பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

   ‘பட்டிமன்றமும் பாப்பையாவும்’னு தலைப்பை வச்சுக்கிட்டு இவரு பாட்டுக்கு சொந்தக் கதையைப் பேசிக்கிட்டு இருக்காரேன்னு சிலருக்கு யோசனையா இருக்கலாம். இந்த பட்டிமன்ற வாழ்க்கை இருக்கே... அது தொடங்கினதே என்னோட கால் நூற்றாண்டு வாழ்க்கைக்குப் பிறகுதான். வேலூர் ஊரிஸ் கல்லூரியில நடந்த முத்தமிழ் விழாவிலதான் பட்டிமன்றம்னா என்னன்னே தெரிஞ்சுக்கிட்டேன்.

இன்னைக்கு என் பட்டிமன்றங்கள் மக்களுக்கு இணக்கமாப் போனதுக்குக் காரணம் என்னன்னு யோசிச்சுப் பாக்குறேன். என் வாழ்க்கையில இருந்தும், நண்பர்களோட, உறவுகளோட வாழ்க்கையில இருந்தும் எடுத்துப் பேசுறதும் ஒரு காரணமா இருக்கலாம். யதார்த்தத்துக்குப் புறம்பா, மேடை சுவாரஸ்யத்துக்காக எதையும் பேசுறவனில்லை நான். நிகழ்காலம் இன்னைக்குப் பரபரப்பா சுழன்றுகிட்டு இருக்கலாம். ஆனால், என் இறந்தகாலம்ங்கிற அச்சுக்கு மேல நின்னுதான் அது சுழலுது. நான் பட்டிமன்றத்தைப் பத்தி பேசணும்னா என் தொடக்க கால வாழ்க்கையைப் பத்தியும் பேசித்தான் ஆகணும்.

வேலூர் ஊரிஸ் கல்லூரியிலதான் நான் ஒரு பேச்சாளனா அங்கீகரிக்கப்பட்டேன். பேச்சுத்துறையில எனக்கான கதவு அங்கேதான் திறக்கப்பட்டுச்சு. அப்படித் திறக்க காரணமா இருந்தது அந்த புறநானூறுப் பாடலும், என்னை சிக்க வைக்கணும்ங்கிற எண்ணத்தோட வகுப்புக்கு அனுப்பி வச்ச பேராசிரியரும்தான்!

அந்தப் பேராசிரியர் என்னை பாடம் எடுக்கச் சொன்னபோது, என்னையறியாம உடம்பு நடுங்குச்சு. அமெரிக்கன் கல்லூரியில நடந்த ஒரு விழாவுல புறநானூறு புத்தகத்தை பரிசு வாங்கினப்போ, ஆர்வக்கோளாறுல அதைப் பிரிச்சுப் படிச்சிருக்கேன். அதற்குப் பின்னாடி பாடத் தேவை, பேச்சுத் தேவைக்காக அப்பப்போ புறநானூறைப் படிச்சிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட பாடலை நான் படித்ததில்லே.

‘‘என்ன இருந்தாலும் குறிப்பெடுக்க அவகாசம் குடுக்காம வகுப்புக்கு அனுப்புறது தப்பு சார். கொஞ்சம் முந்தி சொல்லியிருக்கணும்’’னு என் நிலையறிஞ்சு, ராஜமாணிக்கம் கூட அந்த பேராசிரியர்கிட்ட சொல்றாரு. ‘‘அடப் போப்பா... பாப்பையாவப் பத்தி எல்லாரும் ரொம்ப பெரிசா சொல்றாங்க... அதெல்லாம் எடுத்துருவாரு’’ன்னு சொன்ன பேராசிரியர், ‘‘என்ன பாப்பையா... எடுத்திருவீங்கல்ல’’ன்னு என்னைப் பாத்துக் கேட்டாரு. நானும், ‘‘சரி சார்... எடுத்துடுறேன்’’னு சொல்லிட்டேன்.

உள்ளுக்குள்ளே பதற்றம். கல்லூரிக்குள்ள எடுக்கப்போற முதல் வகுப்பு. இதில தோத்துப்போயிட்டா, வாழ்க்கை பூரா அடிவிழுகும். ஆனா, ‘‘நீ செஞ்சிருவே சாமி... உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்... நல்லா செஞ்சிருவே... தைரியமா போ’’ன்னு ராஜமாணிக்கம் தைரியம் குடுத்தாரு. அதுதான் எனக்கு நம்பிக்கையை உருவாக்குச்சு.

எங்கேயிருந்து தொடங்கலாம்... மனசுக்குள்ள ஒரு கணக்குப் போட்டேன். ‘‘சரி... மணி அடிக்கட்டும் பாத்துக்கிடுவோம்...’’

மணி அடிச்சுச்சு... வகுப்புக்குள்ள போனதுமே புள்ளைக என்னை விசித்திரமா பாக்குதுக... ‘யாரு இவன்? புதுசா இருக்கான்... தேறுவானா’ங்கிற மாதிரி இருந்துச்சு அதுக பார்வை. நானும் அப்படி உக்காந்து பலபேரைப் பாத்த ஆளுதானே!

அது பியூசி வகுப்பு. ‘புகுமுக வகுப்பு’ன்னு சொல்வாங்க. எல்லாருமே புதிய மாணவர்கள். அதுல நாலைஞ்சு பெண் பிள்ளைகளும் இருக்குதுக. போன உடனே வருகைப்பதிவு எடுத்தேன். வழக்கமா மாணவர்களே வரிசையா எண்களைச் சொல்லி கைதூக்குவாங்க. ஆனா, நானே வருகைப் பதிவேட்டைப் பாத்து ஒவ்வொருத்தர் பேரையும் சொல்லி அழைச்சு ஆளைப் பாத்துக்கிட்டேன்.

5 நிமிஷம் ஆகிடுச்சு. பாடத்தை ஆரம்பிச்சேன்... ‘நான் தொலைதூரத்தில இருந்து இந்த கல்லூரிக்கு வந்திருக்கிற டியூட்டர். உங்களுக்கு புறநானூறைப் பற்றி பாடம் நடந்துக்கிட்டிருந்ததா பேராசிரியர் சொன்னார். இப்போ அந்த பாடத்தில இருந்து ஒரு பாடலைப் பாக்கலாம்’னு ஆரம்பிச்சு புறநானூறைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். அங்கங்கே நடுவில மன்னர்களைப் பத்தி கொஞ்சம் சொன்னேன். கதைவடிவில பாடத்தைக் கொண்டு போனேன். இந்த அறிமுகம் முடியவே அரை மணி நேரம் ஆயிடுச்சு.

அடுத்து பாடலுக்கு வந்தேன். ‘‘இந்தப் பாடலைப் பாடின மன்னன் பிள்ளைப்பேறு பெற்று, பிள்ளைச் செல்வத்தை அனுபவிச்சு மகிழ்ந்தவனாத்தான் இருக்கணும். அதனாலதான் இவ்வளவு உளப்பூர்வமா பாடியிருக்கான். ‘தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’னு பாடின திருவள்ளுவர், ‘தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்’னு சொன்னார்’’னு ஆரம்பிச்சு, பாடலோடு சேர்த்து அது தொடர்பான வேறுசில செய்திகளையும் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே மணி அடிச்சிருச்சு. அதுவரைக்கும் வகுப்புல சின்ன சத்தம் கூட இல்லே.
மணி அடிச்சதும் புத்தகத்தை மூடிவச்சேன் பாருங்க...

எல்லாப் புள்ளைகளும் எழுந்திருச்சு, ‘‘நிறுத்தாதீங்க சார்... பாடலை நடத்தி முடிச்சுட்டுப் போங்க’’ன்னு என்னை சுத்தி நின்னுருச்சுக. ‘‘சார்... இனிமே நீங்களே வந்திருங்க சார்... நாங்க பிரின்சிபால்கிட்ட சொல்றோம்’’ங்குதுக. ‘‘இல்லைப்பா... அதெல்லாம் நாம தீர்மானிக்க முடியாது’’ன்னு யதார்த்தத்தை சொல்லிட்டு வெளியில வந்தேன். அந்த நாளுக்குப் பிறகு அந்தப் பேராசிரியர் என்னை எந்த வகுப்புக்கும் அனுப்பலே!

இந்த சம்பவத்துக்குப் பிறகு என்னைச் சுத்தி எப்பவும் பத்து மாணவர்கள் இருக்கத் தொடங்கிட்டாங்க. எனக்கே பெரிய தன்னம்பிக்கை வந்திருச்சு. பேராசிரியர்கள் மத்தியிலயும் மரியாதை கிடைச்சுச்சு.

அமெரிக்கன் கல்லூரி இருக்கே... அங்கே தமிழ்த்துறை சார்பில வருடா வருடம் ‘முத்தமிழ் கலைவிழா’ நடத்துவோம். அந்த விழாவில பெரிய தலைவர்களை பேசவைப்போம். மாணவர்களும் தங்களோட திறனை வெளிப்படுத்துவாங்க. ‘‘அந்தமாதிரி ஊரிஸ் கல்லூரியில விழா நடத்துறதுண்டா’’ன்னு எங்க துறைத்தலைவரைக் கேட்டேன். ‘‘இதுவரைக்கும் நடத்தினதில்லே’’ன்னு சொன்னார்.

அந்தத் தருணத்தில ஊரிஸ் கல்லூரியோட மாணவர் மன்றச் செயலாளரா இருந்தவர் அன்பரசு. காங்கிரஸ் கட்சியில எம்பியா இருந்தாரே அவரேதான். ரொம்ப துடிப்பான புள்ளை. அப்பவே ரொம்பக் கூர்மையா சில காரியங்களைச் செய்வாரு. நல்ல செயல்வீரர். அவரைக் கூப்பிட்டு, ‘‘நம்ம கல்லூரியில முத்தமிழ் கலைவிழா நடத்தலாமே’’ன்னு சொன்னேன். ‘‘நல்லவிதமா நடத்திரலாமுய்யா’’ன்னாரு அன்பரசு. துறைத்தலைவர்கிட்டயும் அனுமதி வாங்கிட்டோம்.

அப்போ முதல்வரா இருந்தவரு பேராசிரியர் சேசுரத்தினம். அந்த வருடம் அவரு ஓய்வு பெறப்போறாரு. அன்பரசே அவர்கிட்ட போய் பேசி அனுமதி வாங்கிட்டாரு. ஆனா, நிகழ்ச்சி நடத்த கல்லூரியில நிதி இல்லை. ‘‘வகுப்பு வகுப்பா நான் போய் வசூல் பண்றேன். நீங்களும் எல்லார்கிட்டயும் சொல்லுங்கய்யா... முடிஞ்ச அளவுக்கு பண்ணுவோம்’’னாரு அன்பரசு. முதல்வரும் அனுமதி குடுத்திட்டாரு.

வகுப்பு வகுப்பா போய், ‘கனியிடை ஏறிய சுளையும் முற்றல் களையிடை ஏறிய சாறும்’னு தொடங்குற பாரதிதாசன் பாடலை ராகம் போட்டுப் பாடி நிதிவசூல் பண்றோம். பையன்களும் உற்சாகமா நிதி குடுக்கிறாங்க. ஆனா, நாங்க விழா நடத்துறதும், நிதி வசூல் பண்றதும் வேறு ஒரு துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருத்தருக்குப் பிடிக்கலே. அவரு முதல்வருக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. அவருக்கு வேண்டிய சில மாணவர்களைத் தூண்டி விட்டுட்டாரு. ‘‘இதெல்லாம் தேவையில்லைடா. நிதி குடுக்காதீங்க’’ன்னு பிரசாரம் பண்ணிட்டார். அதோட இல்லாம, முதல்வருக்கு வேண்டியவங்க மூலமா முதல்வர் மனசையும் மாத்திட்டார்.

இதெல்லாம் தெரியாம, நாங்க பாட்டுக்கு வசூல்ல தீவிரமா இருக்கோம். அப்போ முதல்வர்கிட்ட இருந்து அன்பரசுக்கு அழைப்பு. ‘‘வகுப்பு வகுப்பா போயி வசூல் பண்றியாமே... விழாவும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். என் பேரைக் கெடுத்துறாதே’’ன்னு கடினமா திட்டி அனுப்பிட்டாரு. அடுத்து எனக்கு அழைப்பு. உள்ளே போனேன் பாருங்க... வெடிச்சுட்டாரு.
‘‘என்னப்பா... தெற்குல இருந்து வந்த ஆளுங்க எல்லாருமே இந்த மாதிரி வேண்டாத வேலையத்தான் செய்வீங்க. இந்த கல்லூரிக்கு புதிய மரபை எல்லாம் ஏன் கொண்டு வர்றீங்க’’ன்னு திட்டினாரு. ‘‘தமிழ்த்துறையில வழக்கமா செய்றதுதான்யா... அதான் இங்கேயும் செய்யலாமேன்னு ஏற்பாடு செஞ்சேன்’’னு சொன்னேன். ‘‘ம்ஹும்... முடியவே முடியாது. இனிமே அதைப்பத்தி என்கிட்ட பேசவே கூடாது’’ன்னு சொல்லி அனுப்பிட்டார்.

ஒரு முடிவோட வெளியில வந்தேன். அன்பரசைக் கூப்பிட்டேன். ‘‘விழாவுக்கு ஏற்பாடு பண்ணி வசூல் வரைக்கும் வந்தாச்சு. இனிமே விடக்கூடாது. நான் ஒரு ஐடியா சொல்றேன். நேரா முதல்வரைப் போயிப் பாரு. ‘அய்யா... நாங்க ரெண்டு நோக்கத்தோட இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சோம். நீங்க இந்த வருஷத்தோட ஓய்வு பெறப்போறீங்க. உங்களைப்பத்தி ஒரு மலர் தயாரிச்சு, உங்க புகைப்படம், அம்மாவோட புகைப்படமெல்லாம் போட்டு உங்க காலத்திலதான் இந்த முத்தமிழ் விழா தொடங்குச்சுன்னு எழுதி வெளியிடலாம்னு ஒரு திட்டம் இருந்துச்சுங்கய்யாÕன்னு சொல்லு. அவரு என்ன சொல்றாருன்னு பாப்போம்’’னு சொன்னேன்.

அடுத்த நாள் உற்சாகமா முதல்வரைப் பாக்கப்போனாரு அன்பரசு. அப்போ அறையில முதல்வரோட மனைவியும் இருந்¢திருக்காக. ரெண்டு பேர்கிட்டயும் ரொம்ப அடக்கமா இந்த தகவலைச் சொன்ன அன்பரசு, ‘அய்யாதான் நிகழ்ச்சியே வேண்டாம்னுட்டீங்க. அய்யாவுக்கு மலர் போட முடியலேங்கிற வருத்தம் மாணவர்களுக்கு இருக்கு’ன்னு சொல்லிட்டு வெளியில வந்திட்டாரு.
சொன்னா நம்பமாட்டீங்க... அடுத்த ரெண்டுநாள்ல கதையே மாறிப்போச்சு. என்னைக் கூப்பிட்டுவிட்ட முதல்வர், ‘‘என்ன பாப்பையா... பையன் என்னவோ மலரெல்லாம் தயாரிக்கப் போறதா சொல்றான்’’னு கேட்டாரு. ‘‘ஆமாங்கய்யா... அதுதாங்கய்யா எங்க நிகழ்ச்சியோட முக்கியமான திட்டம்’’னு சொன்னேன். ‘‘சரி, நல்லா பெரிசாவே செஞ்சிருங்க’’ன்னு சொல்லி அனுமதி குடுத்திட்டாரு!

அந்த விழாதான் பட்டிமன்றத்தை எனக்கு அறிமுகப்படுத்துச்சு.
அடுத்த வாரம் சந்திப்போமா!
சாலமன் பாப்பையா