குங்குமம் ஜங்ஷன்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

ஜாலி திருடன்ஸ்!

கொள்ளையடிப்பது இப்போதெல்லாம் ஜாலியான விஷயமாகிவிட்டது. கடந்த வாரம் சேலத்தில் நடந்த திருட்டுச் சம்பவத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. சேலம், களப்பகாரன்தெருவைச் சேர்ந்த முருகேசன், பெரிய வீடு கட்டி, மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு அமெரிக்கா போய்விட்டார். பின்பக்கக் கதவை உடைத்து இந்த வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நிதானமாக அமர்ந்து சரக்குகளை பரப்பிவைத்து, சியர்ஸ் சொல்லி மப்பேற்றிக் கொண்டபிறகு செயலில் இறங்கியிருக்கிறார்கள். பீரோவில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்களில் தொடங்கி, மாட்டி வைக்கப்பட்டிருந்த எல்.சி.டி டிவி வரை அள்ளிக்கொண்டு எஸ்ஸாகி விட்டார்கள். அடித்தது போக மிச்ச சரக்கு, மிக்சர், ஊறுகாய் என ‘பார்’ அயிட்டங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. சரக்கு பாட்டில்களில்கூட கைரேகைகள் பதிவாகாத டெக்னிக்குடன் அடித்திருப்பதால், யாரோ பக்குவப்பட்ட திருட்டுக்கும்பல் செய்திருப்பதாக நம்புகிறது போலீஸ்.

பீதி கிளப்பும் கடத்தல்

கோவையிலும் சென்னையிலும் நடந்த குழந்தை கடத்தல் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கின. அந்தச்சுவடு காயும்முன்னே சத்தமில்லாமல் நடந்த இன்னொரு கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த சிறுவர்களை கடத்தி பீகாரில் முறுக்கு கம்பெனிகளுக்கு விற்பனை செய்திருக்கிறது ஒரு கும்பல். கடந்த நவம்பரில் திண்டுக்கல், ஜம்புலியன்பட்டியைச் சேர்ந்த 14 வயது வசீம் திடீரென மாயமானான்.

 அன்று இரவு திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து போன் செய்த வசீம், தன்னைக் கடத்துகிறார்கள் என்று மட்டும் சொல்லியிருக்கிறான். அதோடு போன் கட்டாகிவிட்டது. போலீஸ் விசாரித்த நேரத்தில், போடியைச் சேர்ந்த 14 வயது மனோஜ்குமாரும் காணாமல் போனான். இந்நிலையில், வசீமின் அப்பா காசீமுக்கு ஒருவர் போன் செய்து, ‘வசீமை 50 ஆயிரம் கொடுத்து ஒரு புரோக்கரிடம் இருந்து வாங்கியதாகவும், இப்போது அவன் பீகாரில் ஒரு முறுக்கு கம்பெனியில் வேலைசெய்வதாகவும்’ சொல்ல, விசாரணை விரிந்தது. பழநியைச் சேர்ந்த ஒரு புரோக்கர் வசீம், மனோஜ்குமார் உள்பட 24 சிறுவர்களை கடத்தியதும், 3 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டதும், மீதமுள்ள 21 பேரை பீகார் முறுக்கு ஆலைகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இப்போது போலீஸ் குழு ஒன்று பீகார் சென்றுள்ளது.

ரசனைக்கு மரியாதை!

குங்குமம் இதழில் வெளியான ‘கிராமம்/நகரம்’ பகுதி வாசகர்கள் மத்தியில் வரவேற்பையும் பரபரப்பையும் உருவாக்கியது. இக்கட்டுரைகளின் தொகுப்பை ‘ஊர்க்கதைகள்’ என்ற நூலாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூலை 2009&ன் சிறந்த கட்டுரை நூலாக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமையிலான நடுவர் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நூலாசிரியரும் குங்குமம் உதவி ஆசிரியருமான வெ.நீலகண்டனுக்கு விருது வழங்கிப் பாராட்டியுள்ளது திருப்பூர் தமிழ்ச்சங்கம்.

தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் ம.ராஜேந்திரன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் இளையபாரதி ஆகியோர் வெ.நீலகண்டனுக்கு இவ்விருதை வழங்கினர். கடந்த 18 ஆண்டுகளாக சிறந்த தமிழ் நூல்களை தேர்வுசெய்து கௌரவிக்கும் திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் இவ்விருது, குங்குமம் வாசகர்களின் ரசனைக்கு மரியாதை!

இப்போ எகிப்து... அடுத்து?

துனீஷியாவில் மக்கள் போராட்டம் அதிபரை நாட்டை விட்டு விரட்டியதை அடுத்து, இப்போது ஜனநாயக சூறாவளி எகிப்தில் மையம் கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளாக நாட்டை ஆளும் அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று இரண்டு வாரங்களாக போராட்டம் தொடர்கிறது. அமெரிக்காவின் ஆசி இருப்பதால் சமாளிக்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறார் முபாரக். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘எகிப்தின் தலைவர் யார் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்.

 ‘அதிபர் விமானம் ஏறி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றால்தான் போராட்டம் முடியும்’ என எதிர்க்கட்சிகள் பிரகடனம் செய்ய, வீதிகளில் மக்களுக்கும் அதிபர் ஆதரவாளர்களுக்கும் மோதல் நடக்கிறது. பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை எகிற, ஓமன் போன்ற மற்ற நாடுகளிலும் போராட்ட ஆயத்தங்கள் தெரிகின்றன. சீனா உஷாராகி, ‘எகிப்து’ என்ற வார்த்தையையே இணையதளத்தில் தேட தடை விதித்துவிட்டது!

கிணற்றைக் காணோம்!

வடிவேலு படக்காட்சி போலவே இருக்கிறது இச்சம்பவம். நாகை, பழையகரத்தைச் சேர்ந்த விவசாயி காத்தமுத்து, 2 ஆண்டுகளுக்கு முன் 22 அடி ஆழத்தில் ஒரு கிணறு தோண்டினார். அதை வைத்து புகையிலை சாகுபடி செய்துவந்தார். கடந்த வாரம், வழக்கம் போல தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் காத்தமுத்து. திடீரென குண்டுவெடிப்பது போன்ற சத்தம். ஓடிவந்து பார்த்தால், கிணற்றைச் சுற்றியுள்ள 5 அடி நிலப்பகுதி அப்படியே கிணற்றுக்குள் புதைந்து போயிருந்தது. புவியியல் நிபுணர்கள் வந்துபார்த்தும் கிணறு காணாமல் போனதற்கு காரணம் புரியவில்லை. கடந்த ஆண்டு பக்கத்து வயலிலும் கிணறு இதேபோல உள்வாங்கியது. இப்போது இன்னொன்றும் உள்வாங்க, ஊர்மக்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள்.

பேய் ஓட்டும் ஸ்பாட்!

இருள் கவ்வத் தொடங்கி விட்டாலே திட்டக்குடி அருகேயுள்ள பெருமுளை, சிறுமுளை உள்ளிட்ட 20 கிராமங்களை அச்சம் கவ்விக்கொள்கிறது. யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. குறிப்பாக, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகள் என்றால் மரணபயம். காரணம், ஒரு புளியமரம். அந்த மரத்தில் சக்திவாய்ந்த கருப்புச்சாமி உறைந்துள்ளாராம். பேய்பிடித்தவர்களை இந்த புளியமரத்துக்கு அழைத்துவந்து துடைப்பத்தால் அடித்து, தலைமுடியை அந்த மரத்தோடு சேர்த்து ஆணியால் அடிப்பார்களாம்.

சேவலை பலி கொடுத்து அந்த ரத்தத்தை மரத்தில் தெளித்தபிறகு, ஆணியில் சிக்கியுள்ள தலைமுடியை அறுத்துக்கொண்டு வந்து, அருகிலுள்ள வெலிங்டன் வாய்க்காலில் குளித்தால் பேய் ஓடிவிடுமாம். இந்த புளியமரக் கருப்புச்சாமியின் சக்தியறிந்து தொலைதூரத்தில் இருந்தெல்லாம் மந்திரவாதிகள் பேய்களை அழைத்துவந்து இங்கு ஓட்டுகிறார்களாம். ஓரிரண்டு விபத்துகளும் இப்பகுதியில் நடந்துவிட்டதால், விரட்டிவிட்ட பேய்கள் எல்லாம் இப்பகுதியிலேயே உலவிக்கொண்டு காவுவாங்குவதாக வதந்தி பரவிவிட்டது. பாவம் மக்கள்!