ஆதியைக் கடத்தினேன்...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    ‘‘அழச்சொன்னா எவ்வளவு நேரம் வேணாலும் அழுது நடிப்பேன். ஆனா காதலிக்கச் சொன்னா கூச்சப்படுவேன். அதுவும் கூட்டத்துக்கு முன்னால காதலிச்சு நடிக்கிறது அவஸ்தை...’’ என்றவர் ‘சின்ன அசின்’ பூர்ணா. காதலிக்க அஞ்சும் இந்த கண்ணனூர் கண்ணழகி கடந்த ‘துரோகி’ படத்தில் ஸ்ரீகாந்தை விடாமல் துரத்திக் காதலித்து ஒரு கட்டத்தில் அவரை பலாத்காரமே செய்வார். அதைப்பற்றிக் கேட்டால் முகம் சிவந்து, ‘‘அதான் சொன்னேனே... ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்ச சீன் அது. நான் ஸ்கூல் கேர்ளா இருக்கும்போதே ஸ்ரீகாந்த்தை ஹீரோவா படங்கள்ல பார்த்திருக்கேன். இப்ப நடிகையானதும் அவர்கூட, அதுவும் முரட்டு ரொமான்ஸ் செய்யணும்னா மனசே வரலை. போராடி நடிச்சேன்...’’ என்றவர் இப்போது ‘ஆடு புலி’க்காக இன்னொரு காதல் ஆட்டம் ஆடியிருக்கிறார். இதில் அவர் காதலுக்கு இலக்காகும் நபர் ஆதி.

‘‘எப்படி இருந்தது ஆதியோட உங்க கெமிஸ்ட்ரி..?’’

‘‘ஐயோ அவரா..? நானே தேவலாம். ஷூட்டிங் ஆரம்பத்தில அவர் பாட்டுக்கு ஒரு மூலைல உக்காந்துக்குவார். ஒரு வார்த்தை பேச மாட்டார். ஒருகட்டத்தில நான் ‘பொறுத்தது போதும்’னு பொங்கியெழுந்து போய் அவர்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டேன். பிறகு ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம். அப்புறம்தான் நடிக்கும்போது ஒரு கெமிஸ்ட்ரியே வந்தது. பிறகு நல்லாவே காதலிச்சு நடிச்சோம்.

அதுல நான் ஸ்கூட்டர் ஓட்டற பொண்ணு. ‘உனக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரியுமா..?’ன்னு டைரக்டர் விஜய் பிரகாஷ் கேட்டார். ‘தெரியாது. ஆனா ரெண்டு நாள் கொடுங்க. ஓட்டத்தெரியும்னு சொல்றேன்’னுட்டு பாண்டிச்சேரி முழுக்க ஸ்கூட்டர் ஓட்டிப் பழகினேன்.

அப்புறம்தான் டைரக்டர் இன்னொரு குண்டைப் போட்டார், நான் ஸ்கூட்டர் ஓட்ட, என் பின்னாடி ஆதி உக்காந்து வருவார்னு. அவர் வெயிட்டுக்கு எப்படி பேலன்ஸ் பண்றதுன்னு பயம் வந்தாலும் ஒத்துக்கிட்டேன். டைரக்டர் ‘ஆக்ஷன்...’ சொன்னதும் நான் ஓட்ட ஆரம்பிச்சேன். நிறுத்த வேண்டிய இடத்தில பிரேக் பிடிக்காம விட்டுட்டேன். ‘ஓ’ன்னு கத்தியபடியே ஆதி கால்களாலேயே அழுத்தி பிரேக் போட்டார். பிறகு எங்கெல்லாம் பிரேக் பிடிக்கணுமோ அங்கெல்லாம் ஆதியே காலால பிரேக் பிடிச்சு வண்டியை நிறுத்திக்கிட்டிருந்தார். பிறகு ஒருமாதிரி பிரேக் போடக் கத்துக்கிட்டேன்.

அப்படி ஒரு இடத்தில நான் வண்டியை ஓட்டிக்கிட்டு வர, ஒரு இடத்தில நிறுத்தச் சொன்ன டைரக்டர் என்னை பிரேக் பிடிக்கச்சொல்லி மைக்ல ‘பிரேக்...’னு கத்தினார். வழக்கமா லஞ்ச் பிரேக்குக்கு அப்படி டைரக்டர்கள் ‘பிரேக்’ சொல்றது வழக்கம். அதுவும் மத்தியான வேளையானதால, லஞ்ச் பிரேக் விட்டுட்டாங்கன்னு நான் அப்படியே வண்டியை ஓட்டிக்கிட்டு எங்க கேரவன் இருக்கிற இடத்துக்குப் போயிட்டேன். நாங்க எங்கே போனோம்னு தெரியாம எங்களை ஒரு கூட்டமே தேடிக்கிட்டிருந்தது. கேரவன்ல எங்களைப் பார்த்த யூனிட், விஷயத்தைக் கேட்டு சிரிக்க ஆரம்பிச்சதோட, நான் ஆதியைக் கடத்திட்டதா கிண்டல் பண்ணிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க...’’

சில்லறைகளை சிதறிய பூர்ணாவிடம் கொஞ்சம் அசின் வெளியே எட்டிப் பார்க்கவே, ‘‘அசினை சந்திச்சிருக்கீங்களா..?’’ என்றால், ‘‘நான் அசினை சந்திச்சதாவும், அவங்க என்னைப் பாராட்டியதாவும் நியூஸ் வருது. இதுவரை நான் அசினை சந்திச்சதே இல்லை...’’ என்றார்.

கண்ணாடியில் குத்துமதிப்பாகப் பார்த்தாலே போதுமே பூர்ண்ஸ்..!
 வேணுஜி