‘பள்ளி மாணவிகளுக்கு வெளியே சொல்ல முடியாத பல பிரச்னைகள் இருக்கு’ என்றுணர்ந்து தீர்வு காண முயலும் ஆசிரியர் ரமாதேவிக்கு வந்தனம்.
- சிவமைந்தன், சென்னை-78.
உப்பு மூட்டை போல தன் உடலை வைத்துக்கொண்டு காமெடி பண்ணினாலும், சி.நா.மூர்த்தி யின் பேச்சில் அத்தனை இனிமை... உண்மை!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
கவிஞர் - பேராசிரியர் இன்குலாப் நோய்வாய்ப்பட்டு ஒரு காலை இழந்து வாழ்வது வேதனை. ‘போராட்டம்தான் எனக்கு விடுதலை’ என இன்றும் அவர் நெஞ்சுரத்துடன் பேசுவது பரவசம்!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.
‘நண்பேன்டா’ பட ஸ்டில்களில் உதயநிதி-நயன்தாரா ‘கெமிஸ்ட்ரி’ நல்லாவே அள்ளுதே! கலர்ஃபுல் கலக்கல்!
- முத்தையா தம்பி, கூத்தப்பாக்கம்.
அனாதையாக விடப்பட்ட சிங்கப்பூர் எனும் சின்னஞ்சிறு நாட்டை செதுக்கிய சிற்பிதான் லீ. தமிழர்களின் நேசத்துக்குரிய அந்தத் தலைவர் பற்றிய தகவல்கள் கண்களைப் பனிக்கச் செய்தன!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.
இந்த வாரம் ‘நியூஸ்வே’ பகுதி நிறைய பல தகவல்களைக் கொடுத்திருக்கிறது. அதில் மற்ற ஸ்டில்கள் எல்லாம் ஓகே... ஆனால் எமி ஜாக்ஸன் ஸ்டில் மட்டும் ரொம்ப ஓவருங்கோ!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
பட்டி தொட்டியெங்கும் மின்னலாகப் பரவி வரும் ‘செல்வ மகள்’ சேமிப்புத் திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியது கவர் ஸ்டோரி!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
மாத பட்ஜெட்டில் நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணவே விழி பிதுங்குது. இந்த லட்சணத்தில் முக்கால் லட்சம் சாம்சங் போன் பத்தி நாலு பக்கம் எழுதி ஏன் வயிற்றெரிச்சலைக் கௌப்புறீங்க?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
விளையாட்டை விளையாட்டா பார்க்கணும்; வெறியோடு பார்க்கக் கூடாது. உலகக் கோப்பையில் இந்தியா தோல்வி என்றதுமே டோனி வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பா... என்ன கொடுமை சார் இது!
- இரா.கனகராஜ், திருவண்ணாமலை.
வி.கே.ராமசாமி சாருஹாசனிடம் சொன்ன, ‘செத்தும் கெடுத்தான்’ கணக்குப் பிள்ளை கதை சூப்பர். வி.கே.ஆர் பற்றி ‘யாரும் அறியாத’ என்பதை விட, யாரும் கவனிக்காத விஷயங்களை அறிய முடிந்தது!
- எம்.ஜெரினா தாமஸ், நாகை.
யப்பா... வெயில் கொடுமைதான் எங்களால தாங்க முடியலை. இதுல வேற நீங்க பக்கத்துக்கு பக்கம் ‘ஏப்ரீல்’ போட்டு ‘நம்புவதா, வேண்டாமா’ என எங்க மண்டைய காய வச்சுட்டீங்களே... சார்!
- எஸ்.மணிகண்டன், விழுப்புரம்.