‘‘அம்மா... நானும் காயத்ரியும் கொஞ்ச நாளைக்கு தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கோம்!’’ - தீபக் சொன்னதும் கஸ்தூரி நெஞ்சில் இடியே விழுந்தது.கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. ‘புது மருமகள் அன்பாய் நடக்கிறாள், என்னை எந்த வேலையும் செய்யவிடாமல் எல்லா வேலைகளையும் தானே செய்கிறாள்’ என கஸ்தூரி ஊரெல்லாம் சொல்லித் திரிந்தாள். அப்படிப்பட்ட மருமகளா இப்படி குடும்பத்தைப் பிரிக்க மகனைத் தூண்டி விட்டிருக்கிறாள்!
ஆதங்கத்தில் கஸ்தூரி கண்ணீர் வடித்தபோது, சரியாக அங்கு வந்தாள் காயத்ரி.‘‘ஏம்மா, உனக்கு என்ன குறை வச்சோம் இந்த வீட்டுல? நீதானே எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செஞ்சே? நாங்க ஒண்ணும் கொடுமைப்படுத்தலையே!’’ - மருமக ளிடம் பரிதாபமாகக் கேட்டாள்
கஸ்தூரி.
‘‘அதெல்லாம் இல்ல அத்தே... நம்ம வீட்டுப்பொண்ணு கீர்த்தனாவோட கணவர் துபாய்ல இருக்கார். அதனால அவ நம்ம வீட்லயே இருக்கா. என்னதான் வெளியே காட்டிக்கலைன்னாலும் புதுசா கல்யாணமான எங்களை பக்கத்தில் இருந்து பார்க்க அவளுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். அவ மனசு சங்கடப்படக் கூடாதுன்னுதான் இந்த முடிவை எடுத்தோம். அவ கணவர் நாடு திரும்பின உடனே நாங்களும் இங்கேயே வந்துடுவோம்!’’ என்றாள் காயத்ரி.தன் மருமகளை எண்ணிப் பெருமைப்பட்டாள் கஸ்தூரி.
து.செல்வராஜு