மறைந்தவரானாலும் மறக்க முடியாத என் நண்பர்... காதல் மன்னன். நான் கல்லூரியில் படித்த காலத்தில் - 1947ம் வருடம் என்று நினைக்கிறேன் - வெறும் கத்திச் சண்டை, குத்துச் சண்டை, ராம பக்த அனுமான், சதி சாவித்திரி போன்ற படங்கள் மட்டுமே கிடைத்த நேரம்... திடீரென்று 'மிஸ்.மாலினி’ என்று ஒரு படம் தோன்றியது. பிரபல ஹிந்தி நடிகை ரேகா அவர்களின் தாயார் புஷ்பவல்லி நாயகியாக நடித்த படம். கதையே ஒரு நாடக நடிகையின் வாழ்க்கை.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் எழுதிய ‘மிஸ்டர் சம்பத்’ என்ற கதையைப் படமாக்கும் முயற்சி ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் அவர்களைத் தவிர வேறு யாருக்கு வரும்? என் தந்தையாருக்குப் பழக்கமில்லாத சினிமா பிரபலம், ‘ஜெமினி’ வாசன் அவர்கள்தான். இயக்குனர் கே.சுப்ரமணியம், மெய்யப்பச் செட்டியார் போன்றவர்கள் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். வாசன் அவர்கள் அந்தத் தொடர்பு கொள்ளவில்லை.
இந்திய ஆளுமை வெள்ளையர் காலத்திலிருந்து வருமான வரி இலாகா அதிகாரிகளைக் கொண்டு எல்லோரையும் முறைத்த காலம்... அந்த ஆர்.கே.நாராயண் கதை ‘மிஸ்டர் சம்பத்’ என்று ஹிந்தியிலும் படமாக்கப்பட்டது. ஆயினும் ‘மிஸ்.மாலினி’ மறக்க முடியாத ஒரு படம். பாடல்கள் சில அப்படியே மனதில் நிற்கின்றன.
‘மைலாப்பூர் வக்கீலாத்து
மாட்டுப்பொண்ணாவேன்...
வைகாசி ஆனி மாதம்
குத்தாலம் போவேன்
வைரத்தோடு பட்டுப்புடவை
வகைவகையாய் போடுவேன்
வாத்தியாரை டியூஷன் வைத்து
ஹிந்துஸ்தானி பாடுவேன்...’
1947ல் 27 வயது வாலிபனாக ஜெமினி கணேசன் அதில் தோன்றினார். ‘காதல் மன்னன்’ என்று பெயர் வாங்கினாரே தவிர, அவர் தானே தேடிப் போய் யாரையும் வலையில் வீழ்த்தியதில்லை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து விட்டு, 1954ல் ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் கதாநாயகனானார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற இந்த மூவர் வரும்முன் தமிழ்க் கதாநாயகர்களில் பாடத் தெரிந்தவர்கள்தான் முன்னேறினார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் - இந்த மூவருக்குப் பின் தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகர்கள்தான் வெற்றி பெற்றார்கள். என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பெரிய ஹீரோக்களாகக் கருதப்பட்டனர். 1949ல் திராவிடர் கழகம் உருவானது. 1952ம் வருடம் உலகப்புகழ் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதற்கு முன்பே நான் எம்.ஜி.ஆர் அவர்களை திரையில் கண்ட முதல் படம், ‘அசோக் குமார்’. எம்.கே.தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்தது. 1940 ஆக இருக்கலாம். அதில் சேனாதிபதியாக வந்து வாளை உருவும் காட்சி இன்னும் மனதில் நிற்கிறது.
1960களில் ஆட்சி செலுத்திய தமிழ்ப் பட மும்மூர்த்திகளில் ஜெமினி படத்திற்கு பெண்கள் கூட்டம் அலைமோதும். சகலகலா வல்லவர் அவர். அக்காலத்தில் நான் என் கல்லூரி சார்பில் டென்னிஸ் ஆடியிருக்கிறேன். கிரிக்கெட் அணியின் தலைவனாக செயல்பட்டிருக்கிறேன். என் 40ம் வயதில் பரமக்குடி பொழுதுபோக்கு சங்கத்தில் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றிருக்கிறேன். நான் வக்கீலான பிறகும் கூட சென்னையில் ‘மாம்பலம் மஸ்கிட்டோஸ்’ என்ற அணியில் பி.சி.ஆல்வா அருள்தாசுடன் ஒன்றிரண்டு போட்டிகளில் ஆடியிருக்கிறேன்.
1960ல் ஒரு ஆட்டம்... கிறிஸ்தவக் கல்லூரி பழைய மாணவர்கள் அணியில் ஆடி ஜெமினி நான்கு சிக்ஸர்கள் அடித்ததைப் பார்த்து வியந்திருக்கிறேன். பின்னால் அவருடன் அவர் வீட்டிலேயே டேபிள் டென்னிஸ் விளையாடித் தோற்றிருக்கிறேன். ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் என்னிடம் பேசும்போது சொன்னார்... எவ்வளவு உயரத்திலிருந்தும் பயமில்லாமல் குதிப்பவர் இவர்தானாம். ‘‘ஜெமினிக்குப் பிறகு அவர் போல் பயமில்லாமல் செய்த ஹீரோக்கள் கமலும் விஜய காந்தும்தான்’’ என்றார் அவர்.
ஜெமினி அண்ணா அவர்கள் மீது எல்லா ஆண்களுக்கும் கோபம். அவரைப் பற்றி ஏதாவது குறைகள் சொன்னால்தான் திருப்தி அடைவார்கள். நான் அவர் குடும்பத்தில் ஒருவனாகப் பழகியவன். அவர் கடைசியாக ஒரு பெண்ணை மணந்தபோது, அவர் சொந்த வீட்டுக்குத் தெரியாமல் வைத்த வாடகை வீட்டுக்கு நான் என் நண்பர் ஆபீஸிலிருந்து ஓசி வாங்கி புதுப்பித்த ஏ.சி குளிர் சாதனத்தைக் கொடுத்து, விஷயம் அவருடைய ஒரிஜினல் மன்னிக்குத் தெரிந்துபோய் திட்டு வாங்கியவன்.
எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட செய்தி கிடைத்த அன்று, நானும் ஜெமினியும் நண்பர் எஸ்.என்.நாராயணன் வீட்டில் மதிய உணவு அருந்தப் போயிருந்தோம். ஜெமினி மற்ற நடிகர்கள் போல் தாராள செலவுகள் செய்ய மாட்டார்.
ஒருசிலர் நண்பர்களுக்காக மாடு போல் உழைப்பார்கள்... ஆனால், கையிலிருந்து காலணா செலவு செய்ய மாட்டார்கள். ஜெமினி அண்ணா அந்த ரகம். மேல் வகுப்பு டிக்கெட் பரமக்குடியிலிருந்து சென்னைக்கு 30 ரூபாயாக இருந்த அந்த நாட்களில், ஒரு நாள் அண்ணாவின் நண்பர்களுடன் லூட்டி அடித்தால் போதும்... பை காலியாகி, திரும்பி ஊருக்கு மூன்றாம் வகுப்பில்தான் போக வேண்டும்.
இருந்தாலும்... ஒருமுறை பரமக்குடியிலிருந்து போன் செய்து, ‘‘என் கட்சிக்காரரான எஞ்சினியர் ஒருவருக்கு சிலோன் செல்ல விசா கொடுக்க மறுக்கிறார்களாம்... உதவி செய்ய முடியுமா?’’ என்று கேட்டேன்.‘‘உடனே புறப்பட்டு வா!’’ என்றார். நான் அன்றைய இண்டோ சிலோன் எக்ஸ்பிரஸில் வந்து இறங்கினேன்.
ஜெமினியின் டிரைவர் என்னை எக்மோரில் சந்தித்து, ‘‘அண்ணா ஷூட்டிங்குக்குப் போகணும்... காரில் இருக்கிறார்’’ என்று அழைத்துப் போனான். அவர் என்னை அழைத்துப் போய், அந்த நாட்டின் டெபுடி ஹை கமிஷனரிடம் அறிமுகப்படுத்தி விட்டுப் போனார். அவருடைய வெளிநாட்டு நண்பர்கள் வரும்போது நடு இரவானாலும் விமான நிலையத்தில் தானே காத்திருந்து அழைத்து வருவார்.
ஜெமினி அண்ணாவின் நகைச்சுவையே அலாதி. 3வது ரவுண்டு ஏறியதும் அனல் பறக்கும். ஒரு முறை என்னிடம் ஒரு அருமையான கதை அடித்தார். பிரபல சென்னை விபசார புரோக்கர் ஒரு அரேபிய ஷேக்குக்கு, பிரபல நடிகைகளின் பெயரெல்லாம் சொல்லி... ‘‘யார் வேணும்?’’ என்று கேட்டாராம்.ஷேக் சொன்னாராம், ‘‘டேய், யாரை ஏமாத்தப் பாக்கிறே? கொண்டாடா ஜெமினி கணேசனை?’’‘‘அப்பறம்... போனீங்களா அண்ணா?’’ என்று கேட்டு அடி வாங்கினேன்.
எவ்வளவு உயரத்திலிருந்தும் பயமில்லாமல் குதிப்பவர் ஜெமினிதானாம். ‘‘ஜெமினிக்குப் பிறகு அவர் போல் பயமில்லாமல் செய்த ஹீரோக்கள் கமலும் விஜயகாந்தும்தான்’’ என்றார் ஒரு ஸ்டன்ட் மாஸ்டர்.
(நீளும்...)
சாருஹாசன்
ஓவியங்கள்: மனோகர்