எங்கும் கொலை... எத்தனை கொள்ளை!



ஏன் இப்படி ஆனது தமிழகம்?

கொலை... கொள்ளை... செயின் பறிப்பு, வழிப்பறி, மிரட்டல், ஆட்கடத்தல், பலாத்காரம்... பத்திரிகைகளைப் புரட்டினாலே ரத்தவாடை. பெண்கள் தனியாக நடக்க முடியவில்லை. முதியோர் தனியாக வசிக்க முடியவில்லை.

ரவுடிகள் சர்வசாதாரணமாக வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்; வெட்டுகிறார்கள். கூலிப்படைகள் தைரியமாக வலம் வருகின்றன. நீதிமன்றங்களே கொலைக் களமாகின்றன. உண்மையில், தமிழகம் ஒரு அசாதாரணமான மிரட்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சென்னையே குற்றங்களின் மையமாக இருந்தது. இப்போது நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை என எல்லா நகரங்களிலும் ரத்தம் தெறிக்கிறது. காவலர்களின் கண்முன்னே வெட்டிக் குதறுகிறார்கள். அண்மையில், பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்த ஒரு கைதி கொலை செய்யப்பட்டார். ஆயுதம் தாங்கி பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அந்த கைதியைக் கைவிட்டு தப்பியோடிய காட்சியை நாடே பார்த்து அதிர்ந்தது.

என்னதான் ஆயிற்று தமிழக காவல்துறைக்கு..?1485 காவல் நிலையங்கள், 200 போக்குவரத்து காவல் நிலையங்கள், 197 மகளிர் காவல் நிலையங்கள் தமிழகத்தில் இயங்குகின்றன. இந்தியாவிலேயே காவல்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதும் அனைத்து காவல்நிலையங்களும் இணையம் வழி இணைக்கப்பட்டுள்ளதும் அதிக ஆயுதக் கொள்முதல் நடப்பதும் இங்குதான். 20க்கும் மேற்பட்ட ஏ.டி.ஜி.பிக்கள், ஐ.ஜிக்கள், 30க்கும் மேற்பட்ட டி.ஐ.ஜிக்கள் கொண்ட, உலகின் சிறந்த காவல்துறைகளில் ஒன்றாக சிலாகிக்கப்பட்ட தமிழக காவல்துறை என்னதான் செய்கிறது? ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றனவே... என்ன காரணம்?

‘‘மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய மாநிலங்களின் காவல்துறைகள் பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் காவல்துறையின் பின்னடைவுக்கு இரு காரணங்கள் கண்டறியப்பட்டன. ஒன்று, அரசியல் தலையீடு, மற்றொன்று ஊழல்.

தமிழக காவல்துறைக்கு இருக்கும் அடிப்படை பிரச்னை இவைதான். காவல் நிலையத்திற்குச் செல்லவே மக்கள் அஞ்சுகிறார்கள். அவமரியாதையாகப் பேசுவதும், வழக்கைப் பதிய மறுத்து அலைய விடுவதும், பஞ்சாயத்து செய்வதும், பணம் பறிப்பதும்தான் பெரும்பாலும் நடக்கிறது. இந்தியாவில் நடக்கும் 100ல் 9 குற்றங்கள் தமிழகத்தில் நடக்கின்றன.

அப்படியான சூழலில் இங்கே பாதுகாப்பு மற்றும் விசாரணைப் புலமை வாய்ந்த அதிகாரிகள் நிறைய தேவை. ஆனால் அண்மைக்காலத்தில் பணிக்கு வரும் காவலர்கள், அதிகாரிகளுக்கு போதிய பயிற்சியும், நிபுணத்துவமும் இல்லை. சராசரியாக 30% கொலைச் சம்பவங்களில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது. 70% குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள்.

நவீன நுட்பங்களைக் கையாளும் பெரிய குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள். சிறுசிறு குற்றங்களைச் செய்யும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். குற்றங்களைத் தடுக்க வேண்டிய அமைப்புகள் இங்கே பல்வேறு கூறுகளாகப் பிரிந்து கிடக்கின்றன. தேசிய காவல் ஆணையம் பரிந்துரைத்தபடி, காவல், நீதி, நிர்வாகம், மருத்துவம் ஆகிய துறைகளை இணைத்து ‘கிரிமினல் ஜஸ்டிஸ் கமிஷன்’ அமைத்து கண்காணித்தால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும்...’’ என்கிறார் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கதிர்.

‘‘காவல்துறையில் ஏகப்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. குற்றங்கள் அதிகரிக்கவும், வழக்குகள் தேங்கவும் அதுவே அடிப்படைக் காரணம்...’’ என்கிறார் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் முன்னைய முதல்வர் வி.சித்தண்ணன். ‘‘1980களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் நான்கைந்து மடங்கு மக்கள்தொகை அதிகரித்து விட்டது.

தலைநகரான சென்னை பெரிய அளவில் வளர்ந்து விட்டது. இந்தியா முழுதுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கே பெயர்ந்து வருகிறார்கள். குற்றங்கள் அதிகமாகி விட்டன. குற்றவாளிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் 40 ஆயிரம் மக்கள் வசித்த காலத்தில் 45 போலீஸ் பணியாற்றினார்கள். மாதத்துக்கு 30 வழக்குகள் பதிவு செய்தார்கள். இன்று அதே வரம்புக்குள் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்திருக்கிறது. 100 முதல் 150 வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் காவலர்களின் எண்ணிக்கை மாறவில்லை.

ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்தான் காவல்துறையின் அடித்தளம். வழக்குகளை புலன்விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தயாரிப்பது அவர்கள்தான். பிற காவலர்கள், பாதுகாப்பு மற்றும் விசாரணையில் அவர்களுக்குத் தோள் கொடுப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால்தான் வழக்குகள் தேங்காமல் விசாரணையை முடிக்க முடியும். குற்றங்களைத் தடுக்க முடியும்.

ஆனால், எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி என்று உயர் அதிகாரிகளின் எண்ணிக்கைதான் இங்கே உயர்கிறது. ஒரு காவல்நிலையத்தில் 60 காவலர்கள் இருந்தால், ரைட்டர், டிரைவர், கோர்ட் ஆர்டர்லி, பாரா காவலர், பந்தோபஸ்து என்றெல்லாம் ஒதுக்கியது போக, ஒரு ஷிப்டுக்கு 5 பேர் காவல் பணிக்குக் கிடைத்தால் பெரிது.

இன்று ஒரு ஸ்டேஷன் எல்லைக்குள் 200 முதல் 500 தெருக்கள் வருகின்றன. 5 காவலர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? காவலர்களின் பணிச்சுமையை அதிகரித்துக் கொண்டே சென்றால் அவர்கள் எப்படி செயல்படுவார்கள்? அமெரிக்காவில் 1000 பேருக்கு 13 போலீஸ் இருக்கிறார்கள். லண்டனில் 12.5 போலீஸ். இந்தியாவில் 1000 பேருக்கு 2.2 போலீஸ்தான். அதிலும் தமிழகத்தில் 1.3 போலீஸ்தான். இந்தக் கணக்குப்படியே சுமார் 1.21 லட்சம் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் அதிலும் 21,100 இடங்கள் காலி. காலியாகும் வேகத்துக்குத் தக்கவாறு நியமனத்தின் வேகம் இல்லை.

இப்போது நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் காவல்படையை பிரதானப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியாது. அவர்கள் பெறுவது வெறும் 2 மாதப் பயிற்சிதான். அண்மையில், திருச்சியில் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தின்போது, இளைஞர் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் போட்ட சண்டையை எல்லோரும் பார்த்தோம். காவலர்களுக்கே கூட 1 வருடமாக இருந்த பயிற்சிக்காலத்தை 8 மாதங்களாகக் குறைத்து விட்டார்கள்.

 போதிய பயிற்சியும் வழிகாட்டுதலும் இல்லாததால்தான் அவர்கள் களத்தில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். நிலைமையை சமாளிக்கத் தெரியாமல் சிக்கலாக்குகிறார்கள்.  இன்று 60% காவலர்கள் பந்தோபஸ்து போன்ற நான்-போலீசிங் பணிகளுக்காகவே ஒதுக்கப்படுகிறார்கள். மேலதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் அவர்களுக்கான உதவியாளர்கள், பாதுகாவலர்கள் என அதிலும் ஒரு பகுதி போய்விடுகிறது. சென்னையில் 17,000 காவலர்களில் போக்குவரத்துக்கு மட்டும் 4000 பேர் ஒதுக்கப் படுகிறார்கள்.  
 
மேலைநாடுகளில் ஒரு கான்ஸ்டபிளுக்கான தொடக்க சம்பளமே 95 ஆயிரம். வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டுமே வேலை. கூடுதலாக வேலை செய்தால் கூடுதல் சம்பளம். தமிழகத்தில் கான்ஸ்டபிளுக்கு சம்பளம் சுமார் 10,000. விடுமுறை கிடையாது. குறைந்தது 14 மணி நேரம் வேலை... சாலையில் யாரோ ஒருவர் அடிபட்டுக் கிடந்தால் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிற காவலரால், வீட்டில் உடம்பு சரியில்லாமல் இருக்கிற மனைவியையோ, குழந்தையையோ அவசரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

மன உளைச்சல், கடும் பணிச்சுமை, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க முடியாத அழுத்தம், உறக்கமின்மை போன்ற நெருக்கடிகள் அவர்களை வதைக்கின்றன. உதவி நாடி வரும் மக்களிடம் அது வன்மமாக எதிரொலிக்கிறது. வழக்குகளைப் பதிவு செய்தால் கூடுதல் வேலை என்ற எண்ணத்தில் பதிவே செய்யாமல் விடுகிறார்கள். வெளிநாடுகளில் காவலர்களுக்கு இடைவிடாத புத்தாக்கப் பயிற்சிகள் இருக்கும். இங்கே பயிற்சித்துறை என்பது தண்டனைப் பணியிட மாக இருக்கிறது. ‘பயிற்சி என்பது வேண்டாத வேலை’ என்ற எண்ணம் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை இருக்கிறது.

இத்தருணத்தில் மக்களின் பொறுப்பின்மையையும் சுட்டிக் காட்ட வேண்டும். துரைப்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குள் 460 தெருக்கள் உள்ளன. அந்த ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர்களின் எண்ணிக்கை 50. ரவுடி நீராவி முருகன் ஒரு ஆசிரியையை மறித்து நகையைப் பறிக்கிறான். அதைப் பார்த்துக்கொண்டே ஒருவர் சைக்கிளில் செல்கிறார்.

ஒரு காரில் செல்லும் மூன்று பேர் அந்தக் காட்சியைப் பார்க்கிறார்கள். யாராவது ஒருவர் சத்தம் போட்டிருந்தால் கூட அந்த ரவுடி ஓடியிருப்பான். ஆனால் யாருக்கும் பொறுப்பில்லை. இதுவே வேறு நாடாக இருந்தால் குற்றத்தைப் பார்த்து தகவல் சொல்லாமல் சென்றவர்களும் குற்றவாளிகளாகி இருப்பார்கள். 

காவலர்கள் மேல் பழியைப் போட்டு யாரும் இங்கே தப்பிவிட முடியாது. ஒரு ஸ்டேஷனுக்கு குறைந்தது 100 பேரையாவது நியமித்து பணியை முறைப்படுத்த வேண்டும். சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும். முறையான பயிற்சி வேண்டும். காவலர்களின் மனோபாவமும் மாற வேண்டும். பிறரை அடிமையாகக் கருதும் ஆதிக்க மனோபாவத்திலிருந்து விடுபட்டு, மக்களுக்கான ஊழியர்கள் என்ற எண்ணம் காவலர்களுக்கு வரவேண்டும்.

வழக்குகள் 100 சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும். மக்களும் காவல்துறையும் ஒரே கோட்டில் இணைந்தால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும். அந்த நிலை வர, காவல்துறை உங்கள் நண்பன் என்ற நம்பிக்கையை செயல்பாட்டில் உணர்த்த வேண்டும்...’’ என்கிறார் சித்தண்ணன்.

மன உளைச்சல், கடும் பணிச்சுமை, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க முடியாத அழுத்தம், உறக்கமின்மை போன்ற நெருக்கடிகள் போலீஸாரை வதைக்கின்றன. உதவி நாடி வரும் மக்களிடம் அது வன்மமாக எதிரொலிக்கிறது.

88,304 காவலர்கள் தேவை

‘‘இப்போதைய மக்கள்தொகை, கிரைம் ரேட் அடிப்படையில் குற்றங்களைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒரு காவல் நிலையத்துக்கு 100 காவலர்கள் வீதம் நியமிக்க வேண்டும்’’ என்பது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் முன்னைய முதல்வர் சித்தண்ணனின் பரிந்துரை. அந்த அடிப்படையில் பெண்கள் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையங்களையும் சேர்த்து மொத்தமுள்ள 1,882 காவல் நிலையங்களுக்கும் தேவையான (அதிகாரிகளையும் சேர்த்து) காவலர்கள் 1,88,200 பேர்.

தற்போது பணியில் உள்ளவர்கள் 99,896. இன்னும் 88,304 காவலர்கள் தேவை. 1078 எஸ்.ஐ.க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் மேலும் சுமார் 11,000 காவலர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ‘‘முற்றிலுமாக காவல்துறையை மறுசீரமைப்பு செய்யாமல் இப்படி சிறிது சிறிதாக பணியிடங்களை நிரப்புவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை’’ என்கிறார்கள் அனுபவமுள்ள காவல்துறை அதிகாரிகள்.

- வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்