என் வள்ளிக்கண்ணு மரணத்துக்குப் பிறகும் நாலு பேருக்கு உதவப் போறா...



அம்மா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டாங்க. மருத்துவ மாணவர்கள் சோதனை செய்ய போதிய அளவுக்கு உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு செய்தியைப் படிச்சுட்டு, அப்பாவை அழைச்சிக்கிட்டுப் போய் உடல் தானத்துக்குப் பதிவு பண்ணிட்டு வந்தாங்க. ‘ஏம்மா இதெல்லாம்’னு கேட்டப்போ, ‘வீணா சாம்பலாகிற உடம்பு... யாருக்காவது உபயோகமா இருக்கட்டும்’னு சொன்னாங்க. ஆனா இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுட்டுப் போவாங்கன்னு நினைக்கல...’’

- சரண்யாவைப் பேச விடாமல் அழுகை இடை மறிக்கிறது. அருகில் அமர்ந்திருக்கிற அருவி, அக்காவின் கண்ணீரைத் துடைக்கிறாள். தன் மனைவி வள்ளிக்கண்ணுவின் புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு மகள்களைப் பார்த்துக் கலங்குகிறார் கண்ணன்.  கண்ணன்-வள்ளிக்கண்ணுவைத் தெரியாத தமிழ் தேசிய உணர்வாளர்கள் இருக்க முடியாது. ஈழ விடுதலை முதல், காவிரி மீட்புப் போராட்டம் வரை எல்லாவற்றிலும் குழந்தைகள் சகிதமாக வந்து கொடி பிடித்து குரல் எழுப்பும் உணர்வுபூர்வமான தம்பதி. பெ.மணியரசன் நடத்தும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தீவிர உறுப்பினர்கள். கடந்த வாரம் தம் இளைய மகளை பள்ளியில் விடச்சென்ற வள்ளிக்கண்ணு, வழியிலேயே மாரடைப்பால் இறந்தார்.

எளிய குடும்பம். கண்ணன் ஒரு உணவகத்தில் சமையலராக இருக்கிறார். சரண்யா +2 படிக்கிறார். முகத்தில் பொறுப்பும் தெளிவும் இழையோடுகிறது. பள்ளியில் முதல் மாணவி. அருவிக்கு 8 வயது. இழப்பின் துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை அந்த வீடு.‘‘எனக்கு சொந்த ஊர் தேனி. அம்பத்தூர்ல ஒரு கேட்டரிங்ல வேலை செஞ்சப்போதான் வள்ளிக்கண்ணு அறிமுகமானா. ரெண்டு பேரும் விரும்பி திருமணம் செஞ்சுக்கிட்டோம். ஆனா குடும்பங்கள் அங்கீகரிக்கல. மகிழ்ச்சி, துயரம் எதுவா இருந்தாலும் இயல்பா பகிர்ந்து வாழப் பழகிட்டோம்.

நான் தமிழ்த்தேசியவாதி. வள்ளியும் கருத்து இணைஞ்சவளா இருந்தா. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தப்போ ரெண்டு பேரும் ராத்திரி பகலா அழுதுக்கிட்டு கிடந்திருக்கோம். முத்துக்குமாரோட மரணம்தான் எங்களை களத்துக்கு வர வச்சுச்சு. கொளத்தூர்ல அவனோட உடல் வைக்கப்பட்டிருந்ததில இருந்து தகனம் வரைக்கும் நானும் வள்ளியும் குழந்தைகளோட அவன் கூடவே இருந்தோம். அங்கேதான் தமிழ்த் தேசிய பேரியக்கத்தோட தொடர்பு கிடைச்சுச்சு. அதுக்குப் பிறகு போராட்டம், பிரசாரம்னு எது நடந்தாலும் குடும்பத்தோட களத்துல இருப்போம்.

மேகதாது அணைக்கு எதிரா கர்நாடக எல்லைப் பகுதியில நடந்ததுதான், வள்ளிக்கண்ணு கலந்துக்கிட்ட கடைசிப் போராட்டம். நான் திருச்சி பகுதி தோழர்களை ஒருங்கிணைச்சுக்கிட்டு வந்தேன். அவ சென்னை தோழர்களோட வந்தா. ரெண்டு பேரும் ஆளுக்கொரு பகுதியில கைதானோம். மூத்த மகள் சரண்யாவும் அம்மா மாதிரிதான். ரொம்பத் தெளிவான பொண்ணு. இயக்க மேடைகள்ல பேசுற அளவுக்கு அரசியல் தெரிஞ்சவ. அவளை எப்படியும் மருத்துவராக்கிட ஆசை.

வள்ளிக்கண்ணு ரொம்பவே உற்சாகப்படுத்தி வளர்த்தா. ஏதோ ஒரு உந்துதல்ல உடல் தானத்துக்கும் பதிவு பண்ணினா. நல்ல உழைப்பாளி. முகத்தில சோர்வைக் காட்டவே மாட்டா. உடம்புக்கு முடியலன்னு ஒருநாள் கூட படுத்ததில்லை. அருவியை பள்ளியில விடப் போனவ... திடீர்னு மயக்கம் வருதுன்னு ஓரிடத்தில உக்காந்திருக்கா. அருவி அழுதுக்கிட்டே போன் பண்ணிச் சொன்னா. மருத்துவமனைக்குத் தூக்கிட்டு ஓடினேன். காப்பாத்த முடியலே. மாரடைப்பா இருக்கலாம்னு சொன்னாங்க. 37 வயசுதான்... அடுத்து என்னன்னு தீர்மானிக்க முடியாம எங்களை ஸ்தம்பிச்சு நிக்க வச்சுட்டா. இதோ இந்தத் தோழர்களும் அவங்க குடும்பங்களும்தான் இப்போ ஆதரவா நிக்கிறாங்க.

வள்ளிக்கண்ணு உடம்பை தானமா கொடுக்க விரும்பினாள்னு உறவுக்காரங்க கிட்ட சொன்னப்போ யாரும் ஏத்துக்கலே. ‘சடங்கு, சாங்கியம்னு நிறைய இருக்கு. மரபுல இல்லாத ஒண்ணை புதுசா செய்ய முடியாது’ன்னு உறுதியா சொல்லிட்டாங்க. சரண்யாதான் எல்லார்கிட்டயும் பேசினா. ‘இது எங்க அம்மாவோட ஆசை. காலம் முழுவதும் அவங்க நிலைச்சிருக்கணும்’னு அவ சொன்னதை எல்லாரும் ஏத்துக்கிட்டு சம்மதிச்சாங்க. என் வள்ளிக்கண்ணு அவ நினைச்சது மாதிரியே மரணத்துக்குப் பிறகும் நாலு பேருக்கு உதவப் போறா... அந்த எண்ணம்தான் துயரத்துக்கு மருந்தா இருக்கு’’ - கலங்கிப் பேசுகிறார் கண்ணன்.

‘‘அம்மாதான் எனக்கு முன்மாதிரி. சமூகம், இனம், மொழி பற்றியெல்லாம் நிறைய பேசுவாங்க. ராத்திரி நெடுநேரம் நாங்க பேசிக்கிட்டிருப்போம். பிரபாகரன், முத்துக்குமார், செங்கொடி பத்தியெல்லாம் சொல்வாங்க. இனிமே அது எங்களுக்குக் கிடைக்காது. அம்மா கனவு கண்ட மாதிரி மருத்துவராகணும். அப்பாவையும், அருவியையும் பாத்துக்கணும். இயக்கத்துலயும் வேலை செய்யணும். அம்மா எப்பவும் எங்களைச் சுத்தி பாதுகாப்பா இருப்பாங்க...’’ - கண்கள் அரும்பச் சொல்கிறார் சரண்யா.இதயம் கனக்கிறது நமக்கு!

வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்