சிரஞ்சீவி தொடங்கி இன்றைய நாக சைதன்யா வரை, தெலுங்கு ஹீரோக்கள் அத்தனை பேரையும் தமிழ் ‘செப்ப’ வைத்தவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா. தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட இவர், 200க்கும் மேற்பட்ட மாற்று மொழிப் படங்களை தமிழாக்கம் செய்தவர். சமந்தா, அஞ்சலி தெலுங்கில் நடித்த ‘சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லி செட்டு’ படத்தை தமிழில் ‘ஆனந்தம் ஆனந்தம்’ என கொண்டு வருகிறார்.
‘‘இந்தப் படம் தெலுங்குல மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடிச்சது. சமந்தாவும் அஞ்சலியும் பின்னியெடுத்திருப்பாங்க. சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி இருக்குனு ஒரு டாக் இருந்த சமயம், அவங்க கமிட் ஆன முதல் படம் இதான். அஞ்சலிக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமும் இதான். டைட்டில் கேரக்டரான சீத்தம்மாதான் அஞ்சலி. இடுக்கியில இந்தப் படம் ஷூட்டிங் நடந்தப்போ அஞ்சலியை அட்டைப் பூச்சிகள் கடிச்சிடுச்சு. வெங்கடேஷ் சார்தான் கவனிச்சு, காப்பாத்தினார்.
இந்தப் படம் பெஸ்ட் ஃபேமிலி சப்ஜெக்ட். இதில் நடிச்ச பிறகுதான் தெலுங்கில் சமந்தாவுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமானாங்க. இந்த மாசம் ரிலீஸ் பிளான் பண்ணியிருக்கோம். இதுக்கு அடுத்து 2 தெலுங்கு ப்ராஜெக்ட்ஸ் தவிர ஆங்கிலப் பட டப்பிங்குகளும் போயிட்டி ருக்கு!’’‘‘டப்பிங் படங்களுக்கு இப்போ ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?’’
‘‘சூப்பர். அதுலயும் தமிழ்நாட்டுல டப்பிங் படங்களுக்கு மாஸ் ஆடியன்ஸ் நிறைய. சின்ன லெவல்ல வர்ற சில நேரடி தமிழ்ப்படங்களுக்குக் கூட இல்லாத கூட்டம் டப்பிங் படங்களுக்கு இருக்கு. இதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. தெலுங்குப் படங்கள்ல ஆக்ஷன், பாடல் காட்சிகளுக்கு செட் அவ்வளவு பிரமாண்டமா போடுறாங்க. ஃபைட்னா 50 சுமோ பறக்கும். தமிழ்ல இந்த மாதிரி செலவு பண்றதில்ல!’’‘‘நீங்க எப்படி இந்த லைனைப் பிடிச்சீங்க?’’
‘‘மதுரையில இருந்து மஞ்சப்பை தூக்கிட்டு இயக்குநர் கனவோடதான் சென்னை வந்தேன். ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரா கூட என்னால சேர முடியல. அப்போதான் டப்பிங் இன்சார்ஜ் சாந்தகுமார் சாரோட தொடர்பு கிடைச்சது. ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்னு மொழிமாற்றுப் படங்களில் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். 2006ல என் இயக்குநர் கனவு நனவாச்சு. நவ்தீப், ஷீலா நடிச்ச ‘இளவட்டம்’ படத்தை இயக்கினேன்.
ஒரு இயக்குநருக்கான எந்த சுதந்திரமும் இல்லாம எடுத்த படம். அது சரியாக போகலைனாலும், வாங்கின யாருக்கும் நஷ்டமில்லை. மறுபடியும் இயக்க சந்தர்ப்பம் அமையல. அந்த இடைப்பட்ட காலத்தில் நான் வசனம் எழுதின டப்பிங் படங்கள் வசூல் ரீதியா நல்லாவே போச்சு. அதனால அதிலேயே பிஸியாகிட்டேன். இப்போ ‘யாவும் காதலே’னு மறுபடியும் ஒரு படம் டைரக்ட் பண்றேன்!’’
‘‘ஒரு படத்தை டப் பண்றதுல உள்ள சிரமங்கள் என்ன?’’‘‘நிறைய இருக்கு. குறிப்பா சொல்லணும்னா, உதட்டசைவுக்கு மேட்ச் ஆகணும். தெலுங்கு டயலாக்கை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்க மாட்டேன். கிரியேட்டிவா, டைமிங்கா நிறைய யோசிப்பேன். தெலுங்குல அப்பாவை ‘நானா’ம்பாங்க. இங்கே ‘அப்பா’னு சொன்னா, உதடு சிங்க் ஆகாது. ‘டாடி’ன்னு மாத்தினா கரெக்டா செட் ஆகும். இப்படி நிறைய நெளிவு சுளிவுகள். எல்லாமே அனுபவத்துல வந்தது தான்!’’
‘‘ஒரு படத்தை தமிழ்ல டப் பண்ணலாமா, வேணாமான்னு எப்படித் தீர்மானிக்கிறீங்க?’’‘‘டப்பிங் படத்தைப் பொறுத்தவரை அதுக்கு வெற்றி, தோல்வி கிடையாது. போட்ட பணம் கைக்கு வந்தாலே சக்சஸ்னு எடுத்துக்கணும். ரொம்ப ஆசைப்படக் கூடாது. சின்ன மீனைப் போட்டு, ரெண்டு மூணு சின்ன மீன்தான் இங்கே பிடிக்க முடியும். அதுக்கு மேல ஆசைப்பட்டா உள்ளதும் போயிடும். உதாரணத்துக்கு, உரிமம் வாங்கவும், டப்பிங் பண்ணவும் வெறும் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்த ஒரு சின்ன படத்தை 2 லட்ச ரூபாய்க்கு விற்க முடியாது.
ஆனா, பத்து லட்சம் செலவு பண்ணியிருக்கற கொஞ்சம் வேல்யூ உள்ள படத்தை 20 லட்சத்துக்கு ஈஸியா வித்துடலாம். அதைத் தீர்மானிக்க அனுபவம் வேணும். சன் டி.வி ரைட்ஸ் வாங்கின பிறமொழிப் படங்களை டப் பண்ணினா, கண்டிப்பா நமக்கு லாபம்தான். சாட்டிலைட் ரைட்ஸ், ‘எஃப்.எம்.எஸ்’னு சொல்லப்படுற வெளிநாடுகள் ரைட்ஸ், கேரளா, பெங்களூர் ரைட்ஸ்னு ஒரு படத்தை லாபகரமா விற்க நிறைய வாய்ப்பிருக்கு. ராகவா லாரன்ஸ் தெலுங்கில் இயக்கின ‘டான்’ படத்தை 10 லட்சத்துக்கு வாங்கி, 20 லட்சத்துக்கு வித்துட்டோம். ஆனா, அதுக்காக ரொம்ப வருத்தப்பட்டோம். ஏன்னா, அந்தப் படம் இங்கே கோடிகள்ல வசூல் பண்ணுச்சு!’’
- மை.பாரதிராஜா