும் அன்பையும் கண்டேன். இந்தியக் குடியுரிமை கிடைக்கும் முன் வேறு எந்த நாட்டோடும் ஒட்டாமல், பிரிட்டிஷ் பிரஜையாக இருந்ததில் எனக்கும் பெருமைதான்.

"கடைசியாக அந்த வெள்ளைக்காரர் சொன்னது  இன்றும் மறக்கவில்லை.  ‘‘I shall come back and skin you alive!’’ ‘நாளை  வந்து உன் தோலை உரித்து விடுவேன்’ என்பதாகும் பொருள்."

(நீளும்...)