எங்கேயோ பார்த்த முகம்



நான் சினிமாக்காரன் இல்லை!

 குமாரவேல் குட் ஃபீலிங்

‘‘நான்தான் அப்பவே சொன்னேன்ல பிரதர்... குமாரவேலை விட்ராதீங்கனு. இதோ, நானே கையும் களவுமா பிடிச்சிட்டேன். பக்கத்துல தான் இருக்கார்... பேசுறீங்களா?’’ - ‘உப்புக்கருவாடு’ ஷூட்டிங் பிரேக்கில் இருந்து சாம்ஸ் நம் லைனுக்கு வந்தார்.‘‘அவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாச்சே... நேர்ல பார்க்கணும். அதான் சரி!’’ என்றதும் வாகான ஒரு நேரம் முடிவானது.

‘‘என்னை ஒரு சினிமாக்காரனா பார்க்காதீங்க. சினிமாவை விட, அதிகமா நான் நேசிக்கிறது நாடகக் கலையைத்தான். என்னோட முழுப்பெயர் இளங்கோ குமாரவேல். ஸ்கூல் ஆஃப் டிராமாவில் முதுகலைப் பட்டத்தை பாண்டிச்சேரியில் படிச்சேன். அப்புறம் கூத்துப்பட்டறை. ‘ரோமியோ ஜூலியட்’ மாதிரி உலக நாடகங்களையும் நம்ம மரபுக் கூறுகளையும் ஒண்ணா கத்துக்கிட்டது அங்கேதான்.

புரிசை கண்ணப்ப தம்பிரான்கிட்ட தெருக்கூத்து கத்துக்கிட்டது என்னோட பாக்கியம்னு சொல்வேன். இப்ப மேஜிக் லான்டர்ன்... அதுதான் நம்ம நாடகக் குழு. அதன் மூலமா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நாடகமாக்கி மேடையேத்திக்கிட்டு இருக்கோம். அந்த நாவல்ல ஒவ்வொரு கேரக்டரையுமே தனித்தனி நாடகமா பண்ணலாம். அப்படிப்பட்ட பிரமாண்ட படைப்புக்கு ஸ்கிரிப்ட் எழுதினது சவாலான வேலை.

ஏற்கனவே விளம்பரத் துறையில் எனக்கு நிறைய முன் அனுபவம் இருந்துச்சு. ‘மேட்டர் இருந்தா மீட்டர்’னு அந்தக் கால ஆர்.பி.ஜி செல்லுலார் விளம்பரம் எல்லாம் என்னோட வொர்க். அதுக்காக அவார்டெல்லாம் கூடக் கிடைச்சுது. இப்பவும் எனக்கு மும்பை கிளையன்ட்ஸ் நிறைய இருக்காங்க. அவங்களுக்காக விளம்பரங்கள் பண்ணிக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.

நவீன நாடக முயற்சிகளை ரொம்ப கவனிக்கிறவர் நாசர். 1999ல ஒரு நாடக மேடையிலதான் அவரோட அறிமுகம் கிடைச்சது. என் சினிமா பயணம் ‘மாயன்’ல தொடங்கிச்சு. அதுக்கு அப்புறம் மறுபடியும் நாடகம்தான் உலகம்னு இருந்தேன். அந்தச் சமயம் ‘அழகி’ மூலமா தங்கர்பச்சான் என்னைத் திரும்பவும் சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்துட்டார். யார்கிட்டேயும் வாய்ப்பு தேடி நான் போனதில்லை. என்னை மதிச்சு வர்ற வாய்ப்புகளை மட்டும் பண்றேன். இப்போ கூட ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ல நடிச்சது, எம்.எஸ்.பாஸ்கர் சொன்னதால்தான்.

‘மின்னல் ரவி’ன்னு ஒரு நாடகம் போட்டோம். அங்கே வந்திருந்த கேமராமேன் விசு, இயக்குனர் ராதாமோகன்கிட்ட அறிமுகப்படுத்தினார். ‘அழகிய தீயே’ கிடைச்சது. ராதாமோகன் சாருக்கு நிறைய நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். ‘இதையெல்லாம் நான் செய்ய முடியுமா’ன்னு தயங்கின கேரக்டர்களைக் கூட, ‘அட, உன்னால முடியும்’னு தட்டிக் கொடுத்து செய்ய வச்சிடுவார். ‘அபியும் நானும்’ல என்னோட கேரக்டரை பிரகாஷ்ராஜ் அவ்வளவு என்கரேஜ் பண்ணினார். ‘உப்புக்கரு வாடு’ படத்தில் இன்னும் நல்ல கேரக்டர்.

கிட்டத்தட்ட அவரோட கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஆகிட்டேன். நீங்க நல்லா முயற்சி பண்றீங்கனு தெரிஞ்சாலே அதை ரொம்ப நல்லா என்கரேஜ் பண்ற குணம் பிரகாஷ்ராஜ்கிட்ட இருக்கு. எனக்கு ஒரு நல்ல நண்பர். மிகச்சிறந்த தயாரிப்பாளர் அவர். இயக்குநர்களை ரொம்ப கம்ஃபர்ட்டா வச்சிருப்பார். அவரோட ‘பயணம்’, ‘உன் சமையலறையில்’னு எல்லாத்திலும் திருப்தியான கேரக்டர்கள்தான் பண்ணியிருக்கேன்.

இப்போ மே மாசம் மதுரையிலயும், ஜூலையில சென்னையிலும் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் நடத்துறோம். இதுவரைக்கும் நடத்தின எல்லா ஊர்லயுமே நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ‘எங்க அம்மா இந்த நாவலைப் படிப்பாங்க. நீ போய் நாடகத்தைப் பாருன்னு சொல்லி அனுப்பினாங்க’ன்னு வர்ற யங்ஸ்டர்ஸ் சொல்வாங்க. ‘பொன்னியின் செல்வன்’ நாடகமா போடத் துவங்கின புதுசுலயே ரஜினி சார் ஆர்வமா வந்து பார்த்துட்டார். போன வருஷம் ஒன்ஸ்மோர் வந்தார். முழுசா உட்கார்ந்து பார்த்து ரசிச்சார். அவருக்கெல்லாம் நாடகத்துறை மேல இருக்கிற பாசம் உணர்ச்சிகரமானது.

நாடகக்கலைஞர்களை சினிமாக்காரங்க பயன்படுத்திக்கணும்னு நினைக்கற ஆள் நான் இல்ல. கதைக்கு என்ன தேவையோ அதைத்தானே அவங்க பண்ண முடியும்? நாங்க பண்ற ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்துக்குக் கூட எல்லா நாடகக் கலைஞர்களையும் பயன்படுத்திக்க முடியறதில்லையே!

எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே என்னோட விருப்பத்துக்கு என் கேரியரைத் தேர்ந்தெடுக்க வச்சாங்க. எங்க அம்மா புனிதவதி இளங்கோவன், ஆல் இந்தியா ரேடியோவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவங்க. அப்பா, இளங்கோவன், புதுக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். ஒரு அண்ணன். என் மனைவி தீபிகா, அட்வர்டைஸிங் துறையில இருக்காங்க. ஒரே ஒரு பொண்ணு, லயா. இப்போ +2 படிக்கிறா. அளவான குடும்பம். ‘சேனல், பத்திரிகைன்னு மீடியா வெளிச்சம் எங்களுக்கு வேணாம்’னு வீட்ல ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. அவங்க உணர்வுகளையும் மதிக்கணும் இல்லீங்களா?

இப்பவெல்லாம் சின்ன சம்பவத்தைக் கூட சினிமாவா சொல்ல முடியுது. டெக்னாலஜி வளர்ந்திருக்கு. ‘சூது கவ்வும்’ மாதிரி புதுசா கதை சொல்லும் விதம் உருவாகியிருக்கு. சினிமா உள்ளங்கைக்குள்ள வந்திருச்சு. மொபைல் போன்ல படமெடுக்க முடியுது. அதையும் அவார்டுக்கு அனுப்பி, விருதுகளும் வாங்குறாங்க. ‘ஃபிலிம் பிகேம் எ ஓபன் புக்’. டெக்னாலஜியால் எப்படி நல்ல விஷயங்கள் இருக்குதோ... அதே மாதிரி சில விஷயங்களை சினிமா இழக்கத்தான் செய்யும்.

ஃபிலிமோ, டிஜிட்டலோ... புது யுகம் என்னிக்கும் நடிகர்களை உருவாக்காது. அழுகையும், சிரிப்பும் ஒண்ணுதான். யார் சிரிக்கிறாங்க, யார் அழுறாங்கங்கறதுதான் கதாபாத்திரம். எல்லாத்திலும் பயிற்சி முக்கியமான விஷயம். ஒரு காமெடியனா, குணச்சித்திர நடிகனா என்னை வெளிப்படுத்திக்கணும்னு ஒரு வட்டத்துக்குள்ள வாழ ஆசைப்படல. ஒரு கதாபாத்திரம் என்ன விரும்புதோ அதை சரியா கொடுத்தாலே போதும்னு நினைக்கறேன். அதை வச்சிக்கிட்டு ‘இவருக்கு இவ்வளவுதான் முடியும்’னு வரையறுத்தா, அதுக்கு மேல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு?’’ஃபிலிமோ, டிஜிட்டலோ... புது யுகம் என்னிக்கும் நடிகர்களை உருவாக்காது. அழுகையும், சிரிப்பும் ஒண்ணுதான். யார் சிரிக்கிறாங்க, யார் அழுறாங்கங்கறதுதான் கதாபாத்திரம்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்