தீபிகா படுகோன் திகுதிகு வீடியோ
நான் திருமணம் செய்வேன்... செய்யாது இருப்பேன்... அது என் விருப்பம். திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வதோ, திருமண பந்தத்துக்கு வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வதோ, செக்ஸே வைத்துக்கொள்ளாதிருப்பதோ...
அது என் விருப்பம். ஆணைக் காதலிப்பதும் பெண்ணைக் காதலிப்பதும் காதலிக்காமலே இருப்பதும் என் விருப்பம்...’’ - இப்படி ஒரு பெண் பேசினால் என்னாகும்? அதுவும் தீபிகா படுகோன் மாதிரி பிரபல நடிகை பேசினால் என்னாகும்? இணையத்தில் நுழைந்து பார்த்தால் ஃபோரம்கள் எங்கும் காரமான விவாதம் இதுதான்!
ஃபேஷன் பத்திரிகை ஒன்று தயாரித்திருக்கும் இந்த வீடியோ, ‘எதிலும் பெண்ணுக்கென ஒரு விருப்பம் உண்டு’ என்பதையே பேசுகிறது. நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி நறுக்கென்று பேசுகிறது. அதுதான் பிரச்னை. இந்த நிமிடம் வரை 51 லட்சத்து சொச்சம் பேர் பார்த்திருக்கும் இந்த வீடியோவுக்கு 8866 பதிலுரைகள் விழுந்துவிட்டன. அவற்றில் பாதிக்குப் பாதி ‘பலே’ சொல்கின்றன; மீதி அனைத்தும் கழுவி ஊற்றும் ரகம்.
‘‘நானும் ஒரு பெண்தான். ரொம்பவும் வலிமையான பெண். அதற்காக செக்ஸ் விஷயங்களில் என் உரிமையைக் காட்ட மாட்டேன். என் போன்ற கோடிக்கணக்கான பெண்களின் குரலாக இந்த வீடியோ இல்லை. தீபிகா போன்றவர்களின் குரலாகத்தான் இருக்கிறது!’’ என இந்த வீடியோவுக்குக் கீழேயே சூப்பர் ஹிட் பதிலுரை இட்டிருக்கிறார் ரீத்து கோஷ் என்பவர். இங்கே என்ன நினைக்கிறார்கள்? பெண்ணிய சிந்தனையாளர்கள் சிலரிடம் கேட்டோம். ‘‘நம் ஊரில் பெண்களே இதை ஏத்துக்காதது கொடுமை. தான் ஒரு பெண் என்ற உணர்வு அவங்களுக்கே இல்லாததைத்தான் இது காட்டுது!’’ என அதிரடியாகத் துவங்கினார் கவிஞர் மனுஷி.
‘‘இந்த வீடியோ ஏதோ செக்ஸ் மட்டும்தான் பெண் விடுதலைங்கற மாதிரி ஒரு எண்ணத்தைத் தருது. ஆனா, படிப்பு, வேலைவாய்ப்புன்னு பெண்கள் முன்னேற்றத்தில் பேச நிறைய விஷயங்கள் இருக்கு. பேசின வரைக்கும் இந்த வீடியோ ஓகேதான். செக்ஸ் என்பது மனசு சம்மந்தப்பட்டது. அதில் அடுத்தவங்க கேள்வி கேட்கக் கூடாது. அதை அழுத்தமா சொல்ற இந்த வீடியோவுக்கு நான் லைக்ஸ்தான் போடுவேன்!’’ என்றார் அவர் உறுதியாக.
இந்த வீடியோவில் தீபிகா தவிரவும் 99 பெண் ஆளுமைகள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், எழுதியதும் இயக்கியதும் ஆண்கள். ஆக, ‘இது ஆண்களால் திணிக்கப்பட்ட பெண்ணியப் பார்வை. பெண்கள் இப்படி செக்ஸில் தாராளக் கொள்கை கொண்டிருந்தால், அது குடும்ப அமைப்பை விரும்பாத ஆண்களுக்கு நல்லது. அதற்கான பிரசாரம் இது!’ என்றும் விவாதிக்கிறார்கள் ஆன்லைன் அலசல்காரர்கள்.
‘‘ ‘நான் யாரோடும் உறவு கொள்வேன்... இரவு எந்நேர மும் வீட்டுக்கு வருவேன்... அது என் விருப்பம். நீங்கள் (ஆண்கள்) கூட என் விருப்பம்தான். இந்த பிரபஞ்சமே நான்தான்!’ என இந்த வீடியோ கொஞ்சம் அதிகம் பேசியிருக்கிறது. இது ஆண் - பெண் சமத்துவம் ஆகாது. பெண்களிடம் ‘பிரபஞ்சமே நீதான்’ எனக் கற்பூரம் காட்டும் ஆண் மனோபாவத்துக்கே இது மறுபடி இட்டுச் செல்கிறது. ஒரு ஜர்னலிஸ்ட்டாக நான் மாலை 5 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வேலை பார்த்திருக்கிறேன். தேவைப்பட்டால் இந்தியக் குடும்பம் அதை ஏற்றுக்கொள்கிறது. வீம்புக்காக அதைச் செய்வது பெண்ணியமாகாது!’’ என ஃபர்ஸ்ட் போஸ்டில் எழுதியிருக்கிறார் பியாஸ்ரீ தாஸ்குப்தா.
‘‘குடும்ப வாழ்வுக்குள் அடங்கி, நிறைய குழந்தை பெற்றுக்கொள்வதாக இருந்தாலும் அது ஒரு பெண்ணின் சாய்ஸாக இருக்க வேண்டும். திணிக்கப்படக் கூடாது என்பதாகத்தான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் பெண்ணியவாதியான விலாசினி.‘திருமண வாழ்வுக்கு வெளியே செக்ஸ் வைத்துக்கொள்வது கூட என் விருப்பம்’ என்ற வரிகள்தான் இங்கே பலரையும் கோபப்பட வைத்திருக்கிறது. ‘இந்திய தண்டனைச் சட்டம் 497ன் படி இது குற்றம்’ என வாதிடுகிறது ஒரு குரூப். வழக்கறிஞர் அஜிதாவிடம் இது பற்றிக் கேட்டோம்.
‘‘ஐ.பி.சி 497ன்படி திருமணமான பெண்ணோடு உறவுகொள்ளும் ஆணைத்தான் தண்டிக்க முடியும். பெண்ணை தண்டிக்க முடியாது. காரணம், இந்தச் சட்டம் பெண்களை குற்றவாளியாகப் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டவராகத்தான் பார்க்கிறது. ஆனால் அதற்காக ‘நான் யாரோடும் உறவு வைத்துக்கொள்வேன்’ எனச் சொல்லலாமா என்பது தெரியவில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் எனும் ஒப்பந்தத்துக்குள் இருக்கும்போது, அதற்கு உண்மையாக இருக்க வேண்டியது அடிப்படை!’’ என்றார் அவர்.அதானே! ஒப்பந்தம் மீறுவதில் ஆண் என்ன? பெண் என்ன?
அப்பவே அப்படி!
நம்மூரில் பெரிய பெரிய புரட்சிக் கருத்துக்களை எல்லாம் பெரும் நடிகர்களே பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். இதைப் போய் இவ்வளவு பெருசா பேசுறீங்களே என இந்த விஷயத்தில் தலையில் அடிக்கிறார்கள் சிலர். அவர்கள் காட்டும் முக்கிய உதாரணங்கள் இரண்டு...
எம்.ஜி.ஆர்
‘கண்கள் இருக்க தோரணம் ஏனோ
கைகள் இருக்க மாலைகள் ஏனோ
உள்ளம் இருக்க மணவறை ஏனோ
ஒரு மனதானால் திருமணம் ஏனோ’
பாடல்: நீயேதான் எனக்கு மணவாட்டி
படம்: குடியிருந்த கோயில்
ரஜினி
‘முதலில் யோசிக்கணும்; பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு’
பாடல்: நூறு வருஷம்
படம்: பணக்காரன்
- நவநீதன்