கரிசனம்



ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கூட்டம் அலை மோதியது. எந்தப் பெட்டியில் ஏறுவது என்ற குழப்பத்தில்தான் செல்வி நின்றுகொண்டிருந்தாள். லேடீஸ் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடத்தில் அவள் நிற்கவில்லை. ஆணும் பெண்ணும் ஏறும் பொது கம்பார்ட்மென்ட்டில் ஏறுவதற்கே விரும்பினாள்.ரயில் வந்து நின்றதும் அவளைப் பார்த்து எரிச்சலானவர்கள் சிலர்; அக்கறைப்பட்டு அட்வைஸ் தந்தவர்கள் சிலர்; அறிவுரையையே டோஸ் கூட்டி திட்டியவர்கள் சிலர்.

‘‘வயித்துப்புள்ளக்காரி லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல ஏறாம இந்த நெரிசலில் வந்து நிக்கிறதப் பாரு! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு கொஞ்சம் புத்தி வேணாம்?!’’ என்று புலம்பினார்கள் பலர்.எப்படியோ தட்டுத் தடுமாறி ரயிலுக்குள் ஏறி நெரிசலில் நெளிந்து உள்ளே நுழைந்தாள்.‘‘ஏம்மா... இவ்வளவு நெரிசல்ல இந்த ரிஸ்க் தேவையா?’’ என்று சில குரல்கள் ஒலித்தன. அதே நேரத்தில் உட்கார்ந்திருந்த ஒன்றிரண்டு ஆண்கள் எழுந்து அவளுக்கு இடம் கொடுக்க முன்வந்தனர்.

‘‘லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல இடம் தர்றதுக்கு ரொம்ப யோசிப்பாங்க. இங்க அப்படியில்ல. கொஞ்சம் கடுமையா திட்டினாலும் கர்ப்பிணிப் பெண்ணை ஆம்பளைங்க உட்காரச் சொல்லிருவாங்க. அதான்’’ என்று இழுத்து நிறுத்தினாள் செல்வி.அங்கு அமர்ந்திருந்த பெண்களின் கண்கள் கீழ் நோக்கின.

ஆசி.கண்ணம்பிரத்தினம்