காத்திருந்து கனிந்த உயர்ந்த காதல்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ங்கீதாவை ஞானஜோதி பார்த்ததே இல்லை. பேசியதுகூட இல்லை. சங்கீதாவைப் பற்றி அம்மாதான் சொல்லியிருக்கிறார். அம்மாவின் வார்த்தைகளிலேயே சங்கீதாவை தரிசித்த ஞானஜோதி, ‘திருமணம் என்று ஒன்று நடந்தால், அது சங்கீதாவோடுதான்’ என்று உறுதியாக இருந்தார். இறுதியில் ஜெயித்தார். வழக்கமான விஷயம்தானே என்று இதை ஒதுக்கித் தள்ளமுடியாது. காரணம், ஞானஜோதியின் உயரம் 3 அடி; சங்கீதாவின் உயரம் இரண்டரை அடி!

இந்த ‘உயர்ந்த’ காதல் கதை நடந்தேறியது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தில். ஞானஜோதி இந்த ஊரின் செல்லப்பிள்ளை. வேலை செய்பவர்களுக்கு கூலி வாங்கித் தருவதில் இருந்து, ரேஷன்கடையில் அரிசி வாங்கித் தருவது வரை எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து தருவார். உடன்பிறந்த மற்ற நான்கு பேரும் சராசரி உயரம்தான். இவரின் உயரக்குறைவுக்கு மருத்துவர்களுக்கே காரணம் தெரியவில்லை.

‘‘வயசு ஆக ஆக வருத்தமும் கோபமும்தான் வளந்துச்சு. நான் வளரலே. அம்மாதான் எனக்கு உசிருக்கு உசிரா இருந்து ஆறுதல் சொல்லும். ‘உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குடா. எல்லாருக்கும் குறை இருக்கு. உனக்கு உடம்பில... மத்தவங்களுக்கு மனசில’ன்னு அம்மா சொல்ற வார்த்தைகள் இதமா இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். ‘நாலு பேருக்கு நல்லது செஞ்சா எல்லாரும் உன்னை மதிப்பாங்க’ன்னு அம்மா சொல்லும். அதனாலே, இழுத்துப் போட்டுக்
கிட்டு மத்தவங்களுக்கு உதவி செய்ய ஆரம்பிச்சேன்.

அண்ணனுங்களுக்கு எல்லாம் கல்யாணம் முடிஞ்சபிறகுதான் எனக்குள்ள ஒரு ஏக்கம். தொடக்கத்துல மனசுல ஒரு தயக்கம் இருந்துச்சு. ‘இந்த மாப்பிள்ளை வேண்டாம்’னு சொல்லிட்டாங்கன்னா கஷ்டமா போயிருமே. அம்மாகிட்ட உறுதியா சொல்லிட்டேன்... என்னை விட உயரம் கம்மியான பொண்ணாப் பாருங்கன்னு. அப்படிப் பாத்த பொண்ணுதான் சங்கீதா’’  மனைவியின் தோளில் கைபோட்டு வளைத்துக் கொள்கிறார் ஞானஜோதி.

சங்கீதா முகத்தில் அளவிட முடியாத பெருமிதம். ‘‘எங்க ஊரு புலவன்குப்பம். ஏதோ ஜீன் கோளாறால உயரம் கம்மியாயிடுச்சு... அதுக்காக வாழ்க்கையே இல்லைன்னு ஆயிடுமா? என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க... ‘உனக்கும் ராஜகுமாரன் மாதிரி புருஷன் வருவான்’னு. சொன்ன மாதிரியே வந்துட்டார்!’’ என்று சிரிக்கிறார் சங்கீதா.

சங்கீதாவை ஒரு கோயில் திருவிழாவில் பார்த்த ஞானஜோதியின் அம்மாவுக்கு ரொம்ப பிடித்துப் போனது. மகனிடம் சிலாகித்துச் சொல்ல, அந்தக் கணத்தில் இருந்தே சங்கீதாவை மனதளவில் இல்லறத்துணையாக்கிக் கொண்டார் ஞானஜோதி.

‘‘எங்க வீட்டுக்கு பெண் கேட்டுவந்தாங்க. எங்க அப்பா, ‘இப்போ பொண்ணுக்கு கல்யாணம் பண்றமாதிரி இல்லே’ன்னு சொல்லி அனுப்பிட்டார். ஆனா இவரு, எவ்வளவு நாள் காத்திருந்தாலும் என்னைத்தான் கட்டுவேன்னு சொல்லிட்டாராம். சரியா சாப்பிடாம, தூங்காம சுத்தியிருக்கார். எனக்கும் இவரைப் பத்தி கேள்விப்பட்டதுல இருந்து இவர் நினைப்பாவே இருந்துச்சு. என்மேல இவரு வச்சிருக்கிற அன்பைப் பாத்துட்டு, பொண்ணைத் தர்றோம்னு சொல்லிட்டாங்க’’ என்று வெட்கப்படும் சங்கீதாவும் 10ம் வகுப்புவரை படித்திருக்கிறார்.

திருமணம் நிச்சயமானதும் மணிக்கணக்கில் இருவரும் போனில் மொக்கை போட்டு காதல் வளர்த்திருக்கிறார்கள். கடந்த வாரம், ஊரே வாழ்த்த, பண்ருட்டியில் பிரமாண்டமாக திருமணம். ‘‘என் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை கிடைக்கணும். எல்லாரும் கூட்டுக்குடும்பமா வாழணும். ரொம்ப நிம்மதியா இருக்கேன். சின்ன மனக்குறை இருக்கு. வெளியூர்களுக்குப் போனா ஏதோ விசித்திரத்தைப் பாக்குற மாதிரி எங்களைப் பாக்குறாங்க. அன்னைக்கு கோயிலுக்குப் போனோம். பெரிய கூட்டமே கூடியிருச்சு. ஆசையா எங்கேயும் போகமுடியலே...நாங்களும் மனுஷங்கதானே... எங்களுக்கும் எல்லா ஆசாபாசமும் இருக்கும்தானே?’’ என்று ஏக்கமாகக் கேட்கிற சங்கீதாவின் வார்த்தைகள் இப்போது செவிகளைச் சுடுகிறது.
 வெ.நீலகண்டன்
படங்கள்: மணிவண்ணன்