பறந்து சிரித்து பயந்து உறைந்து ஒரு பயணம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

   டிப்பைத் தாண்டிய சினிமா தேடலுள்ள தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜும், இயக்குநர் ராதாமோகனும் கைகோர்த்தால் ஒரு இனிய அனுபவத்துக்கான வேதிவினை நிகழ்கிறது என்று அர்த்தம். கடந்த ‘அழகிய தீயே’, ‘மொழி’, ‘அபியும் நானும்’ படங்கள் இதை மெய்ப்பித்தன. இப்போது இவர்களது பயணம் இன்னொரு பயணத்தின் துவக்கமாக அமைந்து, அதுவும் ஒரு பயணத்திலேயே முடிந்தும் இருக்கிறது. டூயட் மூவீஸை சத்தமில்லாமல் சைலன்ட் மூவீஸாக மாற்றிவிட்ட பிரகாஷ்ராஜ், இந்த ‘பயணம்’ படத்தை தயாரித்திருக்கிறார்.

நகரம் சார்ந்த மனிதர்களின் மன உணர்வுகளை வருடும் படங்களைத் தந்த ராதாமோகன் இந்த முறையும் அதிலிருந்து விலகவில்லை. ஆனால் இந்தப் ‘பயணம்’ இந்தமுறை மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாய்கிறது.

‘‘ஒரு விமானம் கடத்தப்படுகிறது... இதுதான் கதை. விமானக் கடத்தலும், அதை மீட்டலும் அநேக படங்கள்ல நாம் பார்த்திருக்க விஷயங்கள்தான். அதிலிருந்து இந்தப்படத்தை வேறுபடுத்திக் காட்டறது, அதன் எல்லாப் பக்கங்களிலும் எத்தனை நிகழ்வுகள் இருக்கோ அத்தனைப் பக்கங்கள்ல இருந்தும் கதை சொல்றதுதான்...’’ என்று ஆரம்பித்த ராதாமோகன் தொடர்ந்தார்.

‘‘சென்னையிலிருந்து கிளம்பற விமானம் கடத்தப்பட்டு திருப்பதியில தரையிறங்குது. அதுக்குள்ள 100 பேர். கடத்தப்பட்டது தெரிஞ்சு எப்படி  ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருந்தாங்க, அஞ்சு நாள் அடைபட்டுக் கிடந்ததில அவங்க மனநிலை மாற்றம் எப்படி இருந்ததுன்னு அவங்க பக்கத்து சூழ்நிலைகள் ஒருபக்கம், கடத்திய தீவிரவாதிகளின் கோரிக்கைகள், அவங்க பக்கத்திலும் இருக்கிற நோக்கங்கள், நியாயங்கள், அவங்க கோரிக்கைகளுக்கு உடனே செவிசாய்க்க முடியாத அரசாங்க அதிகாரிகளின் நிலை, பயணிகளை மீட்க வரும் கமாண்டோக்களுக்கு உரிய நேரத்தில உரிய அதிகாரங்கள் கிடைக்கறதில ஏற்படற தாமதங்கள், இப்படியான நெருக்கடியில செயலாற்றியும், அதுக்குப் பின்னால நடந்த நிகழ்ச்சிகளினால அந்த உழைப்பு விரயமாகிப் போனதில கமாண்டோக்களுக்கு இருக்கிற அழுத்தம், கடத்தலை வெளியே சொல்ற மீடியாக்களின் போக்கு, அதைப் பார்த்துக்கிட்டிருக்க பொதுமக்களின் பார்வை, தங்களுக்கு நெருக்கமானவங்களுக்கு நேர்ந்த கொடுமையில அதிர்ச்சியடையும் பயணிகளோட உறவினர்கள்னு படம் பயணிக்குது.

பறக்கிற விமானம் நின்னாலும், அது தொடர்பான நிகழ்ச்சிகள் றெக்கை கட்டிக்கிறது இந்த ஸ்கிரிப்ட்டோட சுவாரஸ்யம். இதுவும் மனித உறவுகளோட உணர்வுகளையும், உன்னதங்களையும் சொல்ற படம்தான்.
அதனால எல்லாரும் கேட்க விரும்பற ‘ஹியூமர் இருக்கா...’ன்ற கேள்விக்கு, ‘இருக்கு...’ன்னு திருப்தியான பதிலையே சொல்ல விரும்பறேன். ஏன்னா, ரெண்டு மணி நேர சீரியஸ் கதை, பாடல்களும் இல்லைங்கிற ட்ரீட்மென்ட்ல ஹியூமர் மட்டுமே இறுக்கத்தைத் தவிர்க்க உதவும்.

100 பயணிகள், அவங்களோட வெவ்வேறு குணங்கள்னு வர்றதால இதில ஹீரோ, ஹீரோயினுக்கெல்லாம் இடமில்லை. சூழ்நிலைதான் ஹீரோ. இருந்தாலும் எதிர்பார்க்க இயலாத சுவாரஸ்யமா இதில நாகார்ஜுனா நடிக்கிறார். கமாண்டோவா வர்ற அவரை நடிக்க ஒத்துக்கவைக்க முடியுமான்னு ஒரு தயக்கம் இருந்தது. தெலுங்கிலன்னா அவருக்குன்னு ஒரு ஓபனிங் சாங், டூயட்கள், அஞ்சு ஆக்ஷன் சீக்வன்ஸுன்னு இருக்கும். இதெல்லாம் இல்லாத ஒரு ஸ்கிரிப்ட்டுக்கு ஒத்துக்குவாரான்னு தோணினாலும், கதையைச் சொன்னேன். கேட்டுட்டு ஒரு திருத்தம் கேட்காம நடிச்சுத் தந்தார்.

 அதுவே இந்தப்படத்தை பிரமாண்டமா தெலுங்கிலயும் ஒரே நேரத்தில தயாரிக்க ஆந்திர முன்னணித் தயாரிப்பாளரான தில்ராஜுவுக்கு எண்ணத்தைக் கொடுத்தது. கடத்தல்காரர் கூட பேச்சுவார்த்தை நடத்தற அரசாங்க அதிகாரியா பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இவங்களோட தெலுங்கு பிரமானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், சனா கான், அனுஷ்கா ஷெட்டி, ரிஷி, பரத் ரெட்டின்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு படத்தில. பாடல்கள் இல்லாத படத்தில பின்னணி இசைக்கு இருக்க முக்கியத்துவம் தெரிஞ்சு இசையமைச்சிருக்க பிரவீன்மணி, ஒளிப்பதிவை உணர்வுகள்ல சொல்ற கே.வி.குகன்னு ஒரு டீம் இதன் பின்னணில இருக்கோம். படமாக்க நிஜ ஃபிளைட்டும், ஏர்போர்ட்டும் கிடைக்காத சூழல்ல, ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில திருப்பதி ஏர்போர்ட்டையும், விமானத்தையும் கவனமா வடிவமைச்ச ஆர்ட் டைரக்டர் கதிரும் இதில கவனிக்கப்பட வேண்டியவர்.

கண்ணுக்குத் தெரியாம கதையோட நியாயங்களுக்குள்ள இருக்கிற நிஜமான பைலட்களும், விமான எஞ்சினியர்களும்கூட நன்றிக்குரியவர்கள். சினிமா தியேட்டர் சீட்டுக்கும் பெல்ட் இருக்கிறதா உங்களை உணரவைக்கத்தான் இந்த முயற்சி..!’’
வேணுஜி