+2 தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவது எப்படி? இயற்பியல்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        யற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் என 4 பாடங்களில் 200 மதிப்பெண் அள்ளியவர் சரவணன். மொத்தம் 1181 மதிப்பெண் பெற்ற நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவரான இவர், இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாண்டு படிக்கிறார். இயற்பியலில் சென்டம் அடித்த அனுபவத்தோடு, இந்த ஆண்டு தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் சரவணன்.

‘‘தியரி, பிராக்டிகல்  இரண்டையும் சரியாகச் செய்தால்தான் முழுமையாக 200 மதிப்பெண் பெற முடியும். வினாக்களுக்கு உரிய விடைகளை மட்டும் படிக்காமல், புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டும். அப்போதுதான் பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதோடு, புத்தகத்தில் உள்ள எந்தப்பகுதியில் இருந்தும் ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படலாம். ஒரு மதிப்பெண் பதில்களே சென்டம் எடுக்கும் வாய்ப்பை உறுதியாக்குகின்றன.

 தேர்வுக்கு சில மாதங்கள் முன்பே பாடங்கள் முழுவதையும் படித்துவிட வேண்டும். அதன் பிறகு படித்ததைத் திருப்பிப் பார்ப்பதே வேலை. திருப்பிப் படிக்கும்போது சிலவற்றில் குழப்பங்கள் எழும். அதையும் தெளிவுபடுத்திக்கொண்டு தேர்வுக்கு தயாராக நேரம் சரியாக இருக்கும்.

வால்யூம் 1ல் உள்ள எல்லாப் பாடங்களும் எளிமையானவை. வால்யூம் 2ல் உள்ள 9வது பாடமான semiconductor, 10வது பாடமான communication ஆகியவை கொஞ்சம் கடினமானவை. ஆனாலும், இவற்றை அதிக கவனத்தோடு ஒருமுறைக்கு பலமுறை படித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

 communication பாடத்தில் வரைபடங்கள் அதிகமிருக்கும். அவற்றைப் புரிந்துகொண்டாலே தியரியை எளிதாக எழுதி விடலாம். semiconductor பொறியியல் சார்ந்தது என்பதால், மேற்படிப்புக்கும் இது உதவும்.

 கேள்வித்தாளைப் பார்த்த உடனே இந்தக் கேள்விகளுக்குத்தான் விடை எழுதப்போகிறோம் என்பதை தீர்மானித்துவிட வேண்டும். கணக்கீடு,Derivation கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதினால் நேரமும் மிச்சமாகும். மதிப்பெண்களும் முழுமையாகக் கிடைக்கும். தெளிவாக பதில் எழுதுவது மட்டுமே மதிப்பெண்ணை உயர்த்தும்.

 
சிலருக்கு கேள்வித்தாளைப் பார்த்த உடனே ‘நாம் சென்டம் எடுக்க முடியாதோ’ என்கிற கலக்கம் வந்து விடும். அந்த மனநிலை வந்தால் குழப்பங்கள் அதிகரித்து, சரியாகத் தெரிந்த விடைக்கும் தவறான பதிலை எழுதி விடுவோம். மனம் தெளிவாக இருக்கும்போதுதான் சரியாக யோசிக்க முடியும்.

 இயற்பியலில் ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட ‘கட் ஆஃப் மார்க்’கில் 0.25 மதிப்பெண் குறைந்து விடும். அது நாம் விரும்பிய மேற்படிப்புக்கும் தடையாக இருக்கும். அதனால் எழுதிய விடைகளைத் திருப்பிப் பார்த்து தவறுகள் இருந்தால் சரிசெய்வது மிக அவசியம்... வாழ்த்துகள்’’ என்கிறார் சரவணன்.

சரவணனின் இயற்பியல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் என்ன சொல்கிறார்?

‘‘சென்டம் விரும்பும் மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்விகள் மிக அவசியம். பழைய கேள்வித்தாள்களை சேகரித்துப் படிப்பது நல்லது.

 3 மதிப்பெண் வினாக்கள் 20 கொடுக்கப்பட்டிருக்கும் 15 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். இதில் 5 கேள்விகள் கணக்குகளாக இருக்கும். அவை எளிமையானதாக இருக்கும் என்பதால் கட்டாயம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நேரமும் மிச்சமாகும்... மதிப்பெண்ணும் முழுமையாகக் கிடைக்கும்.

 பொதுவாக 2வது பாடத்தில் இருந்து மூன்று கேள்விகள், 9வது பாடத்தில் இருந்து 4 கேள்விகள் வரும் என்பதால் இந்த இரண்டு பாடங்களையும் தெளிவாகப் படிப்பது நல்லது.

 5 மதிப்பெண் வினாக்களில் கட்டாயம் கணக்கு கேள்வி ஒன்று இடம்பெறும். அந்தக்கேள்வியும் கூட ஒரே பாடத்தில் இருந்துதான் கேட்கப்படும். அதைத் தவிர 5 கணக்கு கேள்விகள் கேட்கப்படும். முடிந்தவரை கட்டாயக்கணக்கு தவிர, மற்ற கணக்கு கேள்விகளை இங்கே தவிர்ப்பது நல்லது. 8 கேள்விகளில் நான்குக்கு விடையளித்தாலே போதும்.

 10 மதிப்பெண் கேள்விகளில் எளிதான கேள்விகளைத் தேர்வுசெய்ய வேண்டும். சிக்கலான படங்களுடன் வரக்கூடிய கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். எளிதான, நேரத்தை மிச்சப்படுத்தக்கூடிய கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

 குறைந்தது மூன்று மாதிரி தேர்வுகளையாவது எழுதிப் பயிற்சி செய்வது நேரம், கேள்விகளை தேர்ந்தெடுப்பது, கவனம் செலுத்துவது என எல்லாவற்றுக்கும் உதவும்’’ என்கிறார் இயற்பியல் ஆசிரியர் பால சுப்ரமணியன்.
 ஆர்.எம்.திரவியராஜ்
படம்: ஆர்.சந்திரசேகர்