கைம்மண் அளவு



சில ஊர்களின் பெயர்கள் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ என்றிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு நம்மூர் பெயர்கள் நாவில் வழங்கவில்லை. எனவே, அவர்களின் நாத்திறன் பொருந்தும்படி உச்சரித்தனர்.

தூத்துக்குடியை ‘டூட்டுக்கோரின்’ என்றும், திருவல்லிக்கேணியை ‘டிரிப்ளிகேன்’ என்றும், கோழிக்கோடைக் ‘காலிகட்’ என்றும், வதோதராவை ‘பரோடா’ என்றும், வாரணாசியை ‘பனாரஸ்’ என்றும், தஞ்சா வூரை ‘டாஞ்சூர்’ என்றும், பனாஜியைப் ‘பஞ்சிம்’ என்றும், ஆலப்புழையை ‘அலப்பி’ என்றும்... மேற்கொண்டும் ஆயிரம் சொல்லலாம்.

இன்று ‘மும்பை’ என வழங்கப்பெறும் பெருநகரின் பெயர் அடைந்த அல்லல் - பாம்பே, பம்பாய், மும்பாய், பம்பை, கடைசி யாக மும்பை. ஆங்கிலேயரை அறுத்து விட்டு அறுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் நம் இனமானத் தமிழர் ‘டிரிப்ளிகேன்’ என்கிறார்கள்! என்ன அற்புதமான பெயர் அல்லிக்கேணி! திரு எனும் சிறப்பு அடைமொழி பெற்று, திரு அல்லிக்கேணி. இலக்கணப்படி புணர்ந்து திருவல்லிக்கேணி. இன்றும் டிரிப்ளிகேன் என்கிறார்களே பெரும் பாவிகள்!

பாரம்பரியமான ஊர் சிராப்பள்ளி. அந்தச் சொல்லுக்கு வரலாறு உண்டு. திரு என்பது சிறப்பு முன்னொட்டு. அரங்கம் என்பது திருவரங்கம் ஆனது போல, அண்ணாமலை, திருவண்ணாமலை ஆனது போல, செந்தூர் திருச்செந்தூர் ஆனது போல, முதுகுன்றம் திருமுதுகுன்றம் ஆனது போல, சிராப்பள்ளி என்பதும் திருச்சிராப்பள்ளி ஆயிற்று. அதுவரைக்கும் சரி!

ஐரோப்பியர், அவர் வசதிக்குத் ‘திருச்சி’ என்று புழங்கினார்கள். அவர்களுக்கு என்ன போச்சு? அவர் சென்று சேர்ந்த பின்பும் நமக்கு இன்றும் ஏன் திருச்சி? சிராப்பள்ளிக்கும் திருச்சிக்கும் என்ன தொடர்பு? பூரணம் வைத்த இலைப்பணியாரத்துக்கும், பீட்சாவுக்கும் உள்ள பந்தமா? எந்தத் தமிழ் அமைப்பும் இது பற்றிக் கவல்கிறதா?

ஐந்நூறு ஆண்டுகள் முன்பு கிருஷ்ண தேவ ராயர் காலத்தில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராஜுக்கள் குடி அமர்ந்த இடம், ராஜுக்களின் பாளையம், ராஜபாளையம். ராஜாஜியை இராசாசி என்று எழுதிய மரபின்படி, ராஜபாளையத்தை இராசபாளையம் என்றார்கள் தமிழர்கள். சமீபத்தில் தெரிந்து கொண்டேன், தஞ்சாவூரைத் தஞ்சை என்பது போல், திருவண்ணாமலையை வண்ணை என்பது போல, ராஜபாளையத்தை ரஜகை என்கிறார்கள் என. வாழ்க, குறுஞ்செய்தி அனுப்ப வசதியாக இருக்கும். மொழியை வேறு எப்படித்தான் வளர்ப்பது? ஆனால் பூனையைப் பார்த்து புலி சூடு போட்டுக்கொண்ட கதையாகவும் இருக்கும்!

அற்புதமான தமிழ்ப்பெயர்கள் உண்டு நமது அம்மன்களுக்கு. இன்பத்தேன் வந்து பாயும் காதினிலே! திருப்பாதிரிப்புலியூரில் பெரிய நாயகி அம்மை, திருமயானத்தில் வாடாமுலையம்மன், வைத்தீசுவரன் கோயிலில் தையல் நாயகி, திருப்புகலூரில் கருந்தார் குழலி, திருநல்லூரில் திருமலை சொக்கி, திருமுருகன் பூண்டியில் முயங்கு பூண் வல்லியம்மை, பொன்னமராவதியில் ஆவுடை நாயகி, குடுமியான் மலையில் திரு காம கோட்டத்து அறுவடை மழை மங்கை நாச்சியார்... மாதிரிக்குச் சில சொன்னேன். அந்தந்த ஊர்களில் போய் விசாரி யுங்கள்... வேறு அவர்கள் என்ன பெயரில் வழங்கப் பெறுகிறார்கள் என! எவர் நிலத்தை எவர் பட்டா போட்டுக்கொள்வது ஐயா?

கடவுள்களை விடுங்கள், நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும், பதினெட்டுப் புராணங்களும் தீர்மானித்த சங்கதி அது. இன்று நம் சக்திக்கும் அப்பாலே நிற்பது! ஆனால், எளிமையான நமது கத்தரிக்காய் படும்பாடு விசித்திரமானது. இரணியலில், தொலித்த சின்னத் தேங்காய் பருமனில் வாடாமல்லி நீலமும் வெண்மையுமாய் மிடைந்து விளையும். கோவில்பட்டியில், முட்டை வடிவமும் சுத்த வெள்ளையுமாக.

சிறுமலையில் சின்னதாய் சற்று நீண்டு பச்சை வரியோடியது. கொங்கு மண்டலத்தில் முட்டை வடிவத்தில் கருநீல வரியோடியது. நீலம் இல்லாவிட்டால் அது கத்தரிக்காய் என்று நம்பவே மாட்டார்கள். பெரிய முட்டை வடிவத்தில் வெள்ளையில் பச்சை திட்டுத் திட்டாகப் படர்ந்த இனம் ஒன்றுண்டு. காரக்காய் என்பார்கள் அந்தக் கத்தரியை, அதன் காரல் தன்மைக்காக. இப்போது காண்பதற்கே இல்லை.

உடலெங்கும் இலையெங்கும் காம்பெங்கும் முள் பூத்து, பெரிய சுண்டைக்காய் போல, பச்சை வரியோடி, வெண்மை இடையிடையே பரவி, ஆற்றங்கரை, குளத்தங்கரை எனக் காணக் கிடைக்கும் ஒன்று. அதனைக் கண்டங்கத்திரி என்பார்கள். கொடுங்கசப்பு எனினும் அதன் மருத்துவப் பயன் கருதி, புளிக்குழம்பு வைத்துச் சாப்பிடுவார்கள். அதன் வேரும் இலையும் மருந்துப் பொருட்கள். கிளிப் பச்சை நிறத்தில் சாண் நீளத்தில், ஓரங்குல விட்டத்தில் காய்ப்பது வழுதுணங்காய். சுத்த நீலத்திலும் அதன் ஒரு வகையுண்டு.

முழுத் தேங்காய் அளவில் கருநீல நிறத்தில் ஒரு கத்தரிக்காய் காய்க்கிறது வட நாட்டில்.எல்லாமே கத்தரிதான். பெண்கள் நிற வேற்றுமை குறிக்க கத்தரிப்பூ நிறம், வாடாமல்லி நிறம் என்பார்கள். சங்க இலக்கியத்தில் ‘க’வுக்குப் பிறகு ‘த்’ பயன்படுத்தப்பட்ட சொல்லேதும் எனக்குத் தட்டுப்படவில்லை. பிறகெங்கே கத்தரி இருக்கும்? ஆனால் மாற்றாக ‘வழுதுணை’ இருக்கிறது.அகநானூற்றில் 227வது பாடல்‘நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;திதலை அல்குல் வரியும் வாடின;என் ஆகுவள் கொல் இவள்?’

என்று தொடரும் பாடல். நெற்றி பசலை படர்ந்து வெளிறி விட்டது. தோள்கள் மெலிந்து போயின. தேமல் படர்ந்த அல்குல் வரியும் வாடிப் போயின! ஆகவே, ‘இவள் என்ன ஆவாளோ என்று கண்ணீர் மல்க நீ வருந்தாதே’ என்று தலைவனைப் பிரிந்து வாழும் தலைவி, தனது தோழிக்குச் சொல்லும் பாவம். அந்தப் பாடலில், பெண் யானை மிதித்ததால் வழுதுணங்காய் போன்ற தழும்பை உடைய, தூங்கல் ஓரியாரால் பாடப் பெற்ற மன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது வழுதுணங்காய் போன்ற காயம் பெற்றவன் என்ற தகவல் வருகிறது.

‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரன வேப் புளித்த மோரும்’
என்றொரு பிற்காலப் பாடலும் உண்டு.

‘காதலாம் கத்தரிக்காயாம்’ என்றொரு நூற்றாண்டுப் பழைய வழக்கும் உண்டு தமிழரிடத்தில். இந்தக் கத்தரியை வடமொழிகள் ‘பெய்ங்கன்’ என்கின்றன. ‘வாங்கி பாத்’ என்றொரு சித்ரான்னம் உண்டு. ‘ரசவாங்கி’ எனும் பதார்த்தமும் பெய்ங்கன் எனும் சொல்லில் பிறந்த ‘வாங்கி’ எனும் சொல்லின் பிரயோகமாக இருக்கலாம். கத்தரியைச் சுட்டுக் கடைந்து செய்யப்படுவதால் ‘பெய்ங்கன் பர்த்தா’. பெய்ங்கன் வாடி என்றொரு ஊர்ப்பெயரே உண்டு மராத்திய மாநிலத்தில்.

ஔவை மூதாட்டி ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்றாள். என்னைக் கேட்டால், அது ‘கத்தரிக்காய் தின்பவர், கத்தரிக்காய் தின்னாதவர் என இரண்டு’ என்பேன். கத்தரியை ஆங்கிலத்தில்   Brinjal என்பர். பாஸ்டன் நகரில், நண்பர் ‘படிகள்’ ரவிஷங்கர் ஓரடி நீளமுள்ள கத்தரிக்காய் சாண்ட்விச் வாங்கித் தந்தார். கத்தரிக்காய் பஜ்ஜிக்கு நறுக்குவதைப் போன்று, சற்று கனமாக நறுக்கப்பட்டு வாட்டப்பட்ட கத்தரிக்காய் வைத்த சாண்ட்விச். எனவே அமெரிக்காவிலும் கத்தரிக்காய் ஒரு உணவுதான்.

இத்தனை இருந்தும், கத்தரி யின் ஒரு இனம் முட்டை வடிவத்தில் இருப்பதால், எவனோ ஒரு பண்டிதன் அதை  Egg Plant   என்றான். இப்போது நமது லட்சக்கணக்கான தமிழ்ப் பள்ளி மாணவர்  Egg Plant  என்று சொல்லித் திரிகிறார்கள் கத்தரியை. இந்தக் கொடுமைக்கு எங்கு போய்ப் பரிகாரம் செய்வது? இதுஒரு எளிய சமாச்சாரம்தானே! இதற்குப் போய் இத்தனையா என்பீர்கள்! எளிய விஷயங்களே வலிய காரியங்கள் ஆகின்றன.

இதுபோன்றே வெண்டை என்றொரு அற்புதமான காய். இந்தியில் ‘பெண்டி’ என்பார்கள். பெண்களின் கைவிரல் போலத் தோற்றம் காட்டுகிறதாம் வெண்டை. ஆகவே ஒரு அறிவாளி அதற்கு Ladies Finger   எனப் பெயர் சூட்டினான். ஆங்கிலம் வழி பயிலும் அத்தனை பேரும் லேடீஸ் ஃபிங்கர் என்கிறார்கள். என் கவலை, வாழைப் பூவுக்கு எதுவும் பெயர் வைத்து விடுவார்களோ என்பது! தமிழ் சினிமாப் பாட்டு வேறு நினைவு வந்து நம்மைப் படுத்துகிறது.

வேறு எங்கோ எழுதினேன், பாரம்பரியமான நம் கருநாகம்   King cobra  என்று ஆங்கிலத்துக்குப் போய், அங்கிருந்து நமக்கு ராஜநாகமாகத் திரும்பி வந்தது என்று.முருங்கைக்காய் உங்களுக்குத் தெரியும். தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்? முருங்கைக்காய் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆயிற்று என்பார்கள் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேரறிஞர்கள். அது எனக்குத் தெரியாது. ஆனால் அகநானூறில் முருங்கை பற்றி நான்கு பாடல்களில் பேச்சு உண்டு.

அகநானூற்றின் முதற்பாட்டு, மாமூலனார் பாடியது. ‘நாரில் முருங்கை’ என்கிறது. அதாவது ‘பலமில்லாத மரம்’ எனும் பொருளில். முருங்கை மரத்தின் வெண்மையான பூக்கள், கடுங்காற்றில் அகப்பட்டுக் கடல் அலைகளின் நீர்த்துளிகள் சிதறுவன போல உதிர்கின்றன என்கிறது பாடல். இரண்டாவது பாடல் சீத்தலைச்சாத்தன் பாடியது. ‘நெடுங்கால் முருங்கை வெண் பூத்தா அய்’ என்கிறது. ‘சூரிய வெப்பத்தால் வெடித்த தரையில் வெடிப்பை மறைத்தவாறு முருங்கைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும்’ என்பது தகவல்.

மூன்றாவது பாடலும் மாமூலனார் பாடலே! ‘புன் கால் முருங்கை ஊழ்கழி பன்மலர்’ என்கிறது அது. ‘பலம் இல்லாத அடிப்பகுதியைக் கொண்ட முருங்கை மரத்தின் மலர்கள், ஆலங்கட்டி மழை போல் உதிர்ந்து கிடக்கும்’ என்பது தகவல். நான்காவது பாடல், கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய, ‘முருங்கை மேய்ந்த பெருங்கை யானை’ என்னும் பாடல். ‘நீண்ட தும்பிக்கையை உடைய யானை, முருங்கை மரத்தையே மேய்ந்தது’ என்பது பொருள். ‘காக்கை உகக்கும் பிணம்’ என்பது போல இது.

இங்ஙனம் சங்க இலக்கியப் பாடல் பெற்ற முருங்கைக்காயின் சமகாலப் பெயர் என்ன தெரியுமா? Drum stick. செம்மொழித் தமிழ் இங்கு இவ்விதம் வாழ்கிறது. சரி, நாயன்மாரே! முருங்கைக்காய் Drum stick என்றால், முருங்கைப் பூ, முருங்கைக் கீரை, முருங்கைப் பட்டை, முருங்கைப் பிசினுக்கு என்ன பெயர்? இது ஐரோப்பியனுக்குத் தெரியாது அல்லவா? கத்தரிப் பூ, கத்தரிப் பிஞ்சு, கத்தரிப்பழம், கத்தரிக்காய் வத்தல் ஆகியவற்றுக்கு என்ன பெயர் அவர் அகராதியில்?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இறையருளால் ஒரு துண்டு ஆப்பிள் கீற்று கிடைத்தது எனக்கு. அது நம் நாட்டுப்பழம் இல்லை என்றாலும் எல்லோரும் ஆப்பிள் என்றே வழங்குகிறோம். அது போன்றே ப்ளம், செர்ரி, ஸ்ட்ராபெரி என்பன மாற்றுப்பெயர் பெறவில்லை நம்முள். ஆனால், நம்மூர்க் காய்கறிகள் மாற்றுப்பெயர் பெற்று நமக்குக் கற்பிக்கின்றன புதுப்புது சொற்களை, மேலோட்டமான பொருளுடன்.

கவிஞர் விக்கிரமாதித்தன் விசனப்பட்டது போல, ‘அருவி எனும் அழகு தமிழ்ச் சொல்லிருக்க, நீர் வீழ்ச்சி என்பதுதானே நமது புத்தி’. நீர் வீழ்ச்சை எனில் மலையாளம் ஜலதோஷத்தைக் குறிக்கும். ஆங்கிலேயருக்கு Water Falls, அருவிக்கான சொல். அங்கிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஆகிறது, நீர் வீழ்ச்சி என. தாத்தா பெயர் பெரிய கருப்பன் எனில் அதை Big Black என மாற்றுவார்கள் போலும்.தாமரை எனும் சொல்லுக்கு கம்பன் வகைக்காக கமலம், வனசம், நளினம், முளரி, கஞ்சம், அரவிந்தம், பத்மம் எனும் சொற்களைப் பயன்படுத்துகிறான். நம் குழந்தைகள் Lotus என்கின்றன. இதுவே என் ஆவலாதி!

ஔவையார் எழுதிய மூதுரை என்றோர் நூலுண்டு. அதில் ஒரு பாடல்:
‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதவன் கற்ற கவி’என்று பேசும்.தமிழின் பல சொற்களும் கல்லாதவன் கற்ற கவிதை போல ஆகிக் கொண்டிருக்கின்றன.

ப்ளம், செர்ரி, ஸ்ட்ராபெரி என்பன மாற்றுப்பெயர் பெறவில்லை நம்முள். ஆனால், நம்மூர்க் காய்கறிகள் மாற்றுப்பெயர் பெற்று நமக்குக் கற்பிக்
கின்றன புதுப்புது சொற்களை, மேலோட்டமான பொருளுடன்!

தண்ணீர் பட்ட பாடு!

எதிர்வருகிற கோடை, நிரம்பாத அணைகள், ஏமாற்றுகிற பருவமழை, வற்றிப்போன நிலத்தடி நீர் என எல்லோரும் தண்ணீரைப் பற்றி அதிகமாகவே கவலைப்படுகிற நேரம் இது. சுற்றுச்சூழலின் கெட்டிக்காரர்களிடம் கேட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்கிற நிஜங்கள் இந்த இதழெங்கும் அணிவகுப்பு...

‘பாடம்’ நாராயணன்

‘‘இது முதலாளித்துவத்தின் பொற்காலம். தனி மனிதர், குடும்பம், அரசு... எல்லாவற்றையும் நுகர்வு பயங்கரவாதத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டது சந்தைப் பொருளாதாரம். பூச்சிமருந்து, நகர மாசு, சாக்கடை என நிலத்தடி நீருக்கு பங்கம் வந்துவிட்டது. எல்லா இயற்கை வளங்களும் நாசமாகிவிட்டன. பேராசையால் நாம் இந்தத் தலைமுறையையும் கெடுத்துக்கொண்டு, அடுத்த தலைமுறைக்கும் கேடு செய்துவிட்டோம். இது ஒருவழிப்பாதை என்பதை மறக்க வேண்டாம். உடனடித் தேவை, பொறுப்பான நுகர்வோராக மாறுவதுதான்!’’

டாக்டர் சிவராமன்

தண்ணீரை வணிகப் பொருள் என நம்ப வைத்ததில் பன்னாட்டு நிறுவனங்களின் சதி இருக்கிறது. மேலை நாடுகளில் எல்லா பெரு நகரங்களும் பெரிய நீர்நிலைகளை காப்பாற்றி வைத்திருக்கின்றன. இங்கே இருக்கிற அந்நிய நாட்டு கார் நிறுவனங்கள் ஒரு காரைத் தயாரிக்க மூன்று லட்சம் லிட்டர் தண்ணீரை செலவு செய்கின்றன. அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நியூட்ரினோவிற்காக பசுமைகளை விட்டுத் தர தயாராகி விட்டோம். நீர் ஆதாரங்களின் அழிவு நமக்கான பெரும் இடர்! இதை உணராவிட்டால் நமக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்?

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது