ரெவ்யூ



‘‘இந்த ஹோட்டல்ல சாப்பிடுறதுக்கு முன்னாடி ஏற்கனவே இங்க சாப்பிட்டவங்க என்ன சொல்றாங்கனு ஒரு ரெவ்யூ பார்த்துடறேன்!’’ - செல்போன் வழியே இணையத்தில் தேடி, ‘‘குட்! ஐந்துக்கு நான்கு ஸ்டார் வாங்கியிருக்கு’’ என எல்லோரையும் சாப்பிடக் கிளப்பினான். ‘‘அந்தத் துணிக்கடையில் தரம் எப்படி இருக்குமோ... எதுக்கும் நெட்டில் ரெவ்யூ பார்த்துடலாம்!’’ - இப்போதும் அதேதான்.

‘‘இந்த ரூட்ல டிரைவ் பண்ணலாமான்னு கூட நெட்ல ரெவ்யூ பார்த்துட்டுதான் வர்றேன்... சினிமாவில் தொடங்கி ஊறுகாய் வாங்குறது வரை எந்த விஷயத்திலும் முன் அனுபவம் உள்ளவங்களோட ரெவ்யூவைப் பார்க்காம நான் எதிலும் இறங்குறதில்லை!’’ - பெருமையாகச் சொன்னான் அவன்.

அவனை கவனித்துக்கொண்டே வந்த அம்மா இப்போது வாய் திறந்தாள்.‘‘எல்லாத்துலயும் அடுத்தவங்க கருத்தைக் கேட்டா, உனக்குன்னு ஒரு சொந்தக் கருத்தே இல்லாமப் போயிடுமேடா. எல்லோருக்கும், எல்லா சமயங்களிலும், எல்லாம் பொருந்திடும்னு சொல்லிட முடியாது. ஒருத்தருக்கு பிடிச்சுருக்கிற ஒரு விஷயம் மத்தவங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்.

 இப்ப தமிழ்ப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்னு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கே... அந்தப் பெண்ணைப் பத்தியும் ‘ரெவ்யூ’ கேப்பியா?’’ - அம்மாவின் வார்த்தைகள் மதனுக்கு முள் குத்தினாற் போல் சுரீரென்றது.இனி தன் சொந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதென முடிவு செய்தான் அவன்.                                

எஸ்.ராமன்