சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான்யூ மரணம் குறித்து நடிகர் விவேக் வருந்தித் தந்த இரங்கற்பா...
ஊருக்கு உழைத்த கொற்றவா?
சிங்கப்பூரின் சிங்கம் இன்று
அடங்கி விட்டதே!
லஞ்சம் தொடா தேகம் ஒன்று
முடங்கி விட்டதே!
உழைப்பு என்னும் பெருவாழ்வு
உறங்கி விட்டதே - உங்கள்
ஊர்க் கொடிகள் பாதியாக
இறங்கி விட்டதே!
நேரு மாமா நண்பனாக
வாழ்ந்த கொற்றவா! - உன்னிடம்
ஊருக்குழைக்கும் உன்னதத்தை
நாங்கள் கற்கவா?
உலகப்பந்தில் சிங்கப்பூரை
புள்ளி என்பதா? - அதை
உலகனைத்தையும் திரும்பிப் பார்க்க
வைத்த மன்னவா!
கொஞ்சம்கூட வளங்கள் அற்ற
தீபகற்பம்தான் - அதை நீ
லஞ்சம் இன்றி மாற்றியதால்
வாழும் சொர்க்கம்தான்!
உண்மை உழைப்பு ஒழுக்கம்
என்று நீதி நாட்டினாய் - எங்கள்
அண்மையிலே வாழ்ந்து, முடிந்து
பாதை காட்டினாய்!
‘உலகத் தலைவர் இரங்கற் செய்தி’
ஒன்றும் புதிதல்ல! - எங்கள்
ஊரில், தெருவில் ‘இரங்கற் தட்டி’!!
இது சாதா நிகழ்வல்ல!
எப்போதும் தேசநலன்
உந்தன் சிந்தையே! - இனி
என்று காண்பர் மீண்டும் உன்னை
பாசத் தந்தையே?
மண் சிறக்க; மழை பெருக்க
மரம் வளர்த்தவா! - எங்கள்
கண் பனிக்க கைகூப்பி
சிரம் தாழ்த்தவா..!
எங்கள் கண்ணீர் கடல் கலந்து
இன்னும் கரிக்கட்டும்
எதிர்காலம் உந்தன் பெயரைப்
பொன்னில் பொறிக்கட்டும்!
ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்