டெங்கு காய்ச்சலால் நொறுங்கிப் போயிருந்த நண்பனைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனான் கோபி. நலம் விசாரித்துக்கொண்டிருந்தபோது மின்னலென வார்டுக்குள் நுழைந்தாள் அந்த நர்ஸ். இருபது வயதிருக்கும்.
அப்படியொரு அழகு. அவளது தோற்றம், பேச்சு, நடக்கும் லாவண்யம்... அப்பப்பா! கிறங்கிப் போனான் கோபி. அவளைப் பார்க்கவே அடிக்கடி அங்கு போனான். ‘இவனுக்குத்தான் என்மீது என்ன ஒரு நட்பு, பாசம்’ என உருகிப் போனான் அந்த ‘டெங்கு’ நண்பன். அவன் டிஸ்சார்ஜ் ஆன நாளில் கோபி தவித்துப் போனான். இந்த தேவதையை இனி எப்போது பார்ப்பேன்?
அடுத்த வாரம்...
கோபியின் டூ வீலர் ஒரு திருப்பத்தில் சறுக்கி, பெரிய விபத்து. கண் விழித்தபோது மருத்துவமனைப் படுக்கையில் இருந்தான். இடது கையையும் காலையும் அசைக்க முடியவில்லை. தாங்க முடியாத வலியை உணர்ந்தான். அறைக்குள் வந்த நர்ஸைப் பார்த்தான். ஆச்சரியம்!
அவளேதான்... அவனது கனவுக்கன்னியேதான்!மாறாத புன்னகையும் கனிவுமாக அவன் உடலில் போட்டிருந்த கட்டுகளைப் பிரித்து அருவருப்பு பாராமல் துடைத்து மறுகட்டு போட்டுச் சென்றாள். அவளைத் தொடவும் பேசவும் ஆசை கொண்டிருந்த கோபிக்கு இப்போது அந்த எண்ணம் கொஞ்சமும் வரவில்லை.அந்த நர்ஸை நன்றியோடு பார்த்து, ‘‘தேங்க்ஸ் சிஸ்டர்!’’ என்றான் நெஞ்சார!
அன்பிற்கினியவன்