காதல் நெக்ஸ்ட்...கல்யாணம் பெஸ்ட்! ஸ்ருதி ஹாசன்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    காதலும் காற்றும் ஒன்று போலத்தான். காலம்தோறும் வீசிக்கொண்டிருந்தாலும் அந்த நேரத்து சுவாசத்துக்கு உதவும் காற்றின் தேவை போல காதலும் அவரவர் தேவைக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது. ‘எது காதல்’ என்பதில்தான் சந்தேகம் வருகிறதே தவிர, ‘காதல்’ என்கிற உணர்வில் எவருக்கும் எந்த சந்தேகமும் வருவதில்லை. ‘‘நேற்றின் காதலைவிட இன்றின் காதலில் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறதா..?’’ என்ற கேள்விக்கு பதிலாக, தன் காதல் பற்றிய தெளிவையும், தன் படங்கள் பற்றியும் இங்கே முன்வைக்கிறார் இன்றைய இளம் தலைமுறையின் பிரதி நிதியாக நிற்கும் ஸ்ருதி ஹாசன்.

‘‘முதல்ல காதல்னா என்னங்கிறதைப் புரிஞ்சிக்கலாம். காதல்னா உடனே ஆணுக்கும், பெண்ணுக்குமான ரொமான்ஸ்னு நினைச்சுடக் கூடாது. நாம் செய்யற வேலை, நம் இருப்பிடம், நம்ம பெற்றோர்னு எது மேல வேணா காதல் வைக்கமுடியும்.

வேலன்டைன்ஸ் டேல கூட, செய்யற வேலைலேர்ந்து நாம விரும்பற எதையும் காதலிக்க முடியும். ஆனா நீங்க கேக்கறது ரொமான்டிக் லவ்வா இருக்கிறதால, அதைப் பேசலாம். காதலை நேற்றைய காதல், இன்றைய காதல்னு பிரிக்கிறதில எனக்கு உடன்பாடு இல்லை. நம்பகத்தன்மையும், அது இல்லாத தன்மையும் எல்லாக் காலத்திலும் இருந்துக்கிட்டிருக்கு.

வீட்டைவிட்டு வெளியேறி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கள்ல ஜெயிச்சவங்களும் இருக்காங்க; வீட்ல பார்த்து முறையா கல்யாணம் பண்ணித் தோத்தவங்களும் இருக்காங்க. இதில பத்துன்னா, அதிலும் பத்து. என்னைப் பொறுத்தவரை காதல்ங்கிறது ஒரு கமிட்மென்ட். பரஸ்பரம் உணர்வுகளை மதிக்கத் தெரிஞ்ச, மதிக்கவேண்டிய கமிட்மென்ட். புரிந்துகொள்ளுதல் எப்படி காதல்ல முக்கியமோ அதே அளவு ஒருத்தரை ஒருத்தர் மதிக்க வேண்டியதும் ரொம்ப முக்கியம். ஏன்னா ரெண்டு பேரோட லைஃப்ஸ்டைலும் வெவ்வேறா இருக்கலாம். வெறும் உறவு முறைக்காக வர்ற காதலோ, கல்யாணமோ ‘வேஸ்ட் ஆஃப் டைம்’னுதான் சொல்வேன். அதில ஒரு நேர்மறையான ஈர்ப்பு இருக்கணும்.

போன தலைமுறைக் காதல்லயோ கல்யாணத்திலோ பொதுவா ஒரு பொசஸிவ்னெஸ் இருந்ததுன்னு சொல்லலாம். ‘இதுதான்
வாழ்க்கை; எனக்காக நீ இதை மாத்திக்கணும்’ங்கிற கட்டாயம் அதில இருந்தது. இந்த தலைமுறைல அது இல்லை. ‘ஒத்து வந்தா வாழலாம்’ங்கிற அளவில எல்லா பிரச்னைகளையும் முன் வச்சு முடிவெடுக்க முடியுது. காதலுக்கும் ஒரு உறுதி வேணும். அதுதான் திருமணம். திருமணத்தை ஆதரிக்கிற விஷயத்தில என்னை ‘பழமைவாதி’ன்னே சொன்னாலும் பரவாயில்லை..!’’

‘‘உங்களுக்கும் சித்தார்த்துக்கும் காதல்னு வந்த செய்தி பற்றி..?’’

‘‘அதுல உண்மை இல்லை. எனக்கு தெலுங்கு தெரியாது. நான் முதல்முதல்ல தெலுங்கில நடிக்கும்போது அவர் எனக்கு அந்த மொழியைத் தெரிஞ்சுக்க உதவி செஞ்சார். இதேபோலத்தான் நான் இந்தில நடிக்கும்போது மிதுன் எனக்கு இந்தியைப் புரிஞ்சு நடிக்க உதவினார். நான் இன்னும் கத்துக்கிற நிலையில்தான் இருக்கேன். எப்பவும் கப்பல்ல நீந்திக்கிட்டோ, விமானத்தில பறந்துக்கிட்டோ, சாலைகள்ல விரைஞ்சுக்கிட்டோ நான் நடிப்பு, இசைன்னு ஓடிக்கிட்டே இருக்கேன். காதலிக்கிற மனநிலையோ, சூழ்நிலையோ எனக்கு ஏற்படவேயில்லை. என் கமிட்மென்ட்களை நான் காதலிக்கிறேன். மற்றபடி எந்த வேலன்டைன்ஸ் டேக்கும் எனக்கு பூ வந்ததில்லை. நானும் யாருக்கும் கொடுத்ததுமில்லை. என் காதலை ஒளிச்சு வைக்க மாட்டேன்!’’

‘‘‘ஏழாம் அறிவு’ எப்படிப் போய்க்கிட்டிருக்கு..?’’

‘‘என் சினிமா கரியரை நான் வெற்றி, தோல்வின்னு பிரிச்சுக்க விரும்பலை. அந்த அளவில இந்தியிலும், தெலுங்கிலும் ரிலீசான படங்கள்ல என் நடிப்புக்கு நல்ல வரவேற்பும், நல்லவிதமான விமர்சனங்களும் இருக்கு. அந்த வகையில என் முதல் தமிழ்ப்படமான ‘ஏழாம் அறிவு’ ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸோட அற்புதமான டைரக்ஷன்ல அருமையா போய்க்கிட்டிருக்கு. சூர்யாவும் என் நடிப்பை மேம்படுத்திக்க உதவியா இருக்கார். நிச்சயமா இந்தப்படம் பெரிய அளவில வெற்றியடையும். இந்தப்பட அனுபவங்கள் மறக்கமுடியாதவை..!’’
வேணுஜி