ஸ்ரீ அரவிந்த அன்னை
என்னுடைய பெயரைச் சொல்லி பயத்தை தூர அனுப்பு. பயம் மிகவும் மோசமான விஷயம். என்னுடைய குழந்தை ஒருபொழுதும் பயப்படக் கூடாது.குழந்தாய், நீ படபடப்பு அடையக்கூடாது. தேவையற்ற பயங்களை வைத்திருக்கக் கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை உனக்கு நினைவு படுத்துகிறேன்.
இந்தப் படபடப்பும் இந்தக் கலக்கமும், எல்லாவற்றையும் காட்டிலும் இந்த பயமும்தான் மறுபடியும் மறுபடியும் உன் மேல் வந்து விழுந்து உன்னை இவ்வளவு தொந்தரவு செய்கின்றன.மனதை அமைதியாக வைத்திரு. பயங்கர கற்பனைகளில் ஈடுபடாதே. பேருண்மையின் பெரும் வெற்றி நிச்சயம். ஏனெனில், அது பிரபுவின் திருவுள்ளம் என்பதை விரைவில் கண்டுகொள்வாய்.
ஸ்ரீஅன்னை
ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த காற்றின் குளிர்ச்சி, பால் ரிச்சர்டின் முகத்தில் படர்ந்தபோது விடியல் தொடங்கியிருந்தது. மின்னல் போல தூக்கம் கலைந்தது. படுக்கையில் படுத்தபடியே யோசிக்கத் தொடங்கினார் ரிச்சர்ட்.இன்று அரவிந்தரை சந்திக்க வேண்டும். அந்த மகானைப் பற்றித் தெரிய வரும் செய்திகள் எல்லாம் வியப்பில் ஆழ்த்துகின்றன. சிறையில் இருந்தபோது எண்ணெய் பூசாமலேயே அவரின் முடி மினுமினுப்பாக இருந்ததாகவும், அதற்குக் காரணம் அவரது யோக சாதனைதான் என்றும் அவருடன் சிறையில் இருந்த உபேந்திரநாத் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாரே...
‘அவரது உடல் முழுக்க பொன்மயமாகிவிட்டது... இன்னும் பாதம் மட்டும்தான் பொன்மயமாக வேண்டும்... அதுவும் பொன்மயமாகிவிட்டால் அருள் ஞானம் பெற்றவராகி விடுவார்’ என்று பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் குறிப்பிட்டுள்ளாராமே... இவை எல்லாம் உண்மை என்றால் அரவிந்தர் நிச்சயம் இந்த பூமியை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்ல வந்துள்ள தெய்வீக அவதாரம்தான். மிராவின் கேள்விகளுக்கு நிச்சயம் அரவிந்தரிடம் பதில் இருக்கும் என்று என் ஆழ்மனம் சொல்கிறது. நாம் உடனே அரவிந்தரை சந்திக்கப் புறப்பட வேண்டும் என மனதுக்குள் சொல்லிக்கொண்டே எழுந்தார்.
குளித்து முடித்து கொஞ்சம் தேநீர் பருகினார். கண்களை மூடி பிரார்த்தனையில் ஆழ்ந்தார். அரவிந்தரைச் சந்திக்கப் போகிறோம் என்கிற எண்ணமே மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவரிடம் கேட்க சில கேள்விகள் உள்ளன. ஆன்மிகம், ஆன்மிக வாழ்வு குறித்தெல்லாம் கேட்க வேண்டும். மனசு ஒத்திகை பார்த்துக் கொண்டது.
அரவிந்தர் தங்கி இருந்த அந்த வீடு நோக்கி புறப்பட்டார் ரிச்சர்ட். இது இன்றைய முடிவா? இல்லை.யார், யாரை எப்பொழுது எதற்காக சந்திக்க வேண்டும் என்பதெல்லாம் கடவுளால் முடிவு செய்யப்பட்ட விஷயம். ஆண்டவனின் அலகிலா விளையாட்டு.அரவிந்தர் தங்கி இருந்த வீட்டை அடைந்த ரிச்சர்ட் உள்ளே நுழைந்தார்.
ஒரு தெய்வீகத்தின் உள்ளே பிரவேசிப்பதைப் போலிருந்தது அவரது மனம். எண்ணங்களே எழாமல் ஆழ்ந்த அமைதி அவரைச் சூழ்ந்துகொண்டது.
மெல்லிய வெண்ணிற ஆடையில் மெல்லிய தேகத்தோடு அமர்ந்திருந்த அந்த யோகத் தாமரை மகா தேஜஸாய் தோன்றியது. அரவிந்தரின் கண்கள் மனத்தை ஊடுருவிப் பார்க்க வல்லது என்பதை ரிச்சர்ட் துளிப் பொழுதில் உணர்ந்துகொண்டார்.
அரவிந்தர் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார். ரிச்சர்ட் அதை அமைதியாய் கவனிக்கத் தொடங்கினார்.‘‘ஆன்மிகம் என்பது என்ன?’’கேள்வி எழுப்பிய அந்த வங்காளி இளைஞன், அரவிந்தரின் முகத்தை தீர்க்கமாய் கவனிக்கத் தொடங்கினான்.சின்னப் புன்னகையோடு அரவிந்தர் பதில் சொல்லத் தொடங்கினார்.
‘‘ஆன்மிகம் என்பது சிறந்த அறிவுத்திறன் அல்ல. மனம் வகுத்துள்ள ஓர் லட்சியம் அன்று. அறவொழுக்கமோ, சன்மார்க்கத் தூய்மையோ, தவமோ அல்ல. மதப்பற்று அல்ல. இந்தச் சிறப்பான குணங்கள் அத்தனையும் சேர்ந்த சேர்மானமும் அல்ல. மனத்தளர்வான ஒரு நம்பிக்கை, சமய நம்பிக்கை, மனம் விரிக்கும் ஓர் லட்சியம், நடத்தையைச் சமயக் கொள்கை அல்லது நீதி நெறிப்படி ஒழுங்குபடுத்திக் கொள்வது, இவையெல்லாம் ஆன்ம அனுபவம் ஆகாது.
மனத்திற்கும் வாழ்விற்கும் இவையெல்லாம் மிகவும் மதிப்புடையவைதாம். இவை நமது இயற்கையை ஒரு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றன. தூய்மை செய்கின்றன. அதற்குப் பொருத்தமான ஓர் உருவம் கொடுக்கின்றன. இவையெல்லாம் ஆன்ம பரிணாமத்திற்கு ஆயத்தம் செய்பவை. ஆயினும் இவை இன்னும் மனப்பரிமாணத்தையே சேர்ந்தவை - ஆன்ம சாட்சாத்காரம், ஆன்ம அனுபவம், மாற்றம் அதில் இன்னும் இல்லை.
ஆன்மிகம் அதன் சாராம்சத்தில் நமது மனம், உயிர், உடல் அல்லாத நமது ஜீவனின் உள் உண்மைக்கு, ஒரு மெய்ப்பொரு ளுக்கு, ஆத்மாவுக்கு, அந்தராத்மாவிற்கு விழித்தெழுவதாகும். அதை அறிய வேண்டும், உணர வேண்டும், அதுவே ஆகவேண்டும் என்ற உள் ஆர்வமாகும்.
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தும், அதற்கப்பாலும் இருப்பதாயும், நமது சொந்த ஜீவனிலும் உறைவதாயும் உள்ள ஒரு பேருண்மையுடன் தொடர்புகொள்ளவும், அதனுடன் உறவுகொள்ளவும் அதனுடன் ஐக்கியமடையவும் வேண்டுமென்ற ஆர்வமாகும்; அந்த ஆர்வத்தின், தொடர்பின், ஐக்கியத்தின் பயனாக நமது ஜீவன் முழுவதும் ஒரு புதிய திருப்பம், ஒரு நிலைமாற்றம், ஒரு புதிய ஆத்மாவாக, புதிய இயற்கையாக வளர்தல் ஆகும்.
ஆன்மிகம் என்பதன் தொடர்ச்சியாய் ஆன்மிக வாழ்வு என்பது குறித்து கேள்வி எழும்.யார் ஆன்மிக வாழ்வு வாழ்கிறவன்?தனது அந்தராத்மாவைக் கண்டுகொண்டவனே ஆன்மிக வாழ்வு வாழ்கிறவன். அவனே ஆன்ம ஞானி. தனது ஆன்மாவைக் கண்டு அதில் வாழ்கிறான், அதை உணர்கிறான், அதன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான். அவனுடைய வாழ்வு முழுமை பெறுவதற்கு வேறு எந்தப் புறப்பொருளும் தேவையில்லை.
எல்லா வகையான ஆன்மிக வாழ்விலும் அகவாழ்விற்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. ஆன்மிக வாழ்வு வாழ்பவன் எப்பொழுதும் உள்ளாழ்ந்து வாழ்கிறான்.அவன் உலகில் இருந்தபோதிலும் அதைச் சேர்ந்தவனாக இல்லை. அதற்கு வெளியே இருக்கிறான். அவன் உலகின் மீது செயல்படும்போது உள் வாழ்ந்த ஆன்மாவின் கோட்டையிலிருந்து செயல்படுகிறான். அங்கு அவனுடைய மிக ஆழ்ந்த இதயக் கோயிலில் அவன் பரம்பொருளுடன் ஐக்கியப்பட்டிருக்கிறான். அல்லது அவனுடைய அந்தராத்மாவும் இறைவனும் அந்தத் தனிமையில், மோனத்தில், அன்பில், ஆனந்தத்தில் ஒன்றாய் இணைந்திருக்கிறார்கள்.’’
‘‘இது எப்படி சாத்தியம்? இதற்கு அடிப்படை என்ன?’’‘‘தியானம். யோகம்’’ என்று நிறைவு செய்த அரவிந்தர், ரிச்சர்டை கனிவு பொங்க பார்த்தார். அவரது தீட்சண்யமான பார்வையே ரிச்சர்ட்டை அவர் அருகில் அழைத்தது. அரவிந்தரின் முன்னால் சென்ற ரிச்சர்ட் பணிவோடு வணங்கினார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மிரா கொடுத்தனுப்பிய சாலமோன் முத்திரையின் பொருள் சொல்லி அருளும்படி கேட்டுக் கொண்டார்.
அரவிந்தரின் முகத்தில் திடீரென ஒரு பேரானந்தம் படர்ந்தது. ‘எத்தனைக் காலமாய் உங்களுக்காக காத்திருக்கிறேன் தெரியுமா? நீங்கள் எல்லாம் எனது மகத்தான ஆன்மிகப் பணிக்காகவே இங்கே அனுப்பப்பட்டவர்கள். நாமெல்லாம் மகத்தான தெய்வீக சக்தியை பூமிக்கு கொண்டுவரப் போகிறோம். அதில் மிராவின் பங்களிப்பு மிக உன்னதமாய் அமையப் போகிறது’ என்றெல்லாம் மனதுள் எண்ணியபடி புன்னகைத்தார்.
‘‘மேல்நோக்கி மலரும் நிலையில் உள்ள தாமரை மலர் இது. ஆன்மிக ஒளி வந்த உடன் மனம் என்னும் தாமரை மொட்டு தானே விரிவடையும் என்பதை இந்தச் சின்னம் குறிக்கிறது’’ என்றார் அரவிந்தர்.அரவிந்தரின் பதிலில் நிறைவு கண்ட ரிச்சர்ட், தம்மையும் அறியாமல் மிராவின் ஆன்மிக சாதனைகளைப் பற்றி விவரித்துக் கூறினார்.
‘தாம் இங்கு செய்து வரும் ஆராய்ச்சியும் மிரா செய்து வரும் ஆராய்ச்சியும் ஒன்றே. இது இணைந்து செய்யப்படும் காலம் விரைவில் வரும். அதன் ஆரம்பம்தான் ரிச்சர்டின் வருகை’ என்பதை உணர்ந்துகொண்ட அரவிந்தர் ரிச்சர்டிடம் விரிவாகப் பல ஆன்மிக விஷயங்களைப் பேசினார். சூட்சுமமாக அவரது மனதுள் தெய்வீகத்தை ஆழ ஊன்றினார். அதைச் சுமந்துகொண்டு தாய்நாடு புறப்பட்டார் பால் ரிச்சர்ட். அவர் மனம் முழுக்க அரவிந்தர் ஆக்கிரமித்திருந்தார். அங்கே மிரா காத்திருந்தார். ஏன் தெரியுமா?
அன்னையின் அற்புதம்
‘‘எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒருத்தி +2. சின்னவ 5வது படிக்கறா. வீட்டுக்காரர் ஆடிட்டிங் கன்சல்டல்டன்சி வச்சிருக்கார். வருமானத்துக்கெல்லாம் குறைவே இல்லை. ஆனால், வீட்டில் எப்பொழுதும் நிறைவில்லாத மாதிரி ஒரு உணர்வு. பிள்ளைங்க ரெண்டு பேரும் ரொம்ப பிடிவாதமா இருப்பாங்க. அவரை ஹிட்லர்னு கூப்பிடும் அளவுக்கு மூணு பேருக்கும் அப்படி ஒரு பொருத்தம். என்ன செய்யறதுன்னே தெரியாத நேரத்துல அரவிந்த அன்னை சொல்லி இருக்கும் முறைப்படி வீட்டை சுத்தம் செய்தால் எல்லா சுபிட்ஷமும் கிடைக்கும்னு அன்னை அடிகள் சொன்னார்.
கூடவே, வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அன்னை சொல்லியுள்ள புத்தகத்தை வாசித்துக் காட்டினார். அதன்படியே வீட்டை சுத்தம் செய்தேன். ஒவ்வொரு அறையையும் அணு அணுவாய் துடைத்தெடுத்தேன். வேண்டாததை வெளியேற்றினேன். வீடு சுத்தமாக 5 நாள் ஆனது. ஆறாவது நாள் அரவிந்த அன்னையின் படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்தேன். என் வீட்டில் அரவிந்தரும் அன்னையும் பூரணமாய் குடிகொண்டதை உணர்ந்தேன்.
வீடே தெய்வீகமானது. வீட்டில் இருக்கும் அத்தனை பேரிடமும் ஒரு இனம் புரியாத அமைதி வந்துவிட்டது. என் வீட்டுக்காரருக்கு தொழில் ரீதியாக நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தானாக திரும்ப வந்தது. பிள்ளைகள் ஒழுங்காகப் படிக்கிறார்கள். சுத்தம் சோறு போடும் என்பது உண்மை. அன்னை சொன்னபடி வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால் அவரே மகாலட்சுமியாக அருள்வார் என்பது உண்மை!’’ என நெகிழும் உஷா பாஸ்கரன், சென்னை, அசோக் நகரில் வசிக்கிறார்.
வரம் தரும் மலர்!
சினிமாவில் சாதிக்க உதவும் சம்பங்கி பூ
யாருக்கு படைப்பாற்றல் வேண்டும்? அனைவருக்கும்தான். படைப்பாற்றல் இருந்தால்தான் செய்யும் எந்தச் செயலும் சிறப்பாக வரும். ஒரு மெக்கானிக்கல் என்ஜினியர் படைப்பாற்றல் மிக்கவராக இருந்தால் புதிய கார் கண்டுபிடிப்பார். சிவில் என்ஜினியர் புதிய கட்டடக் கலையை உருவாக்குவார். சினிமா, பத்திரிகை என கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் அவசியம். இந்த படைப்பாற்றலை அதிகம் பெற, அருள்கிறாள் அரவிந்த அன்னை. சம்பங்கி மலரை அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, கிரியேட்டிவிட்டி பவர் அதிகரிக்கும். வெற்றிகள் எளிதாகும்!
(பூ மலரும்...)
எஸ்.ஆர்.செந்தில்குமார்
ஓவியம்: மணியம் செல்வன்