எடியூரப்பாவின் பில்லி சூனிய பீதி!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

      ‘‘என்னைப் பதவியிலிருந்து வெளியேற்ற தொடர் சதி நடக்கிறது. பில்லி சூனியம் வைத்து என்னைக் கொலை செய்ய எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள்’’ என அமானுஷ்ய குற்றச்சாட்டைக் கிளப்பியிருப்பவர் சாதாரண மனிதரல்ல... கர்நாடகா முதல்வர் எடியூரப்பா!

நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பதவியைத் தக்க வைத்துக்கொண்டாலும் ஊழல் மற்றும் நிலமோசடி குற்றச்சாட்டுகளால் ஆட்டம் காண்கிறது அவரது நாற்காலி. அதீத தெய்வ நம்பிக்கை கொண்ட எடியூரப்பா இப்போது எதிர்கட்சி ‘இடையூரப்பாக்கள்’ மீது பில்லி சூனியக் குற்றச்சாட்டை வீசியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டு பற்றி அரசியல் பிரபலங்களிடம் கேட்டோம்.  
 
மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

பில்லி, சூனியம் என்பதே கட்டுக்கதைதான். அப்படி பில்லி, சூனியத்தை ஏவி கொலை செய்ய முடியும் என்றால் இங்கு யாருமே வாழ முடியாது. எடியூரப்பா இப்படி எதையாவது சொல்லி, தனது தவறுகளை மறைக்கப் பார்க்கிறார். எல்லா மாநிலங்களிலுமே ஆளும் கட்சிக்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் செயல் படுகின்றன. இது உண்மை யாக இருந்தால் எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளும் கட்சிக்காரர்களை எப்போதோ பில்லி சூனியம் ஏவிக் கொன்றிருப்பார்கள். மக்களை முட்டாளாக்கும் அற்பத்தனமான பேச்சு இது.

தமிழிசை சவுந்தரராஜன் (பி.ஜே.பி.)

பாமரனாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும் எல்லோருக்கும் தனி மனித நம்பிக்கை உண்டு. எடியூரப்பா முதல்வராக இருந்தாலும் தனிமனித நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். அதே கட்சியைச் சார்ந்தவளாக நான் இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசியல்வாதி எந்தச் சவாலையும் அரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். அவரது ஆட்சிக்கு எதிராக அங்கே எதிர்க்கட்சிகள் சதி செய்வது  உண்மைதான். அவற்றை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு மாநிலத்தின் முதல்வரே நெகட்டிவ் நம்பிக்கையான பில்லி சூனியத்தைக் காரணமாக சொல்வது ஏற்புடையதல்ல. அரசியலில் இருப்பவர்கள் முதிர்ச்சியாக பேச வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.

இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று சூழ்ச்சிகளை லாவகமாக எதிர்கொண்ட திறமைசாலி அவர். அவரே இப்படிப் பேசுகிறார் என்றால், அங்கே ஒழுங்காக ஆட்சி நடத்த எதிர்க்கட்சிகளும் ஆளுநரும் சுமுக நிலையை உருவாக்கித் தரவில்லை என்பதுதான் காரணம். எதிர்க்கட்சிகள் செய்த குழப்பங்களால்தான் அவர் இப்படி பேச நேர்ந்திருக்கிறது.
 
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)

பெருமைக்குரிய பதவியில் இருந்தபோதிலும் ‘தான் சராசரி மனிதனுக்கும் கீழ்’ என தன்னைப் பற்றிய நிலைப்பாட்டினை அவரது பேச்சு வெளிப்படுத்தியிருக்கிறது. தாங்கள் செய்த பாவத்தில் இருந்தும், பழியில் இருந்தும் தப்பிக்க பேய், பில்லி, சூனியம் எனப் பேசுகிறார். கிராமங்களில்தான் மனநோயோ, கெடுநோய்களோ அவற்றை நேரடியாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தெய்வக்குற்றம், பில்லி, சூனியம், ஏவல் என காரணம் கற்பிப்பார்கள். எடியூரப்பாவும் ஏராளமான குறைகளை வைத்துக்கொண்டு அதை மறைக்க இப்படி ஏதேதோ உளறுகிறார். பாவம்... கர்நாடகாவில் உள்ள அப்பாவி மக்களை குழப்ப பில்லி, சூனியத்தை ஆயுதமாக்கி அரசியலாக்கப் பார்க்கிறார் எடியூரப்பா!

ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)

அவர் இப்போது நிர்வாண கோலத்தில் பூஜைகள் செய்து வருவதாக கேள்விப்பட்டேன். அறிவியல் முன்னேற்றங்களாலும், விழிப்புணர்வுகளாலும் மக்கள் பேய்களின் பிடியிலிருந்து விடுபட்டு அறிவுள்ள மனிதர்களாக வாழ முயன்று கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அவர்களை மதம், கடவுள், பில்லி சூனியம் மற்றும் பேய்களிடம் ஒப்படைக்கும் பணியைத்தான் பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் எடியூரப்பாவின் பேச்சு. அவரை பில்லி, சூனியம் வைத்து முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியுமென்றால் அதை முதலில் அவரது கட்சிக்காரர்கள்தான் செய்திருப்பார்கள். இத்தகைய பிற்போக்குத்தனம் கொண்ட ஒருவர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்றழைக்கப்படும் பெங்களூருவைத் தலைநகராகக் கொண்ட கர்நாடகாவில் முதலமைச்சராக இருப்பது அம்மக்களுக்கு பெருமை சேர்க்காது.  
    
டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக)

பில்லி சூனியம் என்பது மொத்த மூடத்தனம். ஏற்கனவே ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் எடியூரப்பாவின் பதவிக்கு வேட்டு வைக்கும் வகையில், அவர் செய்துள்ள நிலமோசடி உள்பட பல குற்றங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவர் பதவி விலக அதிக நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்கவே பில்லி சூனியத்தைச் சொல்லி கவனத்தை திசை திருப்புகிறார். கிராமப்புறங்களில் அறியாத மக்களிடம் உள்ள இந்த மூடநம்பிக்கையை ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் எப்படி நம்புகிறார் என்பதுதான் தெரியவில்லை. பொருத்தமற்ற குற்றச்சாட்டை சொல்பவரால் எப்படி பொறுப்பான ஆட்சியை நடத்த முடியும்?
தொகுப்பு: ஆர்.எம்.திரவியராஜ்