தண்ணீர் பட்ட பாடு!




அ.முத்துகிருஷ்ணன்

இங்கே நீர் மேலாண்மை அற்றுப்போய்விட்டது. மதுரையில் எனக்குத் தெரிந்து 20 கண்மாய்கள் இருந்தன. இப்போது அவை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், நீதிமன்றம், ஆல் இந்தியா ரேடியோ, வணிக வளாகம் என மாற்றுப் பெயர் பெற்றுவிட்டன. இதனால் நிலத்தடி நீருக்கு பங்கம் வந்தது. மக்கள் பெருக்கம், நுகர்வுக் கலாசாரம், தொழிற்சாலைகள் போன்றவற்றால் நகரத்தை ஊதிப் பெருக்கி கெடுத்துவிட்டோம். குடிநீர் அருகிவிட்டது என்ற நிலை மாறி, ‘இல்லை’ என்றாவதற்குள் நாம் எழுந்துகொள்ள வேண்டும்.

நக்கீரன்

நீராதாரம் அடிப்படையில் மூன்று வகையானது. பச்சை நீர், நீல நீர், சாம்பல் நீர். பச்சை நீரும், நீல நீரும் ஆவியாகி மேலே போய் மழையாக வருகின்றன. நிலத்தடி நீரை நாசமாக்குவதுதான் சாம்பல் நீர். இங்கே திருப்பூர், காஞ்சிபுரம் பகுதிகளில் சாம்பல் நீர் அதிகரித்து விட்டது. எங்கும் அனுமதிக்கப்படாத தொழிற்சாலைகள் எல்லாம் இங்கே வருகின்றன. கடல்நீரை சுத்தம் செய்கிறேன் என பல நிறுவனங்கள் குதித்துள்ளன. இங்கே தண்ணீர் பஞ்சம் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான். அதை நாம் உணரவில்லை என்பதே உண்மை!

நித்யானந்த் ஜெயராமன்

நீராதாரத்தை தவறாகவும் பயன்படுத்துகிறோம்; கெடுத்தும் இருக்கிறோம். வருங்காலத்தில் தனிநபர் வளர்ச்சி, பணம், கார் எல்லாமே இருக்கும். ஆனால், குடிக்க தண்ணீர் இருக்காது. இனிமேலாவது நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு, பறிபோன இடங்களையும் மீட்டெடுக்க வேண்டும். மக்களிடம் இவை பற்றிய தற்காப்பு உணர்வு கிடையவே கிடையாது என்பது வருந்தத்தக்கது. அத்தகைய உணர்வு இல்லையென்றால் அபாயம் தொலைவில் இல்லை!