குட்டிச்சுவர் சிந்தனைகள்



இந்தியாவோட கோப்பை கனவ இங்க் ரப்பர் எடுத்து அழிச்ச கதையா, செமில நமக்கு உமிய ஊட்டி விட்டுட்டாங்க. அதுக்காக நம்ம அணிய அம்போன்னு விட்டுட்டு ஹர ஹர சம்போன்னு போயிட முடியாது. இந்த வாரம்தான் ஐ.பி.எல். வருதுல்ல. ‘வில்லெடுத்து வேட்டைக்குப் போனாராம் ராஜா, முள்ளெடுத்து பறிச்சாராம் ரோஜா’ன்னு சம்பந்தமே இல்லாம நாலு சாக்கு போக்கு சொல்லி அணி வீரர்கள ஐபிஎல் சீரிஸுக்கு சியர்அப் பண்ணுவோம்.

சிட்னியில் இந்திய அணியின் கிட்னி காணாமல் போக மிக முக்கிய காரணம், மைதானத்துல இருந்த வாஸ்து பிரச்னைதான். பவுண்டரில இருந்து இந்திய அணி பேட்டிங் புடிக்க இருந்த பிட்ச் சரியா 75 மீட்டர். அதை எடுத்து, பவுண்டரி லைன்ல இ ருந்து சரியா 7 மீட்டர் தூரத்துல வச்சிருந்தா, இந்திய அணி ஓவருக்கு ஒன்பது பவுண்டரியும் சிக்சரும் விளாசி இருக்கும்.

நாம தோற்றது எட்டாவது மேட்ச். அதுக்கு முன்னால இந்திய அணி தொடர்ந்து 7 மேட்ச் ஜெயிச்சிருக்கு. வாரத்துக்கு மொத்தம் எத்தன நாளு? ஏழு நாளு. அதாவது வாரத்துல ஒவ்வொரு நாளுக்கும் ஒரு மேட்ச் ஜெயிச்சிருக்கு. அப்போ, வாரத்துல எட்டாவது நாளு இருந்தா அந்த மேட்ச்சையும் ஜெயிச்சிருக்கும். வாரத்துல எட்டாவது நாளு வைக்காம போனது உலகத்தின் குற்றமா? இல்ல, நம்ம அணியின் குற்றமா?

நம்ம அணியினருக்கு தண்ணில கண்டம், போதாக்குறைக்கு ஆஸ்திரேலியா வேற தண்ணில இருக்கிற கண்டம். ஜாதக கட்டத்துல கண்டமே காண்டுல இருக்கிறப்ப, அண்டத்துல இருக்கிற ஆஸ்திரேலியா கண்டத்துல குண்டு வச்சா பிண்டமாகித்தானே போவோம். அரையிறுதிய ஆஸ்திரேலியாவுல நடத்தாம உள்ளூரு அத்திப்பட்டியிலயோ வத்திப்பட்டியிலயோ நடத்தியிருந்தா ஆஸ்திரேலியா அணிய மல்லாக்க போட்டு மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்தி அமுத்தியிருப்போம். கோழிக் குஞ்ச கவ்வுற மாதிரி கூடைக்குள்ள போட்டு கமுத்தியிருப்போம்.

புகையிலை போட்டு துப்பிட்டுப் போனாளாம் பொன்னாத்தா, பராக்கு பார்த்துக்கிட்டு வந்து மாட்டிக்கிட்டாளாம் சின்னாத்தாங்கிற கதையா, மிஸ்ட்கால் மன்னார் - கோ பாஜக வழியில, சென்ற காங்கிரஸ் அரசு சரியாக திட்டமிடாமல் போனதே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம்னு வழக்கம்போல காங்கிரஸ் தலையில அம்மி அரைச்சுட்டு போயிட்டே இருக்கலாம்.

போன உலகக்கோப்பையில நம்ம நாட்டுல நாம ஆஸ்திரேலியாவ பொளந்து கட்டி முடிச்சதால, இப்ப அவங்க நாட்டுல நடக்கிற உலகக்கோப்பையிலும் அவங்கள அடிச்சு அசிங்கம் பண்ண வேணாம்னு விட்டுக் கொடுத்ததா சொல்லிக்கிட்டு, ‘சின்ன கவுண்டர்’ விஜயகாந்து போல விட்டுக்கொடுத்த பெருமையோட வானத்தைப் பார்த்துக்கிட்டே வெளிய வந்ததா அல்லு விட்டுட்டு போயிடலாம்.

எப்ப பார்த்தாலும் ஏதாவது படம் வர்றப்ப எதையாவது பாயின்ட்டா வச்சு பிரச்னை பண்றதே இப்ப ஃபேஷனா போச்சுன்னு புலம்புறாரு பெரியவர் ஒருத்தரு. அதுவும் சரிதானே. எல்லா ஜாதிக்காரங்களும் எல்லா மதத்தினரும் சேர்ந்து செய்யற தொழில்தான் சினிமா. டைரக்டருல இருந்து கடைக்கோடில லைட் புடிக்கிற வரை ஜாதியையும் மதத்தையும் பார்த்தா வேலை செய்யறாங்க? இந்த இந்த ஜாதிக்காரங்களுக்குத்தான் நான் பாட்டு எழுதுவேன்னு பாடலாசிரியர் சொல்றாரா? இல்ல, இந்த இந்த மதத்துக்காரங்களுக்குத்தான் டிக்கெட் கொடுப்பேன்னு எந்த திரையரங்க ஓனராவது சொல்றாரா?

கோயில்ல கூட இந்த மதத்தினர், அந்த மதத்தினர் வரக்கூடாதுன்னு போர்டு போட்டிருக்காங்க, ஆனா எந்த தியேட்டர்லயாவது அப்படிப் போட்டிருக்காங்களா? ரெண்டரை மணி நேரம் ஓடுற சினிமா படமெடுக்க எத்தனை ஜாதிக்காரங்க எத்தனை எத்தனை மாசம் தினம் எத்தனை மணி நேரம் வேலை செய்யறாங்க தெரியுமா? எப்பவுமே சினிமாவ சினிமாவா பார்க்கிறவன் படத்த பார்த்துட்டு வந்திடுறான்.

எப்பவும் ஜாதி நினைப்புல இருக்கிறவன், சினிமாவுலயும் அதைத் தேடுறான்னு சொல்றாரு ஒரு ஆங்கில அறிஞர். இப்படியே ஒவ்வொரு படத்துக்கும் பிரச்னை செய்யறதுனால ரெண்டு விஷயம்தான் நடக்கும். ஒண்ணு, அந்தப் படத்தை ஒரு தடவ ஏசில ஓசில பார்க்கலாம். ரெண்டு, அந்தப் படத்துக்கு செலவே இல்லாம வீண் விளம்பரம் செய்யலாம்.

நாட்டுல கள்ளக்காதலால சிலருக்குப் பிரச்னை. இதுல நல்ல காதல் சரியா, தவறான்னு நாட்டுல பலபேருக்குப் பிரச்னை. இந்த நல்ல காதலிலேயே ஜாதிப் பிரச்னை, மதப் பிரச்னை, அந்தஸ்து பிரச்னை, பணப் பிரச்னைன்னு பலப்பல பிரச்னை. ‘இந்தியாவுல எதுதான் காதல்’ங்கிறது இப்போ என்னோட பிரச்னை. வேகாத வெயில்ல ஓடாத கானல் நீரைப் பார்த்துக்கிட்டே வேப்ப மரத்தடில உட்கார்ந்து யோசிச்சப்பதான் புரிஞ்சுது, எந்த காதல் ‘அடாடா’ காதல், எந்த காதல் ‘அடேடே’ காதல்னு!

சம்பளம்னு வந்துட்டா, ஒண்ணுக்கு பின்னால நாலு சைபர்ல ஆரம்பிச்சு ஏழு சைபர் வரை இருக்கோணும். அஞ்சு சைபர் வரை ஆஹா, அஞ்சுக்கு மேல ஓஹோ. இதுல, காதலிக்கிறவங்கள்ல ஒருத்தர் வேலைக்குப் போனா ‘லலலலலா’. காதலிக்கிறவங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போனா ‘ஏலேலேலேலோ’. மதம்னு வந்துட்டா, வணங்கக்கூடிய மதமா இல்லாட்டியும் நாம போடுற கண்டிஷன்களுக்கு இணங்கக்கூடிய மதமா இருக்கணும்.

 ஜாதின்னு வந்துட்டா, வீட்டுப் பெரியவங்க மனமோ முகமோ சுணங்கக்கூடிய சாதியா இல்லாம, புழங்கக்கூடிய ஜாதியா இருக்கணும். பையன் பல திறமை கொண்ட கமல் மாதிரி இல்லாட்டியும், ஒரு திறமையாவது கொண்ட விமல் போலவாவது இருக்கணும். பொண்ணு, நட்டு வச்ச ரோஜா செடியா நித்யா மேனன் போல இல்லாட்டியும், கழுவி வச்ச குத்துவிளக்கா லட்சுமி மேனன் மாதிரியாவது இருந்தே ஆகணும்.

மேல சொன்ன கண்டிஷன்கள் எல்லாம் ஒத்துப்போனா, பல வீடுகளில் காதல் தப்பில்லையாம்பா. இதுல கொடுமை என்னன்னா, நாட்டுல பல ஜோடிங்க, இதெல்லாம் சரிபார்த்த பின்னாலதான் காதலிக்கவே ஆரம்பிக்கிறாங்களாம். பார்த்தவுடனே வந்த காதல் எல்லாம் 1960களில்; பார்த்து பழகி வந்த காதல்கள் எல்லாம் 1980களில்; பாலிடிக்ஸ் பஞ்சாயத்த முடிச்சுக்கிட்டு பஞ்சாங்கம் போற காதல்தான் இப்பவெல்லாம்.