புலி மனிதருக்கு தேசிய விருது!



சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான தேசிய விருதுப் பட்டியலில் இடம்பெற்ற மற்றுமொரு தமிழன், சுப்பையா நல்லமுத்து. ‘லைஃப் ஃபோர்ஸ்- இண்டியா’ஸ் வெஸ்டர்ன் காட்ஸ்’(Life Force India’s Western Ghats)   என்ற டாகுமெண்டரிக்காக சிறந்த சாகசப் படத்துக்கான விருதை வென்றிருக்கிறார் நல்லமுத்து. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் ஆதிக்கம் செலுத்தும் ‘வைல்ட்லைஃப் ஃபிலிம் மேக்கிங் இண்டஸ்ட்ரி’யில் தனி அடையாளத்தோடு தலையெடுத்து நிற்கும் நல்லமுத்து பெறும் மூன்றாவது தேசிய விருது இது. ஏற்கனவே ‘கிரீன் ஆஸ்கர்’ உள்பட ஏகப்பட்ட சர்வதேச அங்கீகாரங்கள் அவர் வீட்டை நிறைக்கின்றன.

நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த நல்லமுத்துவை ‘டைகர்மேன்’ என்கிறார்கள் உயிரியலாளர்கள். ‘டைகர் ரிவெஞ்ச்’, ‘லைஃப் ஃபோர்ஸ்’, ‘டைகர் எக்ஸ்ப்ரிமென்ட்’, ‘குயின் ஆஃப் த டைகர்ஸ்’, ‘டைகர் டைனஸ்டி’ உள்பட இவர் எடுத்த அத்தனை புலிப் படங்களும் உலக அளவில் சிலாகிக்கப்பட்டவை. விருது வாங்கிய இந்தப் படம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பரப்பில் மட்டுமே காணக் கிடைக்கும் 10 அரிய வகை உயிரினங்களின் வாழ்வைக் காட்சியாக்குகிறது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி கோடிக்கணக்கான ரசிகர்களின் பாராட்டை ஈட்டிய படம்.

நல்லமுத்து, சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலும் மத்திய அரசின் திரைப்படப் பிரிவிலும் பணியாற்றியவர். இப்போது வனமும் வனம் சார்ந்த வாழ்க்கையுமாக கேமராவோடு சுற்றுகிறார். ‘‘மேற்குத் தொடர்ச்சி மலை மேல எனக்கு காதலே உண்டு. பூமியில் அது ஒரு பொக்கிஷம். அதுக்குள்ள நிறைய ரகசியங்கள் புதைஞ்சு கிடக்கு. அந்த மலையோட நிழல்லதான் நான் பிறந்தேன். அப்பா ஆசிரியர். நாங்க நாலு பிள்ளைங்க. நாலு பேரையும் அரசு வேலையில சேர்க்கணும்ங்கிறது அப்பாவோட கனவு. ஆனா என் கனவு சினிமா. +2 முடிச்சவுடனே திரைப்படக் கல்லூரிக்கு வந்துட்டேன்.

படிப்பு முடிஞ்சவுடனே விண்வெளி ஆய்வுத்துறையில வேலை கிடைச்சுச்சு. அங்கே, நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சேன். பறவைகளோட வேகத்தையும், ராக்கெட்டோட வேகத்தையும் ஒப்பிட்டு ஒளித்தொகுப்புகள் உருவாக்கினேன். அதேநேரம் சினிமாவையும் விடலே. அப்போ மணிரத்னம் சார் ‘அஞ்சலி’ படம் எடுத்துக்கிட்டிருந்தார். சனி, ஞாயிறுகள்ல அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை செஞ்சேன். பிறகு விண்வெளித் துறை வேலையை விட்டுட்டு, அரசு ஃபிலிம் டிவிஷன்ல சேர்ந்தேன். நிறைய டாகுமெண்டரி பண்ணினேன். ஆனா, எதையும் ரசனையா செய்யறது அரசுப் பணியில சாத்தியமில்லை. வேலையை விட்டுட்டு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சேன். 

வைல்ட்லைஃப் ஃபிலிம் மேக்கிங் அப்போ இங்கே பெரிசா பேசப்படல. காட்டுயிர் காட்சி களை வெறும் ஆவணப்படமா இல்லாம, கதையம்சத்தோட, கவிநயத்தோட படமாக்குறதுதான் இந்தக் கலை. ஆனா, அது ஒரு வரியில சொல்ல முடியற அளவுக்கு எளிதான விஷயமில்லை. காட்டுயிர்களோட வாழ்விடத்துல தவம் கிடக்கணும். களத்துலதான் கதையைத் தீர்மானிக்கணும். நிறைய ஆபத்துகளை சந்திக்கணும். ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தப் பழகணும். கண்ணிமைக்கும் நேரத்துல ஒரு அற்புதம் நம்மை விட்டு மறைஞ்சிடும். தொழில்நுட்பமும் ரொம்ப முக்கியம். பெரிய டீமும் வச்சுக்க முடியாது. அதிகபட்சம் மூணு பேர். காட்டுயிர் சார்ந்த அறிவும் ரொம்ப முக்கியம். 

புலி மேல எனக்கு பெரும் ஈர்ப்பு உண்டு. புலிகளோட வாழ்க்கைக்குள்ள நிறைய கதைகள் இருக்கு. அதைத் தேடுறதும், அந்த வாழ்க்கையைப் பக்கத்துல இருந்து பார்க்கிறதும் அவ்வளவு ரசனை. நிறைய படங்கள் எடுத்தேன். பல சேனல்கள்ல அந்தப் படங்கள் வந்துச்சு. ‘டைகர் டைனஸ்டி’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும், சிறந்த சுற்றுச்சூழல் படத்துக்கான விருதும் கிடைச்சுச்சு. ‘டைகர்ஸ் ரிவெஞ்ச்’ படத்துக்கும் தேசிய விருது கிடைச்சுச்சு.

ராஜஸ்தான் மாநிலத்துல உள்ள ராந்தாம்போர் உயிரியல் பூங்காவில மச்சிலிங்கிற புலிக் குடும்பத்தை எட்டு வருஷமா, 4 தலைமுறையா தொடர்ந்துக்கிட்டு இருக்கேன். மச்சிலிக்கு 3 பெண் குட்டிகள். அதில் ஒரு புலி அம்மாவை அடிச்சுத் துரத்திட்டு, அம்மாவோட கட்டுப்பாட்டுல இருந்த காட்டை ஆக்கிரமிச்சிடுச்சு. ஆனா அந்தப் புலிக்கு குழந்தையில்லை. ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த சினிமாவுக்குரிய கதை இந்தப் புலி குடும்பத்துக்குள்ள இருக்கு. அதுதான் என் அடுத்த ப்ராஜெக்ட்...’’ என்கிறார் நல்லமுத்து.

விருது வாங்கியிருக்கும் படத்துக்காக 18 மாதங்கள் அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் பரண் கட்டி குடியிருந்திருக்கிறார் நல்லமுத்து. தேவாங்கு, ஹார்ன்பில் எனப்படும் கொம்புப்பறவை, ஊதா தவளை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் வாழ்க்கை முறையை அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்திருக்கிறார். ‘‘இந்தப் படத்துக்காக நிறைய சவால்களை எதிர் கொண்டிருக்கேன். ஊதா தவளை வருஷத்துக்கு ஒருமுறைதான் பூமிக்குள்ள இருந்து மேலே வரும். 2 நாள்ல இனப்பெருக்கம் முடிச்சு முட்டையிட்டு திரும்பவும் உள்ளே போயிடும்.

சிறிய ஒலி மூலமா அது வெளிவரும் நாளைத் தெரிஞ்சுக்கலாம். அதுக்காக பல வாரங்கள் காத்துக் கிடந்திருக்கேன். ஹார்ன்பில் பறவைக்காக 250 அடி மரத்து மேல பரண் அமைச்சு 2 மாதம் உக்காந்திருந்தேன். முட்டையிட்டு அடை காத்து குஞ்சு வெளியே வர 40 நாளாகும். தாய்ப்பறவைக்கு இணையா நானும் அந்தக் கூட்டைப் பாத்துக்கிட்டே இருந்தேன். அந்த உழைப்புக்கான பலன்தான் இந்த தேசிய விருது...’’ - பெருமிதமாகச் சொல்கிறார் நல்லமுத்து.

பங்கஜ்குமார் நடிப்பில் உருவான ‘தரம்’ என்ற இந்திப் படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார் நல்லமுத்து. முதன்முதலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய படம். அப்படத்திற்காகவும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். நல்லமுத்துவைப் பற்றிச் சொல்ல இன்னொரு செய்தியும் இருக்கிறது. இந்தியாவின் கௌரவங்களில் ஒன்றான ‘மங்கள்யான்’ திட்ட இயக்குனரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான விஞ்ஞானி அருணன், நல்லமுத்துவின் அண்ணன். இயக்குனரும் இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன், நல்லமுத்துவின் தம்பி.

வெ.நீலகண்டன்