தமிழக அரசு... கடனில் மூழ்கிய கப்பல்!



2,64,701 கோடி

2,64,701,00,00,000 இரண்டு லட்சத்து அறுபத்து நான்காயிரத்து 701 கோடி ரூபாய்... எண்ணி முடிப்பதற்குள் கண்ணைக் கட்டுகிறதா?  தமிழக அரசு வாங்கி வைத்திருக்கிற கடன்தான் இது. இந்தக் கடனுக்காக ஒவ்வொரு ஆண்டும் 17,856 கோடி ரூபாயை வட்டியாக அழுகிறார்கள். இந்த வட்டித்தொகை மாநிலத்தின் மொத்த வருவாயில் 12.1 சதவீதம்.

சுதந்திரம் அடைந்த காலம் முதல் 2011 வரை தமிழக அரசுக்கு இருந்த மொத்தக் கடன் 1 லட்சம் கோடி. பொறுப்பேற்ற நான்கே ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 64 ஆயிரம் கோடியை புதிதாக வாங்கி கடன் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. ‘‘இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஊழியர்களுக்கு சம்பளம் தரக்கூட முடியாத அளவுக்கு பொருளாதாரக் குலைவை தமிழகம் சந்திக்கும்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

தொலைநோக்கற்ற திட்டங்கள், நிர்வாகச் சீர்குலைவு, அர்த்தமற்ற இலவசங்கள், முறைகேடுகள் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு நிதிப்பற்றாக்குறை அதிகமாகிக்கொண்டே போகிறது. 2015-16ம் ஆண்டில் சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை. வழக்கம்போலவே, அதற்கும் கடன்... வேலைவாய்ப்பையும், நாகரிகமான வாழ்வையும் உருவாக்கித் தரவேண்டிய அரசு, ஒவ்வொரு தமிழனையும் கடன்காரனாக்கி அழகு பார்க்கிறது.

ஒரு குடும்பத்தை நிர்வகிக்கவே கடன் அவசியமாக இருக்கும்போது நாட்டை நிர்வகிக்க கடன் வாங்குவதில் தப்பில்லைதான். இந்திய நிதி வருவாய் சட்டப்படி, மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் கடனாகப் பெறலாம். ஆனால் எதில் வருமானம் ஈட்ட முடியுமோ, அந்தத் திட்டங்களில் மட்டுமே கடனை முதலீடு செய்யவேண்டும். அப்போதுதான் அதைத் திருப்பி அடைக்க முடியும். சாதாரண குடிமகனுக்கே புரியக்கூடிய இந்த நீதி, ஏன் அரசுக்குப் புரியவில்லை?

‘‘இப்போது அரசின் மிகப்பெரிய செலவீனமே வட்டிதான். கட்டுப்பாடு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்து, இலவசங்களிலும், பயனற்ற திட்டங்களிலும் பணத்தை அழிக்கிறார்கள். நிதிச் சீர்திருத்தம், நிர்வாகச் சீர்திருத்தம் என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் காட்டிய அ.தி.மு.க. அரசு, 4 ஆண்டுகளில் 1 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி நாட்டை அதலபாதாளத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இப்போது சொல்லப்படுவது அரசின் நேரடிக்கடன்கள். பல்வேறு அரசுத்துறைகள் தனியாக வாங்கிய கடன்கள் இந்தக் கணக்கில் வரவில்லை.

 மின்சார வாரியம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருக்கிறது. முதலீட்டுக்குத் தகுந்தவாறு எளிதாக லாபம் ஈட்டக்கூடிய, நஷ்டம் வர வாய்ப்பே இல்லாத துறைகளில் மின்சாரத்துறையும் ஒன்று.

ஆனால் அரசு மின் உற்பத்தி நிலையங்களை சீர்குலைய வைத்து, 3 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை 13 ரூபாய் கொடுத்து தனியாரிடம் வாங்கி அதிகாரிகள் கொழிக்கிறார்கள். போக்குவரத்துத் துறை 2 ஆயிரத்து 84 கோடி கடன் வைத்திருக்கிறது. டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டும் நஷ்டம்தான். டயரில் இருந்து டீசல் வரை எல்லாவற்றிலும் முறைகேடு.

அரசின் மொத்த வருவாய் 1.5 லட்சம் கோடி. ஆனால் கடனோ 2.64 லட்சம் கோடி. வருவாயை விட இன்னொரு மடங்கு கடன். இதே நிலை நீடித்தால் மாநில அரசு திவாலாகி விடும்’’ என்கிறார் ‘பசுமைத்தாய கம்’ அமைப்பின் நிர்வாகி அருள்.‘‘ஒரு அரசு கடன் வாங்குவதற்கு முன்பாக, அந்தக் கடனுக்கான வட்டியை எப்படிக் கட்டுவது, கடனை எப்படி அடைப்பது என்று திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

எதற்காக கடன் வாங்குகிறார்களோ அந்த திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இப்படியான வரையறைகளை பின்பற்றாமல் பயனற்ற முதலீடு செய்தால் கடன் சுமை அழுத்தவே செய்யும்’’ என்கிறார், முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவராமன் ராமநாதன்.

‘‘மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு உருவாக்க வேண்டும் என்று என் பணிக்காலத்தில் இருந்தே கோரிவருகிறேன். ஆனால் தெளிவாக எந்த வரையறையும் உருவாக்கவில்லை.

இலவசங்களுக்கு மட்டும் ஓராண்டுக்கு 20 ஆயிரம் கோடி செலவு என்கிறார்கள். அதை மின்நிலையங்களில் முதலீடு செய்திருந்தால் 3000 மெகாவாட் மின்சாரம் எடுத்திருக்க முடியும். அதன்மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்; அரசுக்கு வருமானமும் கிடைக்கும். அதுதான் ஆக்கபூர்வமான செயல்பாடு. 

வேலைவாய்ப்பை ஊக்குவிக்க, உறுதிப்படுத்த இன்னும் தொலைநோக்கில் திட்டங்கள் வேண்டும். அரசியல் நோக்கங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக்கூடாது. நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூடப்படுகின்றன. கோவையிலிருந்து நிறைய முதலாளிகள் வேறு மாநிலங்களுக்குச் செல்கிறார்கள்.

இதெல்லாம் மாநில அரசுக்கு இழப்புதான். நிறுவனங்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, தொழிலாளர்களின் நலன்களைக் காத்து ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும். தமிழக அரசு தன் வருமானத்துக்கு மதுக்கடைகளை நம்பியிருப்பது மிகப்பெரிய அவலம். மிகவும் பின்தங்கி யிருக்கும் ஆப்ரிக்க நாடுகளில் கூட இதுமாதிரி நிலை இல்லை. உடனடியாக சுயவிமர்சனம் செய்துகொண்டு ஆக்கபூர்வமான பாதைக்கு அரசு மாற வேண்டும்’’ என்கிறார் அவர்.

இதுபற்றி விரிவாகப் பேசிய பொருளாதார நிபுணர் நாகப்பன், ‘‘இலவசத் திட்டங்கள் வீண்செலவு’’ என்பதை மறுக்கிறார். ‘‘நல்ல சமூகத்தை உருவாக்குவதும் அரசின் கடமைகளில் ஒன்று. மனித வளத்தை மேம்படுத்த இலவசமாக சில பொருட்களை வழங்குவது தவறில்லை. ஆனால், எது தேவை என்பதில் தெளிவு வேண்டும்.

அது தக்கவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது மானியங்கள். மானியங்கள் நிச்சயம் தேவை தான். ஆனால் யாருக்குத் தேவையோ அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். நேரடியாக மானியங்கள் வழங்குவதன் மூலம் பாதியாக அதைக் குறைக்கலாம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது. அதைப் போல இங்கும் முறைப்படுத்த வேண்டும்.

வரி வசூலில் பெரும் தேக்கநிலை நிலவுகிறது. அதை தீவிரப்படுத்த வேண்டும். வரிகளை உயர்த்திக்கொண்டே செல்வதில் பயனில்லை. வசூலிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். வரி கட்டாதவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களை தீவிரப்படுத்தலாம். உள்கட்டமைப்பை மேம்படுத்தி தொழில் நிறுவனங்களை ஈர்க்க வேண்டும். முதலீடு அதிகமாகும்போது நாடு வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும். எல்லாவற்றையும் விட முக்கியம், நிர்வாகச் சீர்திருத்தம்.

நிதி கையாளுகையை ஆய்வுக்கு உட்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தேவையற்ற செலவீனங்களைக் குறைத்து, திட்டங்களைக் கூர்மைப்படுத்தி, கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். சீர்திருத்தத்துக்கு இதுவே சரியான தருணம். மேலும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்’’ என்கிறார் நாகப்பன்.மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள 2012-13ம் ஆண்டுக்குரிய ஆய்வறிக்கை தமிழகத்தின் நிலையை மேலும் வெளிச்சமாக்கியிருக்கிறது.

தொழில் வளர்ச்சி சார்ந்து 18 மாநிலங்களை வரிசைப்படுத்தியிருக்கிறது அந்த அறிக்கை. அதில் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம். அரசு ஆக்கபூர்வமாகச் செயல்படாவிட்டால், தமிழகத்தின் நிலை மேலும் கவலைக்கிடமாகிவிடும். அரசின் மொத்த வருவாய் 1.5 லட்சம் கோடி. ஆனால் கடனோ 2.64 லட்சம் கோடி. வருவாயை விட இன்னொரு மடங்கு கடன்!

-வெ.நீலகண்டன்