பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine  


       ப்போதும் சின்ன நகரங்களுக்குச் சென்றால் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், காய்கறிச் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் ஆட்களைப் பார்க்க முடியும்... அந்த ஆள் ஒரு பெட்டிக்குள் நல்ல பாம்பு வைத்திருப்பான்... இன்னொரு ஓரத்தில் கீரிப்பிள்ளை ஒன்றைக் கட்டிப் போட்டிருப்பான். அடிக்கடி பாம்பு இருக்கும் பெட்டியைத் திறந்து காட்டி, ‘இந்த நல்ல பாம்புக்கும் அந்த கீரிப்பிள்ளைக்கும் சண்டை விடப் போறேன்...’ என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

இயற்கையிலேயே பாம்பும் கீரியும் எதிரிகள் என்பதால், கீரி  பாம்பு சண்டையைப் பார்க்க எல்லோரும் ஆவலாக இருப்பார்கள். ஆனால், அந்த ஆள் கடைசிவரையில் கீரி & பாம்பு சண்டையைக் காட்டாமலே தாயத்துகளை விற்றுவிட்டு இடத்தைக் காலி செய்துவிடுவான்.

இப்போது எதற்கு பாம்பாட்டி கதை என்கிறீர்களா? கடந்த வாரம் வாசகர் ஒருவர், ‘என்ன சார்... எந்தப் பங்கை வாங்கலாம்னு சொல்லவே மாட்டேங்கறீங்களே... கீரி  பாம்பு சண்டை கணக்கா சஸ்பென்ஸ் கொடுக்கிறீங்களே’ என்று கேட்டார். சுருக்கமாகச் சொன்னால், என்னை பாம்பாட்டி என்று சொல்லிவிட்டார். ஆனால், அப்படி அல்ல... ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது என்ற கூடுதலான பொறுப்புதான் இவ்வளவு நிதானமாக எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கக் காரணம்.

பண்டைய காலத்தில் சந்திரகுப்தர் என்ற அரசர் இருந்தார். அவருடைய இளம் பிராயத்தில் ஒருமுறை எதிரிகளிடம் நாட்டை இழந்துவிட்டார். அதன்பிறகு ஓரிரு முறை தலைநகர் மீது படையெடுத்தும் அவரால் நாட்டை மீட்க முடியவில்லை. அப்போது மாறுவேடத்தில் ஒரு குடிசை வாசலில் படுத்திருந்தாராம். அன்று இரவு அந்தக் குடிசையில் இருந்த தாய் குழந்தைகளுக்கு தட்டில் சூடாகக் கூழ் ஊற்றிக் கொடுத்தாராம். ஒரு குழந்தை சட்டென்று கூழின் நடுவே கைவைக்க... சூடு பொத்துவிட்டதாம்.

சட்டென்று அந்தக் குழந்தையின் தலையில் தட்டிய அந்தத் தாய், ‘ஓரமாக இருந்து சாப்பிடு... சூடு இருக்காது. நம்ம அரசனைப் போல அறிவில்லாமல் நடுவிலே முட்டி மோதி அலறுகிறாயே...’ என்று திட்டினாராம். சந்திரகுப்தருக்கு சட்டென்று தன் தவறு உறைக்க, அடுத்து படை திரட்டி, எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றி, மெதுவாக தலைநகரைக் கைப்பற்றினாராம்.
நாமும் எடுத்த எடுப்பிலேயே சந்தைக்குள் புகுந்தால் நஷ்டம் ஏற்பட்டு, ‘ஐயோ... அம்மா’ என்று கத்திக் கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டுவிடும். அதனால்தான், சுற்றி வளைத்து சாதக பாதகங்களைச் சொல்லி சந்தை முதலீட்டுக்குத் தயார் செய்கிறேன்.

சரி, இப்போது சந்தை இருக்கும் சரிவான சூழலில் எதில் முதலீடு செய்யலாம்?

இந்த பிப்ரவரி மாதம் என்பது பட்ஜெட் காலம்... அரசாங்கம் அடுத்த ஓராண்டுக்கான செலவுகளுக்கு திட்ட முன்வரைவைத் தாக்கல் செய்து, அனுமதி பெற்று செயல்படுத்தப் போகிறது. அப்படி இருக்கும்போது எந்தெந்த துறைகள் எல்லாம் பட்ஜெட்டால் பாதிக்கப்படும் என்பதைக் கவனித்து முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

சந்தை பற்றிச் சரியாக இன்னமும் தெரிந்து கொள்ளாத ஆரம்பகட்ட முதலீட்டாளராக நீங்கள் இருக்கும்பட்சத்தில், மிகவும் பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்வதுதான் சரியாக இருக்கும். அந்த அடிப்படையில் சென்செக்ஸ் பங்குகளில் முதலீடு செய்வதுகூட ஒருவகையில் பாதுகாப்பான முதலீடுதான்.

சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 நிறுவனங்களில் எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வது என்பதற்கு இப்போதைய சூழலையும், உங்களுடைய பொருளாதாரச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். சென்செக்ஸ் பங்குகளிலேயே சில நிறுவன பங்குகள் குறைவான விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் வெறுமனே குறைவான விலை என்ற ஓர் அளவுகோலை மட்டும் பார்க்காமல், அதற்கு சென்செக்ஸ் பட்டியலில் என்ன வெயிட்டேஜ் இருக்கிறது என்பதையும் பார்த்து பங்குகளைத் தேர்வு செய்வது நல்லது.

‘அது என்ன சென்செக்ஸ்...’ என்ற கேள்வியை யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ‘சென்சிட்டிவ் இண்டெக்ஸ்’ என்ற பெயரின் சுருக்கம்தான் சென்செக்ஸ். அதில் முப்பது நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் சென்செக்ஸ் குறியீட்டு எண் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வெயிட்டேஜ் என்ன என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் வெயிட்டேஜில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நிறுவனங்கள் ரிலையன்ஸும் ஓஎன்ஜிசியும்தான். இரண்டுமே என்ன துறை
களைச் சேர்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியும். ரிலையன்ஸ் ரீஃபைனரிஸ் துறையைச் சேர்ந்தது. ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் துறையைச் சேர்ந்தது.

இன்றைய சூழலில் இந்த இரண்டு நிறுவனங்களும் எவ்வளவு முக்கியமானவை என்பது சொல்லாமலே புரியும். ஆனால், இந்த நிறுவனப் பங்குகளின் விலையைப் பார்த்தால் தலையைச் சுற்றும். ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 895 ரூபாய் [01.02.2011 நிலவரப்படி] ஓஎன்ஜிசி நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 1176 ரூபாய் [01.02.2011 நிலவரப்படி].
‘கையில் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு களத்தில் இறங்கிவிடலாம் என்று நினைத்தால் முடியாது போலிருக்கிறதே... ரிலையன்ஸ் பங்கு ஒன்றை வாங்கலாம்... ஓஎன்ஜிசி பங்கை வாங்குவது பற்றி யோசிக்கக்கூட முடியாது போலிருக்கிறதே...’ என்று தோன்றுகிறதா?

விடுங்கள்... முப்பது நிறுவனங்களில் இரண்டுதானே இப்படி எகிடுதகிடான விலையில் இருக்கின்றன... இன்னும் இருபத்தெட்டு நிறுவனங்களையும் அலசிப் பார்த்துவிடலாம். அப்படியே அடிப்படை சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டால் எந்தப் பங்கைப் பற்றியும் முடிவு செய்துவிடமுடியும். இந்த முப்பது என்பது நம்முடைய வசதிக்காகத்தான்... உங்களுக்கு எந்த நிறுவனப் பங்கு பற்றி எந்தக் கேள்வி இருந்தாலும் உடனே கேளுங்கள்... தெளிவுபடுத்திக் கொள்ளலாம்!
காத்திருங்கள்... சொல்கிறேன்.
சி.முருகேஷ்பாபு