ஜாக்கிசான் தேசபக்தி அவதாரம்



சினிமா வருமானத்தில் அமெரிக்காதான் எப்போதும் நம்பர் 1. மாதத்தில் சராசரியாக 3500 கோடி ரூபாய் வரை தியேட்டர்கள் வருமானம் பார்த்துவிடும். ஆனால் முதல்முறையாக அமெரிக்காவின் இந்த கிரீடத்தைத் தட்டிப் பறித்திருக்கிறது சீனா.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனாவின் சினிமா வருமானம், சுமார் 4000 கோடி ரூபாய். இதே மாதத்தில் அமெரிக்காவின் வருமானமோ 3400 கோடி ரூபாய்தான். இந்த திடீர் மாற்றம், உலகின் பெரிய சினிமா நிறுவனங்களை சீனாவின் திசையில் திருப்பி விட்டிருக்கிறது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு வெளியான படங்களே இந்த பெரும் வருமானத்துக்குக் காரணம். அதில் முக்கியமானது, ஜாக்கி சானின் ‘டிராகன் பிளேட்’. அதில் அவர் எடுத்திருக்கும் தேசபக்தி அவதாரம், சீனர்களுக்கே பெரிய ஆச்சரியம்!

வேகமும் நகைச்சுவையும் கலந்த சண்டைக் காட்சிகளால் உலகெங்கும் ஆக்ஷன் பிரியர்களால் ரசிக்கப்படுகிறவர் ஜாக்கி. தமிழகத்தின் கிராமத்து தியேட்டர்களில்கூட அவரது டப்பிங் படங்கள் செம கலெக்ஷன் பார்க்கும். ஆனால், அவருக்கும் வயதாகிறதே! 62 வயதில் அவர் தனது நடிப்புப் பசிக்குத் தீனி போடும் கேரக்டர்களாகத் தேடிப் பிடிக்கிறார். அப்படி ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது ‘டிராகன் பிளேட்’.

சீனாவின் ‘சில்க் ரூட்’ எனப்படும் வர்த்தகப் பாதை வழியாக ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் பெருமளவில் வியாபாரப் பரிமாற்றம் செய்து வந்தன. இந்தப் பாதையில் ஆதிக்கம் செலுத்த வந்த ரோமானியப் படை ஒன்று உருத் தெரியாமல் போனதாக வரலாற்றில் ஒரு குறிப்பு உண்டு. அந்த வரலாற்றில் கமர்ஷியல் கரம் மசாலா கலந்த சைனீஸ் அயிட்டமே ‘டிராகன் பிளேட்’.ஹான் வம்ச அரசில் ஹூவான் (ஜாக்கி சான்) ஒரு முக்கியமான போர்த் தளபதி. திறமையான தனது தளபதியை ‘சில்க் ரூட்’ பகுதியில் அமைதியை நிலைநாட்ட அனுப்பி வைக்கிறார் மன்னர்.

அந்த ஏரியாவில் 36 வெவ்வேறு இனக்குழுக்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வர்த்தகப்பாதையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன. தனது வாளின் வீரத்தில் சந்தேகமற்ற வீரன் என்றாலும், சமாதானத்தைவிட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை என நினைக்கிறார் ஜாக்கி. ஆனால் ஆதிக்க சக்திகளுக்குள் சதிகளுக்குப் பஞ்சமில்லையே! தங்கம் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜாக்கியும் அவரது வீரர்களும் எல்லைப்புற சோதனைச் சாவடிக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே கொத்தடிமை போல வேலை செய்ய வேண்டும்.

அந்த எல்லை நகரம் பாதுகாப்பற்று இருக்கிறது. வலிமையான கோட்டையோடு அந்த நகரைக் கட்டமைக்கும் பணியில் கூலித் தொழிலாளி போல அவர் உழைக்கிறார். இந்நிலையில் ரோமின் பார்த்தியன் பேரரசின் படைத் தளபதியான லூசியஸ் (ஜான் க்யூஸாக்), ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையுடன் அங்கு வருகிறார். ஆட்சிக்கு உரிமையுள்ள பட்டத்து இளவரசனை அவனது அண்ணனே கொல்ல நினைக்க, கண்கள் குருடாக்கப்பட்ட அந்த இளவரசனைப் பாதுகாக்க இங்கு கூட்டி வருகிறார் க்யூஸாக்.

எல்லை நகரின் தளபதி, ரோமப் படைகளைப் பார்த்ததும் தொடை நடுங்கிப் போகிறான். உடனே ஜாக்கி களத்தில் இறங்கி அவர்களோடு மோதத் தயாராகிறார். ஜாக்கியும் க்யூஸாக்கும் கடுமையாக மோதிக்கொள்ள, வாள்களின் உரசலும் அவர்களின் கூக்குரலும் அந்தப் பாலைவன நகரை கிடுகிடுக்க வைக்கிறது. யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சண்டை நீளும்போது, திடீரென பாலைவனப் புயல் தாக்குகிறது. கட்டிடங்களுக்குள் செல்லாதவர்களை புயல் காலி செய்துவிடும். ஜாக்கி ஆபத்பாந்தவனாகி, ரோமப் படைகளுக்கு நகருக்குள் அடைக்கலம் கொடுக்கிறார். அந்த நேரத்தில்தான் ரோமப் படைகளின் நோக்கம் ஜாக்கிக்குத் தெரிகிறது. அவருக்கும் க்யூஸாக்குக்கும் நட்பு மலர்கிறது.

சீனப்படையும் ரோமப்படையும் இணைந்தே நகரை வலிமையாக உருவாக்குகின்றன. இதற்கிடையே தனது தம்பியைத் தேடி ரோம் ஆட்சியை அபகரித்த டிபெரியஸ் (ஏட்ரியன் பிராடி) பெரும் படையோடு வருகிறான். அவர்களை சமாளிக்கும் அளவுக்கு பெரிய படை ஜாக்கியிடம் இல்லை. எனவே க்யூஸாக்கை சமாளிக்கச் சொல்லிவிட்டு, தன் நண்பர்களிடம் உதவி கேட்டுப் போகிறார். ஆனால் நம்பிய அத்தனை பேரும் ஏமாற்றுகிறார்கள்.

எதிர்பாராதவிதமாக சில்க் ரூட்டுக்காக சண்டையிட்ட பல இனக் குழுக்களும் அவருக்கு உதவி செய்ய வருகின்றன. பிரிந்து கிடந்த பல இனக்குழுக்களுக்கும் தேசபக்தியை உசுப்பிவிட்டு, அவர்களைத் திரட்டி வந்து பிராடியோடு மோதுகிறார். ஆனாலும் தேர்ந்த ரோமானியப் படைகளுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட ஜாக்கி சாகடிக்கப்பட இருந்த தருணத்தில், இளவரசனுக்கு விசுவாசமான ரோமப் படைகள் வந்து பிராடியை வீழ்த்துகின்றன.

சிறுபான்மை இனக்குழுக்கள் கலகம் செய்வது சீனாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அவர்களைப் பக்குவப்படுத்துவதற்கு இந்தப் படத்தைப் பயன்படுத்த நினைக்கிறது அரசு. அதனால், ஜாக்கியின் தேசபக்தி அவதாரம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.

- ரெமோ