நியூஸ் வே



ஏப்ரல் 10ம் தேதி ‘உத்தம வில்லன்’ ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாமல் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகலாம் என்கிறார்கள். இதற்கிடையில் திருப்பதி பிரதர்ஸ் ‘ரஜினி முருகன்’ பட தமிழக உரிமையை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வாங்கிவிட்டார்.

பாஹுபலி’ ரிலீஸானால் தெலுங்கிலும், தமிழிலும் செகண்ட் இன்னிங்ஸை ஸ்ட்ராங் பண்ணலாம் என ஹேப்பி மூடில் இருக்கிறார் தமன்னா. தனது தந்தையோடு இணைந்து ஆன்லைன் நகைக்கடை ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார் அவர்.

நடிகையாக இருப்பது சருமத்துக்கு மிகப் பெரிய ஆபத்து’’ என்கிறார் டாப்ஸி. மேக்கப், லைட்டிங் என எல்லாமும் சேர்ந்து சருமத்தைக் கெடுத்து விடும். ‘‘நிறைய தண்ணீர் குடித்து, பழங்கள் சாப்பிட்டு சருமத்தைக் காப்பாற்றுகிறேன்’’ என்கிறார் இந்த வெள்ளாவி பொண்ணு!

‘அனேகன்’ பட வசூல் எல்லா தரப்பினருக்கும் ஆனந்தத்தை அளிக்க, படத்தில் பணிபுரிந்தவர்கள் அத்தனை பேரும் ஃபேமிலி கெட் டுகெதரில் உற்சாகம் அடைந்தனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு படம் பண்ண வாய்ப்பிருப்பதாக அந்த சக்சஸ் மீட்டில் ஒரு டாக் கிளம்பியிருக்கிறது!

அமீர் கானின் ‘பிகே’ படம் சீனாவுக்குப் போகிறது. வரும் மே மாதம் அங்கு சுமார் 3500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ‘3 இடியட்ஸ்’ அமீருக்கு சீனாவில் ஏராள ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்தது. அது இங்கு வெளியாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகே சீனா போனது. ‘பிகே’ சீக்கிரம் போகிறது!

நயன்தாரா சொந்த ஊரில் பெரிய வீடு கட்டுகிறார். இது அவரது கனவு வீடு. மும்பையில் வீடு வாங்கவும் அவருக்கு ஐடியா. அதனால் கதை கொஞ்சம் சிறப்பாக இருந்தாலே ஓகே சொல்லி விடுகிறார் இப்போது.

சம்மரை டார்கெட் செய்து, பரபரவென ஷூட்டிங்கை நடத்தி வருகிறது ‘எலி’ யூனிட். பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாளிக்குமோ, அதேபோல ஒரு ஃபைட் படத்தில் உள்ளது. அந்த சண்டைக்காட்சியை சூப்பர் சுப்பராயன் வடிவமைத்துள்ளார்.

சசராசரியாக ஒரு இந்தியர் தினமும் 5 கிராம் சர்க்கரை சாப்பிடுகிறார்; ஒரு அமெரிக்கர் தினமும் சாப்பிடும் சர்க்கரை 126 கிராம்.

உலகின் அத்தனை விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளாக மாறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்கள் போலிருக்கிறது! இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட், திலீப் காந்தி. புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை படங்களை பெரிதாக்கும் முடிவில் இருந்தது மத்திய அரசு.

ஆனால் திலீப் காந்தி தலைமையிலான நிலைக்குழு, ‘புகையிலையால் புற்றுநோய் வருகிறது என்பதை நிரூபிக்கும் எந்த ஆராய்ச்சி முடிவும் இந்தியாவில் இல்லை. இப்படி அறிவிப்பு செய்தால் புகையிலை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்’ எனச் சொல்லி அதைத் தடுத்துவிட்டது. புகையிலை மென்றதால் 28 வயதிலேயே புற்றுநோய் வந்து அவதிப்பட்ட சுனிதா தோமர், தன் மரணத்துக்கு முன்பாக பிரதமருக்கு இதுபற்றி உருக்கமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். மரண வாக்குமூலம் மனதை அசைக்குமா?

பேட்மிண்டன் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார் சாய்னா நெஹ்வால். கடந்த வாரம் டெல்லியில் நடந்த இந்திய ஓப்பன் சூப்பர் சீரிஸில் ‘யார் சாம்பியன்?’ என்பதைவிட ‘யார் நம்பர் 1 ஆவார்கள்?’ என்கிற பரபரப்பே அதிகம் காணப்பட்டது. இரண்டிலும் வெற்றி வாகை சூடினார் சாய்னா. இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் ஒரு வீராங்கனை ‘நம்பர் 1’ ஆக வருவது இதுதான் முதல்முறை. ஒலிம்பிக்கில் வெண்கலம் உள்பட பல்வேறு பதக்கங்கள், பட்டங்கள் பெற்றிருந்தாலும், நம்பர் 1 இடம் சாய்னாவை உச்சிக்கு உயர்த்தி விட்டது. தற்போது அவர் ஆறு முன்னணி பிராண்ட்களுக்கு விளம்பர மாடலாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இனி இந்த ஐதராபாத் பொண்ணை அடிக்கடி விளம்பரங்களில் பார்க்கலாம்!

பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கும் ‘சண்டிவீரன்’ படத்தில் நடித்து வரும் ‘கயல்’ ஆனந்தியின் லேட்டஸ்ட் எய்ம், பாலாவின் டைரக்ஷனிலும் நடித்துவிட வேண்டும் என்பதே! சின்ன வயதிலிருந்து பைலட் ஆவது தான் அவரின் கனவு. ‘‘என்றாவது ஒருநாள் பைலட் ஆகியே தீருவேன்’’ என்கிறார்.

போட்டோ எடுப்பதற்காக கேமராவைத் தூக்கினால், ஒரு குழந்தை என்ன செய்யும்? போஸ் கொடுக்கும்; அல்லது வெட்கப்படும்! ஆனால் கேமராவை துப்பாக்கியாக நினைத்து பீதியோடு உதடுகளைப் பிதுக்கி சரணடைந்து கைகளை உயர்த்துமா? சிரியா அகதி முகாம் ஒன்றில் எடுக்கப்பட்ட ஹுடியா எனும் 4 வயதுக் குழந்தையின் இந்தப் புகைப்படம் உலகெங்கும் பலரை பதைபதைக்க வைத்திருக்கிறது. ‘‘நீளமான லென்ஸ் வைத்து படம் எடுத்தேன். அதை துப்பாக்கி என அவள் நினைத்து விட்டாள்’’ என்கிறார் இந்தப் புகைப்படத்தை எடுத்த உஸ்மான் ஷாகிர்.

மூன்று ஆண்டுகளாகத் தொடரும் சிரியா உள்நாட்டுப் போரில் 2 லட்சம் பேர் இறந்துவிட்டார்கள். 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறிவிட்டார்கள். ஜனநாயக வேட்கையில் தொடங்கிய அரபு வசந்தம், இப்போது பல நாடுகளை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. லேட்டஸ்ட்டாக ஓமன். இன்னும் எத்தனை நாட்களுக்கு உலகம் இந்தத் துயரத்தை மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்கும்?