அழிந்துவரும் தமிழர் இசைக்கருவிகள் உடல்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineயன்பாட்டில் உள்ள தோற்கருவிகள் அனைத்தையும் மூன்றாகப் பிரிக்கிறார்கள் இசைவாணர்கள். ஒன்று, பானை வடிவ வாத்தியங்கள். இவை ஒருமுகம் கொண்டவை. ஒலியைப் பெருக்கும் வசதி கொண்டவை. தரையில், காலுக்குக் கீழே வைத்து வாசிக்கப்படுபவை. பஞ்சமுக வாத்தியம் இவ்வகைக்கான உதாரணம். மற்றொரு வகை, சட்டத்தில் பொருத்தப்பட்ட வாத்தியங்கள். இவையும் ஒருமுக வாத்தியங்களே. ஆனால் ஒலி பெருக்கும் வசதியற்றவை. ஒரே சட்டத்தில் தோலால் வார்க்கப்படுபவை. தப்பு, மகுடம் ஆகியவை இவ்வகைக் கருவிகள். மூன்றாம் வகை, குழல் வடிவ வாத்தியங்கள். ஒலிபெருக்கும் வசதி கொண்ட, இவ்வகை நீள்வடிவ வாத்தியங்களில் ஒன்றுதான் உடல்.

பார்க்க தவிலைப் போலவே இருக்கும் உடல், அதைவிட சற்றுப் பெரியது. உடல் பருத்து, ஓரங்கள் சுருங்கி, இரண்டு முகங்களிலும் தோல் கட்டப்பட்ட கருவி. தவிலுக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. தவிலின் ஒரு முகத்தில் குச்சியாலும், மற்றொரு முகத்தில் கை அல்லது கூடுகள் கொண்டும் வாசிப்பார்கள். உடலின் இருமுகங்களையும் குருவிக்கொம்புக் குச்சி கொண்டே வாசிப்பார்கள். குருவிக்கொம்பு குச்சி என்பது திருவண்ணாமலை, வேலூர் வட்டாரக் காடுகளில் கிடைக்கும் ஒருவகை செடியில் ஒடிக்கப்படுகிறது. வளையும் தன்மையுடையது. அரளிக்குச்சி, சவுக்குக்குச்சிகள் கொண்டும் சிலர் வாசிக்கிறார்கள்.

தவிலின் இருமுகங்களான வடந்தலைக்கும், இடந்தலைக்கும் நுண்ணிய அளவு வேறுபாடு உண்டு. உடலின் வலந்தலை, இடந்தலை இரண்டும் ஒரே அளவு கொண்டவை. தவிலுக்கு தாளக்கணக்கு. உடலுக்கு ஜதிக்கணக்கு. தவிலைப் போல உடலுக்கு இலக்கண வகைகள் ஏதுமில்லை. உள்ளத்து உணர்வுகளை ஓசையாக உணர்த்துவதே உடலின் தன்மை.
தவிலில் வடந்தலைக்கு கன்றுத்தோலும், இடந்தலைக்கு ஆட்டுத்தோலும் வார்க்கப்படும். உடலுக்கு இருபுறமும் ஒன்றுபோல ஆடு அல்லது மாட்டுத்தோல் வார்க்கப்படும்.

ஐந்திணைகளில் குறிஞ்சி நில மக்கள் பயன்படுத்திய துடி என்ற தோற்கருவியின் பிற்கால வடிவமே உடல் என்கிறார்கள். இதையும் கருத்துப்பரப்பும் கருவியாக தொல்தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பலாமரக் கட்டையில் தோலைக் கட்டி, புளியங்கொட்டை பசை கொண்டு இழுத்து ஒட்டியே உடல் தயாரிக்கப்படுகிறது. இந்த புளியங்கொட்டை பசை மிகவும் பலம் வாய்ந்தது. புளியங்கொட்டையை நன்கு ஊறவைத்து, அரைத்து, தகுந்த பதத்தில் காய்ச்சினால், அதை மிஞ்ச வேறெந்த பசையும் இல்லை. சீர்காழி, திருவையாறு பகுதிகளில் உடல் செய்யப்படுகிறது.

இந்த இசைக்கருவியை, ‘சிவகான வாத்தியம்’ என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த சிவவாத்தியக் கலைஞர் தமிழரசன். ‘‘சங்கு, எக்காளம், திருச்சின்னம், பிரம்மதாளம், உடல் ஆகியவை சிவனுக்கு உகந்த வாத்தியங்கள். இவற்றை பூதகணங்கள் இசைத்து சிவனை மகிழ்ச்சிப்படுத்தின. இந்த வாத்தியங்கள் முசுகுந்த சக்கரவர்த்தி வாயிலாக பூலோகத்துக்கு வந்தவை’’ என்கிறார் தமிழரசன்.

பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என அளவின் அடிப்படையில் இக்கருவியை வகைப்படுத்தலாம். கோயில்களில் வாசிக்கப்படும் சர்வவாத்தியங்களில் இக்கருவிக்கு முக்கிய இடமுண்டு. திருவண்ணாமலையில் இறைவன் வீதியுலா செல்வதை 11 உடல் வாசித்து ஊருக்கு அறிவிக்கும் முறை இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், குமரக்கோட்டம் முருகன் கோயில், மதுரை, உறையூர், திருவிடைமருதூர் சிவாலயங்களிலும் உடல் உள்ளது. சிதம்பரத்தில் 5ம் நாள் திருவிழாவில் தெருவடைத்தான் என்ற பெரும் சப்பரம் நின்று கிளம்பும் நேரங்களில் உடல் வாசிக்கப்படும். பிச்சாடனர் வீதியுலாவிலும் உடல் உடன் செல்கிறது.

நாதஸ்வரத்தின் பக்கவாத்தியமாக இசைக்கப்படும் இந்த வாத்தியமானது, கோயிலுக்கு உட்புறத்தில் வைத்து வாசிக்கப்படும். ஊர்வலம், உற்சவக்காலங்களில் மட்டுமே கொடிமரம் தாண்டி வெளியே கொண்டு வரப்படும்.

‘‘உடல் இசைக்கருவியின் இசை உற்சாகம் ஊட்டுவது மட்டுமல்ல. மனதை சாந்திப்படுத்தும். மருத்துவ குணம் மிக்கது. அதைக் கேட்டால் மனநலம் பாதித்தவர்கள் மீண்டுவர வாய்ப்புள்ளது’’ என்கிறார் மூத்த இசைக்கலைஞரான பாண்டிச்சேரி ராமலிங்கம். இன்று மிஞ்சியுள்ள உடல் வாசிக்கும் கலைஞர்களில் பெரும்பாலானோர் இவரது மாணவர்கள்தான். உடல் போன்ற சிவவாத்தியங்களை காத்து, பயிற்றுவிக்கும் அரிய பணியைச் செய்கிறார்.

பெரும்பாலான கோயில்களில் உடல் வாசிக்க வேண்டும் என்ற ஆகமங்கள் இருந்தாலும், வாசிக்கப்படுவதில்லை. சில கோயில்களில் பெயருக்கு சில அடிகளோடு நிறுத்திக் கொள்ளப்படுகிறது. பல கோயில்களில் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இது இருக்கிறது. உரிய முறையில் வாசிக்கும் கலைஞர்கள் அருகிவிட்டனர். இக்கருவியை கற்றுக்கொள்ள முறையான இலக்கணங்கள் வகுக்கப்படாததால், கச்சேரிகளிலும் இக்கருவிக்கு இடமில்லாமல் போய்விட்டது.

‘‘சில கோயில்களில் இக்கருவியை ஒருமுகத்தில் மட்டுமே வாசிக்க வேண்டும்’’ என்று நியதி இருப்பதாகச் சொல்கிறார் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உடல் வாசிக்கும் செல்வரத்தினம். ‘‘வரதராஜர் கோயிலில் ஒருமுகம் மட்டுமே வாசிப்பார்கள். சிவாலயங்களில் இருமுகத்திலும் வாசிக்கப்படும். அண்மைக்காலமாக இக்கருவி வாசிக்கும் மரபு மெல்ல மெல்ல அழிந்து வருகிறது’’ என்கிறார் அவர்.
வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்,  பாஸ்கரன்